பயாஸ்கோப் – விமர்சனம்

நடிப்பு: ராஜ்குமார், வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ்.எம்.மாணிக்கம், இந்திராணி, எஸ்.எம்.செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, மோகனபிரியா, தங்கராசு, தர்மசெல்வன், நமச்சிவாயம், ராஜேஷ்கிருஷ்ணன், ரஞ்சித், நிலா மற்றும் பலர்

இயக்கம்: சங்ககிரி ராஜ்குமார்

ஒளிப்பதிவு: முரளி கணேஷ்

இசை: தாஜ்நூர்

தயாரிப்பு: ’25 டாட்ஸ் கிரியேஷன்ஸ்’ சந்திரசூரியன், பிரபு, பெரியசாமி

ஓடிடி தளம்: ஆஹா

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில், முழுக்க முழுக்க கிராமத்து மக்களின் பங்களிப்பில் உருவாகி 2011-ல் வெளியான திரைப்படம் ‘வெங்காயம்’. இப்படம் சிறந்த கதையம்சத்துக்காக திரையுலகினரை வெகுவாகக் கவர்ந்தது. விமர்சகர்கள் பாராட்டினார்கள். ஆனால் வியாபார ரீதியாக அது தோல்வி அடைந்தது.

‘வெங்காயம்’ திரைக்கு வந்து சுமார் 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்று அப்படம் எப்படி உருவானது என்ற உண்மை சம்பவப் பின்னணியே இந்த ‘பயாஸ்கோப்’ படத்தின் கதை. அதாவது, ‘பயாஸ்கோப் – மேக்கிங் ஆஃப் ‘வெங்காயம்’ என்று கூட இதைச் சொல்லலாம். திரையுலகிற்கு சிறிதும் பரிச்சயமில்லாதவர்களைக் கொண்டு, அப்படம் எடுப்பதற்காக வீடு, நிலம், ஆடு, மாடு என அனைத்தையும் விற்று, குடும்பத்தினரை நிர்கதியாக நிற்க வைத்தது முதல் அனைத்து நிகழ்வுகளையும், வலிகளையும் கலகலப்பாகவும், நெகிழ்ச்சியாகவும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சொல்லியிருப்பது தான் ‘பயாஸ்கோப்’. ஒரு படம் எடுத்ததைப் பற்றியே இப்படி ஒரு படம் எடுப்பது தமிழ் சினிமாவில் புத்தம் புது முதல் முயற்சி.

கதையின் நாயகன் ராசா (சங்ககிரி ராஜ்குமார்) ஒரு பட்டதாரி. அவரது அம்மா தனது கணவரின் தம்பியின் (அதாவது ராசாவினுடைய சித்தப்பாவின்) ஜாதகத்தை எடுத்துக் கொண்டுபோய், போலி சாமியார் ஒருவரிடம் காட்டி, ஜாதகம் பார்க்கிறார். அந்த போலி சாமியாரோ “இந்த ஜாதகக்காரர் பிச்சை எடுப்பார்” என்று கூறிவிடுகிறார். அதை கேட்ட ராசாவின் சித்தப்பா இறந்துவிடுகிறார். இதுபோல் எந்த உயிரும் போகக் கூடாது என்று எண்ணிய ராசா, ஜோதிடத்தை உண்மை என்று நம்பி தற்கொலை செய்துகொள்வது, சக்தி பெற குழந்தையை நரபலி கொடுப்பது போன்ற மூட நம்பிக்கைகளை மையமாக வைத்து ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட வேண்டும் என்று விரும்புகிறார். தன் குடும்பத்தில் இருப்பவர்களையும், சொந்த கிராமத்தினரையும் நடிப்புக் கலைஞர்களாகவும், தொழில்நுட்பக் கலைஞர்களாகவும் வைத்து படம் எடுக்க முயற்சி செய்கிறார். அவரது முயற்சிக்கு உள்ளூர் ஜோதிடர் இடையூறுகள் செய்து முட்டுக்கட்டை போடுகிறார். படமெடுக்கும் இலட்சியத்தில் ராசா வென்றாரா, இல்லையா? என்பது தான் ‘பயாஸ்கோப்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் ராசாவாக வரும் சங்ககிரி ராஜ்குமார் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை சினிமாத்தனம் இல்லாமல் வழங்கி உள்ளார். படத்தை முடிக்க நிலத்தை அடமானம் வைப்பது, எடுத்த படத்தை வியாபாரம் செய்ய அலைவது, இறுதியில் தனது படத்தின் தாக்கத்தால் நடந்த திருமணத்தை பார்த்து நெகிழ்ந்து கண்ணீர் வடிப்பது என்று அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிறைகிறார்.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பாட்டிகள் வெள்ளையம்மாள், முத்தாயி, தாத்தாக்கள் முத்துசாமி, குப்புசாமி, அப்பா வேடத்தில் நடித்திருக்கும் எஸ்.எம்.மாணிக்கம், அம்மாவாக நடித்திருக்கும் இந்திராணி, தம்பிகளாக நடித்திருக்கும் எஸ்.எம்.செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, தங்கை பாப்பாவாக நடித்திருக்கும் மோகனபிரியா, ஜோதிடராக நடித்திருக்கும் தங்கராசு, திரைப்பட தயாரிப்பாளராக நடித்திருக்கும் தர்மசெல்வன், குவாரி முதலாளியாக நடித்திருக்கும் நமச்சிவாயம், நண்பராக நடித்திருக்கும் ராஜேஷ்கிருஷ்ணன், இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கும் ரஞ்சித், ஹீரோயினாக நடித்திருக்கும் நிலா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், இந்த மண்ணின் மைந்தர்களின் நடிப்பு நெகிழ வைக்கிறது.

சங்ககிரி ராஜ்குமாருக்கு பேருதவி செய்த இயக்குநர் சேரன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்த நடிகர் சத்யராஜ் ஆகிய இருவரின் திரை இருப்பு படத்துக்கு பலம் சேர்க்கும் வகையிலும், நம்பிக்கை கொடுக்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது.

திரையுலகிற்கு சிறிதும் பரிச்சயமில்லாத கிராமத்து மனிதர்களை வைத்துக் கொண்டு சுவாரசியமாக இப்படத்தைக் கொடுத்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதோடு, படம் எடுத்த அனுபவத்தையே ஒரு திரைப்படமாக எடுக்கலாம் என்ற புதிய பாதையை உருவாக்கியிருக்கிறார். அதற்காகவும் அவரை பாராட்டலாம். மேலும். மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுத்து தன்னை சமூகப் பொறுப்புள்ள இயக்குனராகவும் வெளிப்படுத்தி உள்ளார் இயக்குனர் ராஜ்குமார். வாழ்த்துகள்.

ஒளிப்பதிவாளர் முரளி கணேஷின் கேமரா கிராமத்தின் வாழ்வியலை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. இசையமைப்பாளர் தாஜ்நூர் கதைக்கு தேவையான அளவில் இசையமைத்து பலம் சேர்த்துள்ளார்.

’பயாஸ்கோப்’ – அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய படம்!