ஆரவ் மீதான ஓவியா காதல்: ஊதி ஊதி பெரியதாக்கியது யார்?
எந்தவித சொந்தபந்தமும் இல்லாத ஒரு மான். ஆண் மானின் அன்பையே பார்க்காத மான். அன்பை தேடிதான் அந்த காட்டிற்கே வந்திருக்கிறது. வந்து பார்த்தபோது, அந்த காட்டில் நரிகள் தான் நாட்டாமை செய்துகொண்டிருக்கிறது.
இரண்டு வழிகள் மட்டுமே இருக்கிறது.
ஒன்று, நரிகளிடம் எந்த வம்பும் வைக்காமல் ஒதுங்கி வாழ வேண்டும். இல்லை, அந்த நரிகளின் பேச்சுக்கு தலையை ஆட்டி அவர்களின் காலை நக்கி பிழைக்க வேண்டும்.
மற்றொன்று, அவர்களை எதிர்த்து சுயமரியாதையுடன் வாழ வேண்டும்.
தூய்மையான அன்பிற்கு ஏங்கும் அந்த சின்ன மான் என்ன செய்ய முடியும்?
ஆனாலும், அந்த நரிகள் கூட்டத்தில் தானும் நரியாக மாறாமல் அவள் அவளாகவே இருந்ததால், அது அந்த நரிகளுக்கு பிடிக்காமல் போனதில் வியப்பில்லை.
அப்பொழுது ஒரு சின்ன எ(ஜூ)லியை அந்த நரிகள் கடித்து குதிறியதை அந்த மானால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த எலிக்கு ஆறுதல் சொல்லி, அவள் கண்ணீரை துடைத்து, அந்த எலியை தோள்மீது சாய்த்து சமாதானப்படுத்தியது அந்த மான்.
இந்த நரிகள் வாழும் குடும்பத்தில் அந்த எலியிடமாவது அன்பை பெற வேண்டும் என்று ஏங்கியது அந்த மான். அதில் கவனிக்க வேண்டியது, அந்த சூழலிலும் அந்த மான் எந்த நரியைப் பற்றியும் புறம்பேசவில்லை. அது அந்த மானின் இயல்பும் அல்ல.
ஆனால் தலைமை நரி வந்து அந்த எலியை மிரட்டியவுடன், நரியின் காலை நக்கிப் பிழைக்கும் அந்த எலி பச்சோந்தியாக மாறி அந்த மானின் மீதே பழிபோட்டு, அந்த நரிகளின் கூட்டத்தில் நயவஞ்சகமாக பதுங்கி கொண்டது.
பச்சோந்தியின் துரோகம் தெரியவரும்போது அசரவில்லை அந்த மான். பச்சோந்தியையே பதம் பார்த்தது அந்த மான்.
அப்போது வந்தது அந்த மானிற்கு ஆதரவாக ஒரு ஆ(ரவ்)ண் மான். தூய்மையான அன்பிற்கு ஏங்கும் இந்த மானிற்கு எப்படி இருந்திருக்கும் என்று அந்த மானின் தன்மையில் இருந்து யோசித்து பாருங்கள்.
காதல் என்பது வார்த்தையால் சொல்வது மட்டுமல்ல, உடல் மொழியாலும் உறுதிப்படுத்தாலாம்.
அப்படி உடல் மொழியால் உறுதிபடுத்தியது அந்த மான். அதுமட்டுமல்ல, கூட இருந்த மற்ற எல்லா உயிரினங்களும் அந்த மான்களிடையே ஜாடை பேசி காதலை வளர்த்துவிட்டதில் பங்குண்டு.
அந்த காட்டை வாரம் ஒருமுறை வந்து கண்காணிக்கும் தலைமை சிங்கமும் தனக்கே உரிய பாணியில் எண்ணை ஊற்றி வளர்த்ததில் பங்குண்டு.
அதன் காரணமாக, அந்த மான் மனதில் ஆசையை வளர்த்துக்கொண்டது. அது இல்லை என்றானபோது அன்பிற்கு ஏங்கும் அந்த மானின் நிலையை யோசித்து பாருங்கள்…
பல நரிகள் தன்னை சுற்றி வட்டமிட்டபோதும் அசராது எதிர்த்த அந்த மான், காதல் இல்லை என்றவுடன் உடைந்து போனது. கண்கலங்கியது. கலக்கமுற்றது.
ஆனால் உடைந்து போகாது அந்த மான். வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களைப் பார்த்த மான் அது. வீழ்ந்து விடாது. ஓவியமாய் மீண்டும் எழும்…!
SURYA KUMAR