’போன் கால்’ மூலம் ரூ.17.5 லட்சத்தை பறி கொடுத்த ‘பிக்பாஸ்’ போட்டியாளர் சௌந்தர்யா: குற்றம் – நடந்தது என்ன?

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’பிக் பாஸ் தமிழ் சீசன் 8’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் மாடலிங் மற்றும் சின்னத்திரை நடிகை சௌந்தர்யா, “நான் 8 ஆண்டுகளாக சம்பாதித்து சேமித்து வைத்திருந்த என்னுடைய பதினேழரை லட்சம் ரூபாயை, சமீபத்தில் ஒரு போன் காலில் நடந்த சைபர் கிரைம் மோசடி மூலம் இழந்துவிட்டேன்” என்ற திடுக்கிடும் அதிர்ச்சித் தகவலை நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார்.

சௌந்தர்யா முதன்முதலாக நிகழ்ச்சியின் ஆங்கரும், நடிகருமான
விஜய் சேதுபதியின் முன்பு தன்னைப் பற்றி அறிமுகம் செய்யும்போது, ”நான் மாடலாக இருக்கிறேன். ஆனால் என்னுடைய குரலுக்காக நான் பல இடங்களில் அவமானத்தைச் சந்தித்திருக்கிறேன். அதற்காக நான் மிமிக்ரி செய்வது போன்று தான் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்று அவருடைய வேதனையை பற்றி பேசி இருந்தார். அதற்கு விஜய் சேதுபதி ”உங்களுடைய நிஜக் குரலே அருமையாக இருக்கிறது” என்று அவரை பாராட்டி நிகழ்ச்சிக்கு அனுப்பி இருந்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதுமே சௌந்தரியாவிடம் தர்ஷிகா ”பொம்பள வாய்ஸில் பேசு. என்ன குரல் இது?” என்று கேட்டது பெரும் விமர்சனத்தைச் சந்தித்தது.

இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளகள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைக் கதையைச் சுருக்கமாக நிகழ்ச்சியில் சொல்ல வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி சௌந்தர்யா தன் வாழ்க்கைக் கதையை கூறிக்கொண்டே வருகையில், “நான் 8 ஆண்டுகளாக சம்பாதித்து சேமித்து வைத்திருந்த என்னுடைய பதினேழரை லட்சம் ரூபாயை, சமீபத்தில் ஒரு போன் காலில் நடந்த சைபர் கிரைம் மோசடி மூலம் இழந்துவிட்டேன்” என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

 இந்த மோசடி எப்படி நடந்தது என்பது தொடர்பான விவரங்கள், போலீசில் பதியப்பட்ட எப்.ஐ.ஆர் அடிப்படையில் வெளியாகியுள்ளன. அது வருமாறு:

சவுந்தர்யா கடந்த ஆகஸ்டு மாதம் 27ஆம் தேதி சூளைமேட்டில் உள்ள தனது வீட்டில் இருக்கும்போது, அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது…

FedEx கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், மும்பையில் இருந்து ஈரானுக்கு தங்கள் பெயரில் அனுப்பப்பட்ட பார்சலில் பாஸ்போட்டுகள் மற்றும் MDMA போதைப் பொருள் உள்ளிட்டவை இருப்பதாகவும், அது தற்போது ரிட்டன் வந்துள்ளதால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதாகவும் ராகேஷ் சர்மா என்பவர் பேசியுள்ளார்.

இதையடுத்து, ’மும்பை சிபிஐ அதிகாரி’ என பேசிய நபர், சௌந்தர்யாவை ஸ்கைப் கால் மூலமாக “டிஜிட்டல் அரெஸ்ட்” செய்திருப்பதாகச் சொல்லி விசாரணை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, போதைப் பொருள் பார்சல் அனுப்பியிருந்தீர்களா? எனவும், நீங்கள் சம்பாதித்து வங்கியில் வைத்திருக்கிற பணம் இது போன்று போதைப் பொருள் பரிமாற்றத்தில் பெற்றதா? எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை என்ற பெயரில் மிரட்டியுள்ளார்.

இது குறித்து சௌந்தர்யா தொலைபேசியில் ’சிபிஐ அதிகாரி’ என பேசியவரிடம் விளக்கம் கேட்டபோது, சிபிஐ வழக்கு தொடர்பான ஆவணத்தையும் ஆர்பிஐ ஆவணத்தையும் சௌந்தர்யாவிற்கு whatsapp-ல் அனுப்பி உள்ளனர். இதைக் கண்டு உண்மை என நம்பி பயந்த சௌந்தர்யா, 12 பணப் பரிவர்த்தனை மூலமாக ரூ 17.5 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். ”சட்டவிரோத பணம் இல்லை என்றால், ஆய்வு செய்துவிட்டு, தாங்கள் தெரிவித்த உங்கள் வங்கிக் கணக்கிற்கு உங்கள் பணத்தை திருப்பி அனுப்பிவிடுவோம்” என்று சிபிஐ அதிகாரி போல் பேசியவர் கூறியதால் பணத்தை சௌந்தர்யா அனுப்பியுள்ளார்.

ஆனால், பணம் திரும்பி வராததால் விசாரணை செய்ததில், சௌந்தர்யா தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தேசிய சைபர் கிரைம் போர்டலுக்கு புகார் அளித்த பிறகு, சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் பிரிவு போலீசார், கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சௌந்தர்யா அனுப்பிய பணம் மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், மும்பை ,அஸ்ஸாம், மைசூர், போபால் என பல்வேறு இடங்களில் ஒன்பது வங்கிக் கணக்குகளுக்கு சென்றடைந்தது தெரிய வந்துள்ளது. வழக்கமாக ஒரே ஒரு வங்கிக் கணக்கில் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்யச் சொல்லும் சைபர் க்ரைம் மோசடி கும்பல், இந்த விவகாரத்தில் ஒன்பது வங்கிக் கணக்கை கொடுத்து பணப் பரிவர்த்தனை செய்யச் சொன்னது மோசடியில் புதுவிதமாக இருப்பதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஒருமாத காலமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது பல கோடி பேர் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சைபர் க்ரைம் மோசடி குறித்து தெரிவித்த காரணத்தினால் பொதுமக்கள் விழிப்படைவதற்கு சௌந்தர்யா ஒரு விதத்தில் உதவி உள்ளதாகவும், சௌந்தர்யாவின் கருத்துக்கு சென்னை காவல்துறை நன்றியும் வரவேற்பும் தெரிவித்துள்ளது.