காதல் அல்ல, சீண்டப்பட்ட மிருகத்தின் கோபம் தான் தெரிந்தது ஓவியாவிடம்!
“Actually I can relate to Arav. ஓவியா செய்வதெல்லாம் ரொம்ப ஓவர்!” என ஓவியாவை விமர்சித்து போட்ட நேற்றைய பதிவுக்கு கொலை மிரட்டல்கள் வராததுதான் மிச்சம். பல பின்னூட்டங்கள். பல தனிப்பதிவுகள். பலர் பிரத்யேகமாக பின்னணியில் நிறம் மாற்றி எழுத்தை மொந்தையாக போடும் நிலைத்தகவல்களை கூட எனக்காக அர்ப்பணித்திருந்தார்கள். குண்டாஸ் ஆக்ட்டில் கைதுதான் பாக்கி.
நேற்று ஓவியா செய்ததையே ஆரவ் செய்திருந்தால் நாமெல்லாம் எப்படி ரியாக்ட் செய்திருப்போம் என்ற ஆண், பெண் விளையாட்டுக்குள் போக வேண்டாம். ஏற்கனவே அதை பலர் பேசி இருக்கிறார்கள். போக வேண்டாம் என்பதால் அது பேசப்பட வேண்டிய கோணம் அல்ல என்று பொருளல்ல. அதை விடுத்து உறவு, மனம், சமூகம் போன்ற நிலைகளில் இருந்து சற்று யோசிப்போம்.
முதலில் சில தெளிவுகள்:
- ஓவியா உங்களையும் என்னையும் போல் ஒரு சராசரி human being. அப்பழுக்கற்றவர் எல்லாம் இல்லை. நம்மை போலவே அவரும் பல குறைகளும் பல புரிதலின்மைகளும் கொண்டவர்தான்.
- கமலுக்கே ரசிகனாக நான் இருந்தாலும் தவறு என்றால் தவறு என சொல்பவன் நான். எனக்கு தலைவனாக இருப்பவன் ‘வானுக்கு கீழ் உள்ள அனைத்தையும் விமர்சிக்கலாம்; கடவுள் உட்பட’ என்றவன். ஓவியாவும் வானுக்கு கீழ்தான் இருக்கிறார்.
இனி விஷயத்துக்கு வருவோம்.
ஆரவ் ஓவியாவை தவிர்க்கிறார். ஓவியா ஆரவ்வை விரும்புவதாகவே வைத்துக்கொண்டாலும் கேட்டு பார்க்கிறார். சொல்லி பார்க்கிறார். அழுது பார்க்கிறார். கடைசியில் உச்சக்கட்டமாக exhibit செய்கிறார். எல்லார் முன்னும் ஆரவ்வை ஈஷுவது. ஊட்டிவிட முயற்சிப்பது, முத்தம் கொடுக்க வருவது, கட்டிப்பிடிக்க சொல்வது என பலவற்றை செய்கிறார். இதில் காதல் என்பதைவிட ஆரவ்வை irritate செய்து பொறுமையின் எல்லைக்கு தள்ளி வெடித்து கத்த வைப்பதற்கான முனைப்புதான் தெரிந்தது.
‘அப்படியெல்லாம் இல்லை’ என சொல்பவர்கள் ஆரவ், ஷக்தி, சிநேகன் மூவரும் அமர்ந்திருக்கும் காட்சியில், ஓவியா உரசுவதை தவிர்க்க, ஆரவ் கிளம்பியதும் ஓவியா கொடுத்த ரியாக்ஷனை பாருங்கள். கோபத்துடன் கையை தட்டுகிறார். மேஜையை தட்டுகிறார். ஷக்தியின் முகத்துக்கு நேராக வேண்டுமென்றே கை தட்டி எரிச்சலூட்ட முற்படுகிறார். அங்கு காதல் எல்லாம் தெரியவில்லை. தோற்றுப்போனவனின் வஞ்சமும் சீண்டப்பட்ட மிருகத்தின் கோபமும்தான் தெரிந்தது.
பொது இடங்களில் காதலை காண்பிப்பது தவறா? நிச்சயமாக இல்லை. ஆனால் யாருடனான காதல்? அது ஏற்கப்பட்ட காதலா?
காதல் நிராகரிக்கப்படும் உணர்வு வலி, வஞ்சம், கோபம் என எல்லா உணர்வு நிலைகளையும் தானே கொடுக்கும்? ஆம். ஆனால் அந்த உணர்வு நிலைகளை ஏற்றுக்கொண்டுதான் செயல்பட போகிறோமா என்பதுதான் என் கேள்வி.
உறவு என்பது இரண்டு பேர் சம்பந்தப்பட்டது. அதை ஒருவராக உடைக்கவும் முடியாது. சேர்த்து கொள்ளவும் முடியாது. விலகுதலும் நெருங்குதலும் தான் உறவே. ஓவியா ஆரவ்விடம் செய்வது காதலாகவே இருந்தாலும், வேண்டாம் என நிராகரிக்கும் ஆரவ்வை தேடி ஓவியா போவது சரியா? நம் பொதுப்புத்தி அதைத்தான் எதிர்பார்க்கிறது. சிக்கல் என்னவென தெரிகிறதா? வேண்டாம் என்பவனை தேடி போகும் ஓவியாவை ‘சரிதான்… அப்படித்தான் செய்ய வேண்டும்’ என சொல்லி கொண்டிருக்கிறோம். நாம் கொடுக்கும் அழுத்தத்தால் ஆரவ் ஓவியாவை ஏற்றுக்கொண்டாலும் ஓவியா சந்தோஷமாக இருப்பாரா? அப்போது ஆரவ் அடிபட்ட மிருகமாக இருப்பார்தானே!
அடுத்ததாக முத்தம். ‘ஆரவ் ஓவியாவுக்கு முத்தம் எல்லாம் கொடுத்துவிட்டு, இப்போது கமிட் ஆக சொல்லும்போது தப்பிக்க பார்க்கிறார்’ என ஒரு குற்றச்சாட்டு. முத்தம் கொடுத்துவிட்டால் காதலிக்க வேண்டுமா? இது கோபமூட்டும் வாதமாக இருக்கலாம். ஆனால் இதையேதான் கொஞ்ச காலத்துக்கு முன்னாடி தாடிக்கார கிழவர் ஒருவர் கேட்டார். அந்த குரலின் நீட்சிதான் என் குரல். கற்பே கற்பிதம் என சொல்லி கொண்டிருக்கையில், முத்தத்தை கற்பிதம் ஆக்குவது என்ன முற்போக்கு?
‘முத்தமே கொடுத்தாலும் அவன் உன்னை மதிக்கவில்லை. கெஞ்சி கொண்டிருக்காதே. சுயமரியாதை கொண்டு உன் வழியை பார்த்து நீ செல்’ என்பதுதானே முற்போக்காக இருக்க முடியும்? வன்புணர்வந்தவனுக்கே பாதிக்கப்பட்டவளை மணம் முடிக்க சொல்லும் பஞ்சாயத்து தீர்ப்புகள் போல்தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என புரிகிறதா?
நம்ப வைத்து ஏமாற்றி செல்பவனை அப்படியே விட்டுவிடலாமா? தண்டனையே கிடையாதா? கொடுக்க வேண்டும். நிச்சயம் விட்டுவிட முடியாது. அவனை அம்பலப்படுத்துங்கள். மற்ற பெண்களை எச்சரியுங்கள். முடிந்தால் விலகிவிட்டு அவன் தப்பை அவனிடம் பேசி உணர்த்துங்கள். அவன் கொண்டிருப்பது ஓர் அகச்சிக்கல். அங்கு பழிவாங்கலும் வஞ்சமும் அவனை அழிக்கவே செய்யும்.
கெட்டவனாகவே இருந்தாலும் ஆரவ்வுக்கு ஓவியாவின் நேற்றைய நடத்தை எரிச்சல் கொடுக்கும். மன உளைச்சல் கொடுக்கும். அந்த உணர்வுகள் எதையும் அவர் வெளிக்காட்டவும் முடியவில்லை. எல்லாவற்றையும் அவர் தனக்குள்ளேயே அடக்கி கொள்கிறார். இங்கே நான் சொல்லும் ‘அவன்’, அவளாகவும் இருக்கலாம். அவன் என்பதால்தான் நான் இப்படி பேசுகிறேன் என்பவர்கள் படிப்பதை நிறுத்திவிட்டு தயவுசெய்து வேறு பதிவுகளுக்கு சென்றுவிடுங்கள்.
சுலபமாக ஒரு கேள்வி கேட்கிறேன். நாமும் ஆரவ்வை குற்றம் சொல்கிறோம். ஓவியாவும் அங்கே அவரை அவமானப்படுத்துகிறார். இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் அவரின் காதலி அவருடனான உறவை என்னவாக்க போகிறார் என்றும் தெரியவில்லை. இவற்றை எல்லாம் தாங்க முடியாமல் அவன் தற்கொலை செய்துகொண்டால் என்ன செய்வோம்?
இதில் வையாபுரியின் பொங்கல் வேறு. அவரின் கோபத்தை நம்மவர்களே சிலாகிக்கவும் செய்கிறார்கள். ஒரு பிற்போக்கான நாட்டுப்புறத்தானை அச்சு அசலாக வையாபுரி பிரதிபலிக்கிறார். ‘எனக்கு ஒரு பொண்ணு இருக்கு. நான் உனக்குதான்மா சப்போர்ட்டு. அந்த ஆரவ்வ என்ன வேணாலும் சொல்லு. நான் உனக்கு பேசுவேன். நீ பண்றதுதான் கரெக்ட்டு!’ என்பதெல்லாம் வன்புணர்ந்தவனுக்கே பாதிக்கப்பட்டவளை கட்டிக்கொடுப்பதற்கு ஒப்பான செயல்.
ஊருக்குள் சில பெரிய மனிதர்கள் திரிவார்களே, ‘ஆயிரமே இருந்தாலும் அவன் உன்ன தொட்டவன்’, ‘ஆயிரமே இருந்தாலும் அவ, நீ தொட்டு தாலி கட்டுனவ’, ‘ஆயிரமே இருந்தாலும் ஒரு புள்ளைன்னு ஆகிப்போச்சு’ என்றெல்லாம் பேசிக்கொண்டு, அந்த ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணிகளில் ஒருவர்தான் வையாபுரி.
ஆரவ்வின் வலியோ ஓவியாவின் வலியோ எதுவுமே வையாபுரிக்கு கிடையாது. ‘அவன் எதுவும் பண்ணாமலா, இவ இவ்ளோ பிரச்சினை பண்றா!’ என்பது மட்டும்தான் வையாபுரியின் பிரச்சினை. இந்த ‘எதுவும் பண்ணாமலா’ கேள்விகள்தான் பெண்களை கைம்பெண்களாக உட்கார வைத்திருந்தது. எத்தனை மோசமான ஆணாக இருந்தாலும் ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ என போதித்து வாழ வைத்தது என்று அறிக.
ஆனால் ஒரு பெண் பாதிக்கப்பட்டால் கோபம் வருவது இயல்புதானே? பதிலளிப்பதற்கு முன் எனக்கு ஒரு கேள்வி. அது என்ன பாதிக்கப்பட்டால்? அது என்ன பாதிப்பு? ஆக, பாதிப்பை வைத்துதான் உறவுகளை தீர்மானிக்கிறீர்களா?
வையாபுரி பாணியிலேயே சொல்கிறேன். எனக்கு தெரிந்த பெண்ணை ஆண் ஏமாற்றினால், என் தங்கை அல்லது மகளாகவே கூட இருக்கட்டும், என் அறிவுரை, ‘சரி விடு. அது மட்டும் வாழ்க்கை இல்லை. இன்னும் எவ்வளவோ இருக்கு. உனக்குன்னு சரியானவன் ஒருத்தன் இருப்பான். திஸ் கை இஸ் அன்லக்கி’ என அரவணைத்து அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதாகத்தான் இருக்கும். அந்த பாதிப்பிலேயே உட்கார வைப்பதல்ல.
உறவில் ஏமாறுவதும் இரண்டு பக்கங்களுமே நிகழ்கின்றன. ஏமாற்று வேலையை தெரிந்தேவும் செய்கின்றனர். அவர்களுக்கு கொடுக்க கூடிய ஒரே வலிமையான பதில், ‘உன்னுடைய ஏமாற்று வேலை என்னை ஒன்றும் செய்துவிடாது’ என வாழ்வதுதான்.
உடன்படும் உறவுடன் ஒன்றிணைவது போல் உடன்படா உறவுடன் விலகி போகுதலும் இயல்பாக வேண்டும். அப்போதுதான் நாம் வீழ்த்த நினைக்கிற கற்பு, ஒழுக்கம், பெண் மீதான் அடக்குமுறை எல்லாம் வீழும். அதை மறுத்து, அதே நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சிந்தனைகளை வைத்துக்கொண்டு வெறுமனே பெண் விடுதலை பேசி துளி பிரயோஜனமுமில்லை.
‘கருப்பை பெண்ணை அடிமைப்படுத்துகிறது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம்’ என மனைவியிடமே சொன்னவனின் வழி வந்துவிட்டு, ‘முத்தம் கொடுத்து ஏமாத்திட்டு போனவன, சும்மா விடலாமா?’ என பேசி கொண்டிருக்கிறோம். ‘உன்னை என்னால் ஏமாற்றிவிட முடியும், வீழ்த்திவிட முடியும்’ என்னும் ஆணின் மமதையை கடப்பதில் இருந்துதான் பெண்ணுக்கான விடுதலை தொடங்குகிறது.
நேற்றைய நிகழ்ச்சியிலேயே எனக்கு பிடித்த விஷயம், “I never give second chance to any fucker!” என ஓவியா சொன்னதுதான். ஆனால் அவர் அதில் நீடிக்க மாட்டார் என்பதுதான் சோகம். அப்படித்தான் நம் பொதுப்புத்தியும் இருக்கிறது.
RAJASANGEETHAN JOHN