பிக்பாஸ்: ஓவியா தாமாக முன்வந்து ஜூலியை பேச அழைப்பது நெகிழ்ச்சி!
பிக்பாஸ்: 24.07.2017
* விருமாண்டி திரைப்படம் எடுத்த கமலே இந்நேரம் மிரண்டு போயிருப்பார். அந்தளவிற்கு அந்த 5 விநாடி மேட்டரை ஆளாளுக்கு போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கல்கி’ திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் ‘நடுவுல நடுவுல’ என்று கீதாவை டார்ச்சர் செய்வார்.அதுபோல அந்த 5 விநாடி சாட்சியத்தை வைத்துக் கொண்டு ஓவியாவை தூக்கு மேடைக்கு அனுப்பி விட முடியாதா என்று காயத்ரி தவியாய்த் தவிக்கிறார்.
ஒரு உண்மைக்கு எத்தனை பரிமாணங்கள். நல்லவேளை அகிரா குரசேவா உயிரோடு இல்லை.
* இந்தப் பிரச்சினையால்தான் அந்த வீடே களையிழந்து போய் இருக்கிறது என்பதால் ஓவியா இதை சுமூகமாக முடித்து வைக்க முனைகிறார். ஆனால் காயத்ரி இதற்கு பெரும் முட்டைக்கட்டை.
எல்லாவற்றையும் துடைத்துப் போட்டு விட்டு அல்லது எவருடைய தப்பாக இருந்தாலும் சரி என்று மன்னித்து விட்டு அடுத்து வரும் கணங்களை மகிழ்ச்சியாக அமைக்கலாம் என்கிற ஓவியாவின் நல்லியல்பை எவரும் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை. குறிப்பாக பெண்கள்.
ஆண்கள் இதில் பரவாயில்லை. வையாபுரியும் ஆரவ்வும் திறந்த மனதுடன் பேசினார்கள். ஆண்கள் பெருந்தன்மையானவர்கள் என்பது மறுபடியும் நிரூபணமாகிறது.
* விலகிப் விலகிப் போகும் ஜூலியை ஓவியா தாமாக முன்வந்து பேச அழைப்பது நெகிழ்ச்சி. ‘Give me a hug’. ஆனால் காயத்ரியின் கட்டுப்பாட்டில் இருந்து விலக விரும்பாத ஜூலி நெஞ்சழுத்த்துடன் கடந்து போகிறார்.
ஆனால் உடனே காயத்ரியிடம் சென்று ‘அக்கா…’என்று ஒப்பாரி வைக்கும்போது வரும் எரிச்சலை எப்படி விளக்குவது என்றே தெரியவில்லை. இவர் அக்கா அக்கா என்று அழைக்கும் போதெல்லாம் சசிகலாவின் பிம்பம் வேறு கூடவே வந்து தொலைக்கிறது.
ஜூலி தம் தரப்பில் நியாயம் இருப்பதாகவே கருதட்டும். ஒன்று அதை ஓவியாவுடன் பேசித் தீர்க்க வேண்டும் அல்லது மன்னித்து கடக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தத்துவ மழை பொழிவதெல்லாம் ஓவர்.
* ‘இனிமே யார் பேச்சையும் கேட்காம தெளிவா யோசிச்சு நடந்துக்கணும்’ என்று கமல்முன் வாக்குமூலம் தந்த ரைசா இன்னமும் திருந்துவதாகத் தெரியவில்லை. ட்ரூ.. ட்ரூ.. என்றே எழவு கொட்டுகிறார்.
‘நாம சரியா நடந்துக்கிட்டா காமிராவும் சரியா காட்டப் போகுது’ என்று சொன்ன இடத்தில்தான் ‘மகராசி.. பாரு இந்த புள்ளய. எம்பூட்டு அறிவாப் பேசுது’ என்று நெட்டி முறிக்கத் தோன்றியது.
ஒருவருக்கு தனித்தன்மையும் சுயஅபிப்ராயமும் இல்லாவிட்டால் எத்தனை மொண்ணைத்தனமான பாத்திரமாக இருக்கிறது!
* காலையில் பாட்டு போட்டபோது தன்னிச்சையான மகிழ்ச்சியுடன் ஓவியா ஆடிய நடனத்திற்கும் டியூஷன் மாஸ்டருடன் ‘வருங்கால பவர் ஸ்டார்’ சிநேகன் ஆடிய செயற்கையான நடனத்திற்கும் எத்தனை வித்தியாசம்?
* ஜூலியின் நெஞ்சழுத்தம் குறித்து ஓவியாவிற்கு எரிச்சல் ஏற்படுவது இயல்பே. ஆனால் அதீதமான வார்த்தைகளை சொல்ல வேண்டியதில்லை. தீயவர்களை விட்டு விட்டு நல்லவர்கள், இன்னமும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்றே இந்த உலகம் எதிர்பார்க்கும்.
* தன் குடும்பத்தினரை நினைத்து வையாபுரி பேசியதும் இனி குடும்பத்திடம் அன்பாக இருப்பேன் என்று கலங்கியதும் நெகிழ்ச்சி. ‘இனி எல்லா இடத்திற்கும் கூப்பிட்டுப் போறேன்’ என்று அவர் சொன்ன போது .. “நீங்களும் போய் அங்க கொஞ்ச நாள் இருந்துட்டு வாங்களேன்’ என்கிற என்னுடைய மகள் குரல் பின்னால் கேட்டது. என்னவொரு வில்லத்தனம்?
* ஆண்டவர் சோதிப்பார், ஆனால் கைவிட மாட்டார்’ என்றார் ஜூலி. அவர் ஆண்டவர் என்று சொன்னது கமலையா? உண்மையான ஆண்டவரையா?
SURESH KANNAN