ஒருவர் வலியால் கதறும்போது, அப்போதும் நடிக்கிறாளோ என புறம் பேசுவது குரூரமானது!
20.07.2017 – பிக்பாஸ் நிலவரம் :
*கபடி விளையாட்டை விட வீட்டுக்குள் நடந்த குடும்ப அரசியல் இன்று மேலதிக பரபரப்பாக இருந்தது. வீட்டின் உறுப்பினர்களைத் தவிர வெளியாட்களை அனுமதிப்பது பிக்பாஸ் விளையாட்டின் வடிவமைப்பை மீறும் செயல் என கருதுகிறேன். எப்படி அனுமதிக்கிறார்கள்?
* ஒருவர் வலியில் கதறும்போது அது ஒருவேளை நடிப்பாக இருக்கும் என்கிற சந்தேகம் இருந்தாலும் கூட அதற்கான benefit of doubt-ஐ தருவதே அடிப்படையான மனித உணர்வு. ‘அப்போதும் நடிக்கிறாளோ’ என்று புறம் பேசுவது அநாகரிகமானது மட்டுமல்ல, குரூரமானதும் கூட. காயத்ரியும், நமீதாவும் இன்று அதைத்தான் விதம் விதமாக செய்து கொண்டிருந்தார்கள்.
* மேற்சொன்ன இரண்டு நபர்களையும் விட இன்று அதிகம் எரிச்சலூட்டியது, ஜூலியின் அசிங்கமான அடிமைத்தனம்தான். மனப்புழுக்கத்தில் அவர் புலம்பியபோது ஆறுதலாக அருகில் இருந்தவர் ஓவியா மட்டுமே. ‘கிளம்புகிறேன்’ என்று சொன்னவரைக் கூட பக்கத்தில் அமர வைத்து அனத்தி விட்டு பின்பு காயத்ரி வந்து விசாரணை நடத்தியவுடன் அப்படியே பிளேட்டை மாற்றியது மிகுந்த ஆபாசம். “ஆமாம். நீங்கள் இருவரும் என்னை சந்தேகப்பட்டீர்கள், அவள்தான் எனக்கு ஆறுதல் சொன்னாள்” என்று உண்மையைச் சொன்னால் குடியா முழுகி விடும்?. ஒருவரின் அடிமைத்தன உணர்வும், அதன் அடியில் இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வும், தாழ்வு மனப்பான்மையும் ஒருவரை எத்தகைய கீழ்நிலைக்கு இட்டுச் செல்லும் என்பது ஜூலியின் அற்பமான நடவடிக்கையால் இன்று உறுதிப்படுகிறது. அவர் மீது இருந்த கொஞ்சநஞ்ச அனுதாபமும் போய் விட்டது.
* ஓர் அறிக்கையை ஜூலி வாசிப்பதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத நமீதா ‘தலைவரைப் படிக்கச் சொல்’ என்று தன் பொறாமையை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டார். தலைவராக இருப்பதற்கு எவ்வித அடிப்படை தகுதியும் இல்லாத சக்தி, அதைப் படிக்கத் தெரியாமல் சிநேகனிடம் தந்தது அவல நகைச்சுவை. காட்சிகள் மாறியவுடன் ‘ஜூலிக்கு தான் ஆதரவாக இருந்ததாக’ அவரிடம் படுத்துக் கொண்டே நமீதா கதையடித்தது மகா எரிச்சல்.
* நான் வணங்கும் கிருஷ்ணர் ஓவியாவை பார்த்துக் கொள்வார் என்று வில்லி முகத்துடன் பேசிய நமீதாதான் நிஜமான வில்லி. பொதுவாக, ஆன்மீக சடங்குகளில் அதிக நம்பிக்கை கொண்டோர்களின் மறுபக்கமும் உண்மை நிறமும் மிக குரூரமாக இருப்பதை நடைமுறையில் கவனிக்கிறேன். உண்மையான ஆன்மீகம் இதுவல்ல. நமீதா தனியாக உட்கார்ந்து புலம்புமளவிற்கு ஆனதே அவருக்குண்டான தண்டனை.
* நமீதாவைப் போலவே புலம்பி புலம்பிச் சாகும் காயத்ரிக்கும் இதுவே தண்டனை. ‘தகாத வார்த்தைகள் பேசுகிறீர்கள்’ என்று வழவழா வார்த்தைகளோடு கமல் ஏற்கெனவே எச்சரித்திருந்த போதும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரியாமல் காயத்ரி எரிச்சலையும் கோபத்தையும் அப்பட்டமாக காட்டுவது அவரின் இழிவான அடிப்படைக் குணத்தைக் காட்டுகிறது. …ச்சை என்று மற்றவர்களைச் சொல்வதை விட அவர் கண்ணாடியைப் பார்த்துச் சொல்லிக் கொள்வதே சரியாக இருக்கும்.
* தலைவர் என்று பெயருக்கு வைத்திருந்தாலும் அதற்கேற்ற குணங்களோடு ஒரு கணமும் செயல்படாமல் காயத்ரி பக்கத்திலேயே திரிந்து கொண்டு புறம் பேசும் சக்திக்கு பலத்த கண்டனங்கள். ஆரவ், சிநேகன் போன்றவர்கள் தாங்கள் ஒரு முண்டங்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
* ‘ஆமாம்.. ஆமாம்.. நீ சொல்றதுதான் கரெக்ட்.. ‘யே.. ஆமாப்பா.. நீ சொல்றதும் கரெக்ட்’ என்று தனக்கேற்ற தனித்தன்மை எதுவுமே இல்லாமல் மாவுருண்டை போல எல்லாப் பக்கமும் தலையாட்டும் ரைசா ஓர் அபத்தக் களஞ்சியம்.
* இரண்டு பெண்கள் எத்தனை நெருக்கமான தோழிகளாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு மெல்லிய பகைமை புகைந்து கொண்டே இருக்கும். சற்று தூண்டினால் கூட அது வெளியே வந்து விடும்’ என்பது என் அவதானிப்பு. அது இன்றைய பகுதியில் கச்சிதமாக வெளிப்பட்டது. இந்த விஷயத்தில் ஆண்கள் பரவாயில்லை.
* இணையர்கள் ‘தலைவி.. தலைவி’ என்று கொண்டாடுவது வெறுமனே வேடிக்கைக்காக இல்லை என்பதை இன்றும் தனது அபாரமான குணத்தின் மூலம் நிரூபித்தார் ஓவியா.. சண்டைக் கோழிகளான காயத்ரியும் நமீதாவும் தம்மைச் சீண்டும் போதெல்லாம் அவர்களை இடது கையால் அலட்சியமாக கையாள்வது, எவரைப் பற்றியும் புறம் பேசாமல் விஷயத்தின் மையத்தை மட்டும் பேசுவது என்று அவரின் ஆளுமை பிரமிக்க வைக்கிறது. பாதிக்கப்பட்ட ஜூலியின் பக்கத்தில் அமர்ந்து விதம் விதமாக ஆறுதல் சொன்னது அவருடைய உயர்ந்த தன்மையைக் காட்டியது. ‘ஒரே வாக்கியத்தில்’ காயத்ரியை நோஸ்கட் செய்து கிளம்பியது செம. காயத்ரி அதையே பிடித்துக் கொண்டு விதம் விதமாக புலம்பியது ஒருபக்கம் காமெடியாகவே இருந்தது.
* இந்த நிகழ்ச்சியை சரியாப் புரிந்து கொண்டு அதற்கேற்ப விளையாடுபவர்கள் ஓவியாவும் கணேஷ் வெங்கட்ராமும் மட்டுமே. மற்றதெல்லாம் சில நாட்கள் கூட தங்களின் கல்யாண குணங்களைக் கையாளத் தெரியாத அரை வேக்காடுகள். அதற்குப் பொருள் நடிக்க வேண்டும் என்பதல்ல. சூழலுக்கு இணக்கமாகிக் கொள்வது.
காட்சிகள் சித்தரிக்கப்பட்ட கோணங்களின் வழி மட்டுமே இந்தப் பதிவு.
SURESH KANNAN