ஆரி வெற்றிவாகை சூடிய ‘பிக்பாஸ் தமிழ் சீசன் 4’ – முழு விமர்சனம்
Here we go.
105 நாட்களாக எதையும் எழுதி விடக் கூடாது என கட்டுப்படுத்திக் கொண்டு எந்த முன் அனுமானத்துக்கும் ஆட்பட்டுவிடக் கூடாது என நிதானமாகவும் இருந்து இதோ முடிந்து விட்டது. ஆரி வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆம், பிக் பாஸ்தான்.
நானும் பிக் பாஸ் பார்த்தேன். பொதுவாக பிக் பாஸ் பார்ப்பவர்களை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்ப்பவர்கள்தான் அதிகம். ‘பிக் பாஸ்லாம் பார்ப்பியா?’, ‘அது ஸ்க்ரிப்டட்.. ஏமாத்துறாங்க. !’, ‘இதெல்லாம் ஒரு ப்ரோக்ரோமா?’ என பல கேள்விகள் வரும். ‘மாஸ்டர்’ படத்துக்கான முதல் காட்சி டிக்கெட் கிடைக்காமல் துவண்டு போகிறவர்களில் இருந்து 20-20 மேட்சை நகம் கடித்து பார்க்கிறவர்கள் வரை அவர்களுக்குள் அடக்கம்.
பிக் பாஸ் பற்றி சொக்கட்டான் தேசம் புத்தகத்திலேயே எழுதி இருக்கிறேன். கமல் தொடக்கத்தில் சொன்னது போல அது ஒரு social experiment. ஸ்க்ரிப்டட் என்றாலும் நீங்கள் நினைப்பது போன்ற வசனம் கொடுத்து நடிக்க வைக்கும் ஸ்க்ரிப்ட் அல்ல. Truman Showவில் வருவது போன்ற தேவையான உணர்வுகளை உருவாக்கியும் கலைத்துப் போட்டும் விளையாடும் ஸ்க்ரிப்ட். மேலும் ஒருவரை பற்றி பிறர் அறிவதும் அதை தனது ஆதாயமாக்கிக் அதிகாரம் கொள்வதும்தான் மனிதப் பரிணாமமே.
Gossip என்பது தவறு என்றால் மனித வரலாறு என்பதே மிகப் பெரிய gossip-தான்.
தனியாக இருக்கும் வரை பிரச்சினை இல்லை. கூட ஒருவர் சேர்ந்தாலே அரசியல் பிறந்து விடும். Manipulation தோன்றி விடும். ஒரு 16 பேர் ஒன்று சேர்கையில் அவர்களுக்குள் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் செயல்படுவதும் அதை எதிர்த்து இன்னொருவர் அணி கட்டுவதும் பிறகு அணி மாறுவதும் அதிகாரம் கொள்வதும் என சமூக அரசியலை படம் பிடித்துக் காட்டும் நிகழ்ச்சி பிக் பாஸ்.
ஒரு இயக்கம், அலுவலகம், கட்சி, குடும்பம் என குழுவாக இயங்கும் எங்குமே நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் பிக் பாஸ் விளையாட்டைதான் விளையாடிக் கொண்டிருப்பீர்கள்.
நான்கு சீசன்களில் எனக்கு பிடித்தது முதலும் நடந்து முடிந்த நான்கும்தான். பிறவற்றில் தோராயமாக என்ன நடக்கும் என ஊகிக்கக் கூடிய தன்மை இருந்ததால் ஈர்க்கப்படவில்லை. தற்போது நடந்த நான்கிலும் இறுதி என்னவென தெரியும். ஆனாலும் அந்த வெற்றியை பார்த்துவிட வேண்டும் என்கிற உணர்வெழுச்சி ஏற்படும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தது.
காரணம் ஆரி!
16 போட்டியாளர்கள் மட்டுமென இல்லாமல் விஜய் டிவியும் கமலுமே கூட சேர்ந்து ஆரியை ஒடுக்கினார்கள். வெளியே மக்கள் ஆதரவு இருந்தபோதும் பலவித விமர்சனங்களும் இருந்தன. ‘அதிகம் blame செய்கிறார்’, ‘Shawl போடுங்க தோழி டைப்’ என்கிற விமர்சனங்களை நானே கேட்டிருக்கிறேன். ஆனாலும் வென்றிருக்கிறார். எனக்கும் ஆரியிடம் சில குறைகள் உண்டு. அவற்றை பின்னால் பார்ப்போம். அதற்கு முன் பிற போட்டியாளர்கள் பற்றி.
வேல்முருகனும் ரேகாவும் பெரியளவில் விளையாடவில்லை. அப்பாவியாக வந்தார்கள். சென்றார்கள். சுரேஷ் கொஞ்சம் விஷமத்தனமான ஆள். வயோதிக பாலாஜி அவர். நேர்மையாக இல்லாமல் இருந்ததை விளையாட்டு தர்மமாக வரித்துக் கொண்டவர். உங்கள் அலுவலகங்களில் அவரை போன்றவர் ஒருவரேனும் இருப்பார். மோசமானவர் என தெரிந்தே நீங்கள் அவரிடம் சிரித்து பேசுவீர்கள். உங்களுக்கு அவரை பற்றி தெரியும் என தெரிந்தே அவரும் சிரித்துப் பேசுவார்.
சம்யுக்தா பாத்திரத்தையும் பார்த்திருப்பீர்கள். சுருக்கென தைக்கும் வார்த்தைகள் பேசுபவர். ரப்பர் கொடுக்காததாலே மொத்த பள்ளிக்காலம் முடியும் வரையும் ஜென்ம வைரியாக நம்மை பார்ப்பானே ஒரு சக மாணவன், அவன்தான் சம்யுக்தா.
ஆஜித் இருட்டில் எழுப்பியதும் மலங்க மலங்க விழிக்கும் அப்பாவி. தோளை குலுக்கிவிட்டு நடைபோடும் மேம்போக்கான இன்றைய தலைமுறையை சேர்ந்தவன். சூழல் இறுக்கப்பட்டு நீங்கள் அரசியல் செய்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படுகையில் சரியாக தவறான பக்கம் சென்று சேருபவன்.
கேப்ரியெல்லா க்யூட். தவறாக ஆட்டத்தை தொடங்கினாலும் சரியாக சுதாரித்துக் கொண்டு சரியாக ஆட்டத்தை முடித்தவர்.
அடுத்தது லவ் பெட் க்ரூப். இதன் தலைவர் அர்ச்சனா. மிகவும் அருவருப்பான குணம் கொண்டவர். வார்த்தை தடியாக இருந்தாலும் தெரிந்தே பயன்படுத்துகிறேன். அன்பு என்கிற உணர்வை இவரை போல் abuse செய்தவரை நான் பார்த்ததே இல்லை. அன்பை ஜெயிக்க வைப்போம் என அகங்காரத்துடனும் ஆக்ரோஷத்துடனும் கத்தும் அந்த ஒரு காட்சியே போதும் இவரின் தன்மையை பறைசாற்ற.
ஆணவக் கொலைக்கு முன் வீட்டில் ஒரு கேரக்டர் எமோஷனல் ப்ளாக்மெயில் செய்து காதலை பிரிக்க முயலும் பாருங்கள், அதெல்லாம் அர்ச்சனாதான். அன்பே உருவான அவர்தான் நேற்று ஆரிக்கு கோப்பை சென்றதும் முகத்தில் ஈயாடாமல் அமர்ந்திருந்தார்.
ஒரு நாற்காலியில் அவரை கட்டி வைத்து வாயையும் அடைத்து ‘அன்பே சிவம்’ படத்தை ரிபீட் மோடில் போட்டுவிட வேண்டும்.
அர்ச்சனாவின் பெரும் குற்றம் தன்னுடைய அகங்காரத்தை ரியோ, சோம், கேபி, சம்யுக்தா, நிஷா என அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்ததுதான். அவர் எவிக்ட் ஆனது மட்டுமின்றி பிற அனைவரின் ஆட்டத்தையும் நாசமாக்கினார்.
ரியோவுக்கு என்ன நடக்கிறது என புரியும் தன்மையே இல்லை. தன்னிலிருந்து விலகி பார்க்க அவரால் முடியவே இல்லை. யாரேனும் எங்காவது குரைத்தால் ஓடி வந்து கடித்து வைப்பார். யோசிக்கும் திறனின்றி எமோஷனலாகவே இருப்பதன் விளைவு அது.
சோம் ஒரு கட்டப்பா. அதிகார மையத்துக்கு விசுவாசமாக இருந்து உயிரையே கொடுப்பவர்.
ஜித்தன் ரமேஷ் வேற லெவல். குணா படத்தில் மக்களை பார்த்து கமல் ‘ஹும்.. மனுஷங்க!’ என சலித்துக் கொள்ளும் பாவனையிலேயே நிகழ்ச்சி முழுவதும் இருந்தார். அவ்வப்போது சரியான பக்கமும் நின்றார்.
அனிதா சம்பத்தெல்லாம் என்ன சொல்ல!
க்ளாஸ் லீடர் ஆக்கி விட்டதாலேயே உலகை ஆளும் மனநிலை பெறுவானே மாணவன், அவனை போன்றவர் அனிதா சம்பத். கண்ணாடியை வைத்தால் அதற்குள் அனிதா சம்பத் மட்டுமே அவருக்கு தெரிவார். அருகே இருக்கும் நபர்கள், பொருட்கள் எதுவும் தெரியாது. அவரின் வாழ்க்கை, அவரின் விருப்பம், அவரின் பிரச்சினை போன்றவற்றை மட்டுமே பார்க்கும் individualist.
சனம் is something a best woman could be. குறைந்தபட்சமாக நிகழ்ச்சியில் இப்படித்தான் உணர்ந்தேன். எங்குமே அவர் தன் நியாயத்துக்காக பிடிவாதமாக நின்று இருக்கிறார். சண்டை போட்டிருக்கிறார். மட்டுமின்றி பிறரின் நியாயங்களுக்கும் நின்றிருக்கிறார். தன் மீது வீசப்படும் எல்லா வசைகளையும் மனதில் போட்டுக் கொண்டு முடங்குவதில்லை. அவற்றில் பெரும்பாலானவற்றை நக்கலுடன் திருப்பிக் கொடுத்து கடந்திருக்கிறார். எதையும் முதுகுக்கு பின் பேசுவதில்லை. முகத்துக்கு நேராகவே சொல்லி இருக்கிறார். Gutsy.
ரம்யா மிகவும் ஆபத்தானவர். அவர் claim செய்து கொள்வது போல் விளையாட்டை சிரித்தபடியே எடுத்துக் கொள்வதில்லை. நேற்று ஆரி கோப்பை வாங்கியதும் அவரின் முக பாவமே அதை சொல்லும். எனக்கு தெரிந்து இந்த சீசனில் ரம்யாவுக்கு இருந்த ஒரே வேலை, ஆரியை எவிக்ஷனுக்கு நாமினேட் செய்வது மட்டும்தான். வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஆரிக்கு எதிராக குண்டு வைத்தார். கேபி ரம்யாவை கணித்தது சரி. ஆரியுடன் பிரச்சினை ஆகும் அனைவருடன் அணி சேர்ந்து ஆரிக்கு எதிரான அவர்களின் விளையாட்டை தூபம் காட்டி வளர்த்து விடுவார் ரம்யா. பள்ளிக் கூட காலத்தில் ஊமைக் கொத்தாளம் என்கிற பெயர் கொடுப்போம் இத்தகைய பாத்திரங்களுக்கு.
ஷிவானிக்கு என்ன செய்வதென்றே ஆரம்பத்தில் தெரியவில்லை. பாலாஜியுடன் பிணக்கு ஏற்பட்ட பிறகுதான் அவரின் தன்னிலைக்கு வந்தார். பாலாஜியுடன் அவர் கொண்டிருந்ததை காதல் என சொல்லவில்லை. Infatuation அல்லது ஒரு சின்ன ரயில் சிநேகம் அவ்வளவுதான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதும் ஒரு காதல் தேவை என்பதால் டேபிள் அப்படி திருப்பி வைக்கப்பட்டது. மற்றபடி அவரின் தாய் வந்து கத்தியதெல்லாம் அப்படியே லாஸ்லியாவின் தந்தை வந்து கத்திய டைப்தான். அதையெல்லாம் ஸ்க்ரிப்ட் என புரிந்து கொள்ளாமல் நாமும் கம்பு சுற்றிக் கொண்டிருந்தோம்.
அடுத்தது பாலாஜி. ஒரு தொலைக்காட்சி ரியலிட்டி நிகழ்ச்சியில் என்னவெல்லாம் பேசக் கூடாதோ செய்யக் கூடாதோ அவற்றை எல்லாம் செய்தார், பேசினார் பாலாஜி.
பொதுவாக இளம்வயதில் பணக்காரராகி விடும் நபர்களை பற்றி எனக்கு ஒரு கருத்து உண்டு. கார்க்கியின் foma gordeyev போல். சுலபமாக பணம் கிடைத்துவிடுவதால், மாண்புகள் மீது பெரிய நம்பிக்கை இருக்காது. பற்றும் இருக்காது. எவரை பற்றியும் அக்கறையும் துளி கூட இருக்காது. முழுக்க முழுக்க தன்னலம் மட்டும்தான் அவர்களிடம் நிரம்பியிருக்கும். என்ன செய்தேனும் வெற்றி அடைய வேண்டும் என்கிற வெறி இருக்கும். பொய், புரட்டு, தவறு போன்றவை அவர்களை அச்சுறுத்தாது. பாலாஜியும் அப்படித்தான். ஆரிக்கு ‘அட்வைஸ்’ என பெயர் கொடுத்தது தொடங்கி, ‘லவ் பெட்’ என்கிற பெயர் சூட்டல் வரை பிக் பாஸ்ஸில் சுற்றிய பல பெயர்களை உருவாக்கி விட்டது அவர்தான். ‘லவ் பெட்’ என தங்களுக்கு பெயர் சூட்டிய அதே பாலாஜிக்கு நேற்று ‘டேக் இட்’ என ரியோ, நிஷா, அர்ச்சனா வகையறா கைதட்டி கொண்டிருந்ததற்கு பெயர்தான் வன்மம். ஆரி மட்டும் அவர்களுக்கு வேப்பங்காயாக கசந்தார்.
இன்றைய தலைமுறையின் பக்கா selfish, individualistic, ‘no-values’ valued neo liberal நபர்தான் பாலாஜி. பொதுவாக தமிழ் சினிமா ஹீரோக்களில் நெகட்டிவ் கேரக்டரில் வரும் பாத்திரங்களை ரசிக்கும் மக்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு விட்டேத்தியான, பொறுப்பற்ற, அராஜகமான பாலாஜியை பிடித்திருக்கிறது.
இறுதியாக ஆரி.
தொடக்கத்தில் எனக்கு என்னவோ ஒருவகை ஈர்ப்பு இருந்தது. இத்தனைக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகருக்கு என்ன வேலை என ஆரிக்கு எதிராக சண்டை கட்டியவன்தான் நான். ஆரம்பம் தொட்டே அவர் பல விஷயங்களில் கவனமாக இருந்தார். ரியோவுக்கு போர்வை போர்த்துவது, கேபிக்கு துணியை போர்த்திவிடுவது என அவர் செய்யும் பல விஷயங்கள் ஏதோவொரு வகை நடிப்பு அல்லது ஸ்ட்ண்ட் போலவே தென்பட்டன. ஆனால் நியாயத்துக்கு என வாதிட்டு முதன்முறையாக ஒரு கொண்டாட்டத்தின் போது வெளியே கார்டன் பகுதியில் தனியே உட்கார்ந்திருந்தார் பாருங்கள். அப்போதிருந்துதான் அதிகம் கவனிக்க ஆரம்பித்தேன்.
சிறுவயதில் இருந்து சரியான விஷயம் செய்ய வேண்டும் என வளர்க்கப்பட்ட நீங்கள் ஒவ்வொரு முறை சரியான விஷயம் செய்கையிலும் உங்களுக்கு நேர்வது என்ன தெரியுமா?
தனிமை!
மிகப்பெரும் சோதனையே, தனியாக இருக்கையிலும் நீங்கள் எத்தனை சரியாக இருக்கிறீர்கள் என்பதுதான். அதைத்தான் ஆரி நமக்கு காட்டிக் கொண்டிருந்தார்.
உங்களின் அலுவலகத்திலோ வீட்டிலோ உங்களை சுற்றி இருக்கும் அனைவரும் உங்களை ஒதுக்குவதோடு மட்டுமல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை உங்களை ஒடுக்கியும் ஒடுக்குபவருக்கு ஆதரவு அளித்துக் கொண்டும் இருக்கும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
அமைதியாகவா இருப்பீர்கள்?
குறைந்தபட்சம் கெட்டவார்த்தையின் துணையேனும் தேடுவீர்கள். பிக் பாஸ்ஸில் அதையும் செய்ய முடியாது. ‘என்னை குறை சொல்லும் நீ எத்தனை ஒழுங்கு?’ என்பதை நோக்கிதான் இயல்பாகவே நகர்த்தப்படுவீர்கள். Naturally you’d find yourself a self defending mechanism. அந்த மெக்கானிசத்தை கூட ஆரி, political correctness-டன் நேர்மையுடன் நியாயமாக உருவாக்கியதுதான் அவரின் வெற்றி.
ஒரு 15 பேர் உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள். உங்களை நக்கல் அடிக்கிறார்கள். பாட்டு பாடுகிறார்கள். மாறி மாறி அணி சேர்ந்தாலும் உங்களை வீழ்த்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள். இறுதியில் உங்களை பொறாமை பிடித்தவர் என தீர்ப்பு எழுதுகிறார்கள். என்ன செய்வீர்கள்?
இவற்றுக்குள்தான் பாலாஜி திருந்தி வந்தபோது ஆரி ஏற்றார். ரம்யா ஜெயிக்கவென ஆதரவு தெரிவித்தார். பாராட்டினார். ஷிவானிக்கு ஆறுதல் கூறினார். ரியோவும் சோமும் அர்ச்சனாவால் வீழ்த்தப்படுவதை சொல்லிக் கொண்டே இருந்தார். சனமுக்கு வாதாடினார். அனிதாவின் நியாயத்தை பேசினார். கேபி மற்றும் ஆஜித் ஆகியோரின் வளர்ச்சிக்கு அக்கறை காட்டினார்.
பிக் பாஸ்ஸின் முடிவில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஆரியும் பாலாஜியும் மிஞ்சியதுதான் இந்த சீசனில் சரியாக இருக்க முடியும். ஏனெனில் இருவர் மட்டும்தான் தான் நம்பிய விஷயங்களுக்கு நேர்மையாக இருந்தனர். பாலாஜி தன்னை கெட்ட ஆட்டம் விளையாடுபவர் என தொடர்ந்து வெளிப்படையாக அறிவித்துக் கொண்டிருந்தார். ஆரி தன்னை நல்ல ஆட்டம் விளையாடுபவர் என இறுதி வரை ஒடுக்கப்பட்ட போதும் நிறுவிக் கொண்டிருந்தார்.
பிறர் அனைவரும், நல்லது-கெட்டது இரண்டுக்கும் இடையில் ஊசலாடி, தான் நம்பியதை நல்லதென பொய்யாக இட்டுக் கட்டி, அதற்கு உணர்வுகளை விரயமாக்கி நாசமாய் போய், வாழ்க்கையில் காணாமல் போகும் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளே!
ஆரியிடம் எனக்கு பிடிக்காத விஷயங்கள் சில உண்டு.
திருந்தாதவர்களிடம் அதிகம் பேசி பயனில்லை என்பது என் கருத்து. புரிய விரும்புபவர்களிடம் பேசலாம். புரிய மறுப்பவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை. ஆரி தன்னை எதிர்த்த அனைவரையும் சரி செய்ய நீண்ட விளக்கங்களை கொடுத்துக் கொண்டே இருந்தார். அந்த வகை argument-டே ஒருவரை சலிக்க வைத்து விடும். அது மட்டும்தான் ஆரியிடம் எனக்கு பிடிக்கவில்லை.
மற்றபடி ஆரிக்கு நேர்ந்த indifference சரியாக இருக்க முயலும் நாம் அனைவருமே வாழ்க்கையில் சந்தித்து கொண்டிருப்பதுதான்.
உண்மை என்னவெனில் ஆரி போன்றவொரு நபரை நேரடியாக சந்தித்தால் நீங்கள் நிராகரிப்பீர்கள். எப்போதும் சரியாக இருக்க விரும்பும் ஒருவர் உங்களுக்கு அலுப்பு தரக் கூடியவர். சரியாக இருக்க விரும்பி அறிவுறுத்தும் ஒரு நபரை blame செய்பவராக மட்டுமே உங்களால் பார்க்க முடியும். உங்களின் குறையை சுட்டிக் காட்டி அதை சரி செய்து கொள்ள உங்களை சொல்வதில், அவருக்கு நயா பைசா கூட பிரயோஜனமில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவே மாட்டீர்கள்.
முதல் சீசனில் வந்த ஓவியா போல்தான் ஆரியும். இருவரிடமும் நிகழ்ச்சியில் நாம் ஈர்க்கப்பட்டது போல் யதார்த்த வாழ்வில் ஈர்க்கப்படுவதில்லை.
Last but not least, நம்ம தலைவர் கமல். தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெரியவரை எழுப்பி வர வைத்து பேச வைத்ததை போல் மொத்த சீசனிலும் பேசிக் கொண்டிருந்தார். கமலை நான் ரசித்தது நேற்று மட்டும்தான். புத்தக அறிமுகத்துக்கு பிறகு கவிதை பேசியும் பாடியும் இருந்த அந்த கமலைதான் எவ்வளவு மிஸ் செய்திருக்கிறோம் நாம்?
மேலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஆரியை ஏற்காத கமலின் பாவனைகளை நாம் புறக்கணித்து விட முடியாது. பாலாஜிக்கு காட்டிய அக்கறை, கரிசனம் ஆரியிடம் கமல் வெளிப்படுத்தியதே இல்லை. பாலாஜியையும் ஆரியையும் ஒரே தட்டில் வைத்து விமர்சித்ததெல்லாம் உச்சக்கட்டம். ஒடுக்குபவனையும் ஒடுக்கப்படுபவனையும் ஒன்றாக வைத்து இரு சமூகங்களுக்கு இடையேயான தகராறு என செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தார் கமல்.
இறுதியாக ஆரிக்கு ஓர் அறிவுரை. நேற்று கமல் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து ‘நீங்கள் வெளியே வந்தால் நல்ல பொசிஷன் காத்திருக்கிறது’ என்றும் ‘இந்த மண்ணுக்கான மொழிக்கான கடமையை எனக்காக செய்யுங்கள்’ என்றும் சொன்னதை எல்லாம் தயவுசெய்து நம்பி விடாதீர்கள். குசும்புக்கார கமல் மய்யத்துக்கு வேட்பாளர் தேடுகிறார். வீழ்ந்துவிடாதீர்கள்.
RAJASANGEETHAN