பிரம்மா.காம் – விமர்சனம்
விளம்பர நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார் நகுல். இவரின் உறவினரும், இவரை விட திறமை குறைந்தவருமான சித்தார்த் விபின் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மாடலாக இருக்கும் நாயகி ஆஷ்னாவிற்கும், நகுலுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஆனால், இருவரும் சொல்லிக் கொல்லாமலே பழகி வருகிறார்கள்.
இந்நிலையில், தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு செல்கிறார் நகுல். அங்கு கடவுளிடம், தான் பார்க்க வேண்டிய வேலையை, சித்தார்த் விபின் பார்த்து வருகிறார் என்று தன்னுடைய குறைகளை சொல்லுகிறார். உடனே ஏதோ மாற்றம் ஏற்படுகிறது. அதாவது நகுல் சி.இ.ஓ-வாகவும், சித்தார்த் விபின் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் மாறுகிறார்கள்.
இதன்பின், நகுலின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. தான் காதலிக்கும் ஆஷ்னா, இவரை காதலிக்காமல், சித்தார்த் விபினை காதலிக்க ஆரம்பிக்கிறார். மேலும் பல சிக்கல்களும் நகுலுக்கு ஏற்படுகிறது. இறுதியில் நகுல், இந்த சிக்கல்களில் இருந்து விடுபட்டாரா? மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினாரா? நகுல் – அஷ்னாவின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் நகுல், தன்னுடைய துறுதுறுவான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பல இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தினாலும், இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கிறது. ஆஷ்னா சவேரி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சித்தார்த் விபின் நடிப்பு ரசிக்கும் படி உள்ளது. இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை திறம்பட உபயோகப்படுத்தி இருக்கிறார். மொட்டை ராஜேந்திரன், ஜெகன் காமெடிகள் சிறப்பு. சோனா, நீதுசந்திரா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பல ஆள்மாறட்ட படங்கள் வெளிவந்தாலும், இப்படத்தில் வித்தியாசமான திரைக்கதைக் கொண்டு இயக்கி இருக்கிறார் இயக்குனர் புரஸ் விஜயகுமார். ஓரளவிற்கு மட்டுமே வெற்றிக் கண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். தன்னை விட தகுதி குறைந்தவர் உயரிய பதவியில் இருப்பதால், தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையில் பிரம்மா என்பவர் குறிக்கிட்டு வாழ்க்கையை மாற்றுகிறார் என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். வாழ்க்கை ஒருவனுக்கு பிடித்த மாதிரி நகர்ந்தால் கடவுளை வாழ்த்துவதும், பிடிக்கவில்லை என்றால் கடவுளை திட்டுவதுமாக பலர் இருக்கிறார்கள். கொடுத்த வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும் என்ற கருத்தை பேன்டஸி மூலம் சொல்ல வந்திருக்கிறார். சுவாரஸ்யமான திரைக்கதை இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில் ‘பிரம்மா.காம்’ பிரம்மாண்டம் குறைவு.