“உயர்ந்த மரபணு” கொண்ட பிராமண பெண்களுக்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்களாம்!

“கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள்.” – வரலாற்றாசிரியர் டி. என்.ஜா.
“ஆரியர்களிடம் அவர்களுக்கே உரித்தான பாண்டங்கள், கருவிகள், ஆயுதங்கள் என எதுவும் இல்லை. ஆரியர்கள் தாம் தொடர்பு கொள்ளும் மக்களிடம் இருந்து தமக்கு ஒத்துப்போகும் எதையும் ஏற்றுக்கொண்டார்கள். மரபணு ரீதியாகவோ, உடல் அமைப்பு ரீதியாகவோ அவர்கள் ஒரேவிதமானவர்களாய் இருக்கவில்லை. இனக்குழுவிற்குள் புதியவர்களை ஏற்றுக்கொள்வதென்பது, போர் வெற்றி மூலமோ, ஆரியமாக்கப்பட்டிருந்த பிற மக்களுடன் குறிப்பிட்ட அளவு கலப்புமணம் புரிவதன் மூலமோ அடிக்கடி நடந்தது. ஆரியரின் மண்டை ஓட்டு வடிவம் என எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லை.” – வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பி.
நாம் ஏன் வரலாறு தெரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்கலாம். ஆதாரங்கள் இல்லாத எதிர்வினைகள் வெறும் அவதூறுகளாகவே எஞ்சிவிடுகின்றன. அதனால் ஆதாரங்கள் தருகிறோம். மென்பொறியாளர் ஸ்வாதியின் படுகொலை, அவர் பெண் என்பதற்காக, பொதுவெளியில் வைத்து படுபயங்கரமாக கொல்லப்பட்டார் என்பதற்காக அவருக்கு நீதி கோருவதை விடுத்து, அவர் சார்ந்த பிராமண சாதியை வைத்து அதிகம் விவாதிக்கப்படுகிறார்.
ஸ்வாதியின் கடவுள் பற்றை வைத்து அவருடைய தூய்மை வாதத்தைப் பேசுவது என்கிற பெயரில் அவர் படுகொலை காரணங்களை மறைக்க அவரைச் சார்ந்தவர்களே மிகப் பெரிய திரையை ஆரம்பம் முதலே எழுப்பி வந்தார்கள். பிராமணப் பெண் காதலிக்கக் கூடாதா? அல்லது ஆண்களுடன் பேசக் கூடாதா? தன் வயதை ஒத்த பெண்களைப் போல அவரும் இருக்கக் கூடாதா? என்கிற கேள்விகளையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு அவருக்கு ‘புனித’ பிம்பத்தை அளிக்க விரும்பினர். வெவ்வேறு யூகங்கள், காவல்துறை புலனாய்வுகள், அவருடைய நட்பு குறித்து தகவல் தெரிவித்தபோது, அவர் செய்த ‘தவறுகள்’ தான் இந்தக் கொலைக்குக் காரணம் என உபதேசமும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடாகவே இந்த இருவேறு நிலைகளையும் ஸ்வாதியைச் சார்ந்த சமூகம் எடுத்திருக்கிறது. இதுவரை நடந்த மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை கொலை, படுகொலை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி நின்ற அவர்கள் தரப்பினரைத்தான் பார்த்திருப்போம். ஆனால், ஸ்வாதி படுகொலையில் மட்டும்தான், நீதியைவிட அவர் சார்ந்த இனத்தின் தூய்மையைப் பேணுவதே முதன்மையாகப் பேசுகிறார்கள்.
‘சென்னை ஸ்ரீ சங்கரா மேட்ரிமோனியல்ஸ்’ என்ற நிறுவனத்தின் நிறுவனர் அதன் இணையதளத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றைச் செய்கிறார். ‘ஸ்வாதிக்கு நடந்த சோக சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டது’ என்று தலைப்பிட்டு கட்டுரை ஒன்றைத் தீட்டுகிறார் அந்தத் திருமண தகவல் மையத்தின் நிறுவனர் பஞ்சாபிகேசன்.
ஸ்வாதி முகநூலில் ராம்குமாருடன் நட்பாக இருந்தார் என்ற காரணத்தால்தான் இந்த கொலை நடந்திருக்கும் என்று அனுமானித்து கட்டுரை தீட்டியிருக்கும் பஞ்சாபிகேசன், பட்டப்பகலில் கொல்லப்பட்ட ஸ்வாதிக்கு இரங்கல் தெரிவித்துவிட்டு, நேரடியாக சொல்ல வரும் செய்திக்கு வருகிறார்:
“கலாச்சாரம் மாறுவதும், சினிமாவும், நவீன தொழில்நுட்பங்களின் எதிர்மறை கேடும், சமூக ஊடகங்களும் இது போன்ற சம்பவங்களுக்குக் காரணம். தவறான கல்வி முறையும், சுதந்திரம் என்ற பெயரில் எதைப் பற்றியும் கவலைப்படாத இளைஞர்களின் மனோபாவமும் இத்தகைய கேடுகளை விளைவிக்கின்றன. உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களை கவர்வதற்காகவே மற்ற சாதி ஆண் பையன்கள் அலைகிறார்கள். இத்தகைய பொறிகளில் நம் பெண்கள் சிக்கிவிடுகிறார்கள்.
“எதிர்பாலினத்தாருடன் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானதே. ஆனால், உயர்ந்த திறமையுடையவர்களை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பெண்கள், சிலரைத் தள்ளிவைப்பதை ஒரு கலையாகச் செய்ய வேண்டும். நட்பாக இருக்கலாம். ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்களுக்கு நேரக்கூடியவற்றை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும் தைரியமும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு இருக்க வேண்டும்” என்று அறிவுரை சொல்லும் பஞ்சாபிகேசன் சில பாயிண்டுகளை எடுத்துக்கொடுக்கிறார். அதற்குப் பிறகு,
“மனிதராகப் பிறப்பது அரிதானது; அதிலும் பிராமணராகப் பிறப்பது அரிதினும் அரிதானது. சாதி மாறி திருமணம் செய்துகொள்வதால பிராமணப் பெண்கள், தங்களுடைய மகிமையை இழந்துவிடுகிறார்கள். இதுபோன்ற இமாலய தவறு செய்த பிராமணப் பெண்ணுக்கு மன்னிப்பென்பதே கிடையாது. பிராமணர்களுக்கென்று தனித்த திருமண மையத்தை நடத்துவதற்குக் காரணமே மாற்று சாதியுடன் திருமண உறவைத் தடுப்பதற்காகத்தான். எந்த விதத்திலும் மயங்காமல் பிராமணப் பெண்கள், பிராமண ஆண்களையே மணக்க வேண்டும். முடிவெடுக்க இதுதான் சிறந்த தருணம்” என்று முடிக்கிறார்.
பெண்ணடிமைத்தனத்தையும் சாதியத்தையும் விதந்தோதுவதாக சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் வந்த கண்டனங்கள் காரணமாக இணையத்திலிருந்து இந்தக் கட்டுரை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
ஸ்வாதியின் படுகொலையை மத மோதல்களை உருவாக்கவும் சாதி தூய்மைவாதத்தைப் பேசவும் பயன்படுத்தும் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஸ்வாதிக்குக் கிடைக்க வேண்டிய நீதி குறித்து கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.
– Courtesy: thetimestamil.com