பூமி – விமர்சனம்
நாசாவில் வேலை பார்த்துவரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றொரு கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேறு கிரகத்துக்கு சென்று வர மூன்று வருடங்கள் ஆகும் என்பதால், அதற்கு முன்பாக சொந்த ஊருக்கு செல்கிறார்.
அங்கு விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து வருவதை அறிந்து அதற்காக குரல் கொடுக்கிறார். மேலும் நாசாவில் பயன்படுத்தப்படும் யுக்தியை சொந்த ஊரில் செயல்படுத்த முயற்சி செய்கிறார். இதையறிந்த நாசா, ஊரைவிட்டு வருமாறு அழைப்பு கொடுக்கிறார்கள்.
நாசாவின் அழைப்பை ஏற்காத ஜெயம் ரவி, உள்ளூரிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே பகையை ஏற்படுத்திக் கொள்கிறார். இறுதியில் ஜெயம் ரவி, மீண்டும் நாசா சென்றாரா? கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே சண்டை போட்டு விவசாய நிலங்களை மீட்டுக் கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, படம் முழுவதும் உணர்ச்சிகரமாக வருகிறார். இவர் பேசும் வசனங்களும் உடல்மொழியும் ரசிக்க வைக்கிறது. இவரின் கோபம் பார்ப்பவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. ஜெயம் ரவியின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று என்றே சொல்லலாம்.
நாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வால் வழக்கமான கதாநாயகி போல் பாடல் மற்றும் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கிறார். ஜெயம் ரவியின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் நடிப்பு யதார்த்தம். கலெக்டர் ஜான் விஜய், விவசாயி தம்பி ராமையா, அரசியல்வாதி ராதாரவி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் வில்லனாக ரோனித் ராய். பல தமிழ்ப் படங்களில் இதற்கு முன்பு பார்த்த அதே கார்ப்பரேட் அதிபர்தான். ஆனால், நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.
விவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் லட்சுமண். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி கடனால் துன்பத்திற்குள்ளாகும் நிஜமான ஒரு பிரச்சனையை இப்படம் பேசுகிறது. விவசாயத்தின் சிறப்பு, அதற்கு எதிரான சதி என்று பேசும் வசனங்கள் சிறப்பு.
இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. குறிப்பாக தமிழன் என்று சொல்லடா பாடல் அதை உருவாக்கிய விதமும் சிறப்பு. பின்னணியில் கவனிக்க வைத்திருக்கிறார். டுட்லியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் பூமி செழிப்பு.