பூலோகம் – விமர்சனம்

குத்துச் சண்டைப் போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘பூலோகம்’, விளையாட்டு போட்டிகளில் தனியார் நிறுவனங்களின் வியாபார அரசியல் எந்த அளவுக்கு ஊடுருவுகிறது என்பதை தோலுரித்து காட்டும் படமாகவும் உள்ளது.

வட சென்னையில் பிரபலமாக விளங்கும்  இரண்டு குத்துச் சண்டை வீரர்கள் குழுவினருக்கு பல ஆண்டுகாலமாக பகை உள்ளது. இதில் ஜெயம் ரவியின் அப்பா, போட்டி ஒன்றில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொள்கிறார். இதனால்,  பழி வாங்கும் நோக்கத்தில், தனது அப்பாவை தோல்வியடைய செய்த வீரரின் மகனுடன் மோதி வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார் ஜெயம் ரவி.

இந்த இரு குழுக்களிடையே உள்ள பல ஆண்டுகால பகையை பயன்படுத்தி, அதை காசாக்க முயற்சிக்கும் தொலைக்காட்சி உரிமையாளரான பிரகாஷ்ராஜ், குத்துச்சண்டைப் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார். இந்த போட்டியில், தனது வெறியை தீர்த்துக்கொள்ள முடிவு செய்யும் ஜெயம் ரவி, தனது எதிராளியை கொல்லும் முயற்சியில் தாக்க, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆரம்பத்தில் வெறியுடன் இருக்கும் ஜெயம் ரவி, எதிராளியின் நிலையைப் பார்த்து மனம் மாறி, இனி குத்துச்சண்டையில் ஈடுபட மாட்டேன் என்று அறிவிக்கிறார்.

ஆனால், இந்த போட்டியை வைத்து பல கோடி ரூபாய்க்கு வியாபரம் செய்த பிரகாஷ்ராஜ், மீண்டும் ஜெயம் ரவியை குத்துச்சண்டையில் ஈடுபட வைக்க முயற்சிக்க, பிரகாஷ்ராஜின் வியாபார நோக்கத்தை புரிந்துக்கொள்ளும் ஜெயம் ரவி, தனது குத்துச்சண்டையை பிரகாஷ்ராஜ் பக்கம் திருப்ப, இறுதியில் வெற்றி பெற்றது குத்துச்சண்டை வீரர்களா? அல்லது தனியார் நிறுவனங்களின் வியாபார அரசியலா? என்பதை இயக்குநர் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

குத்துச்சண்டை என்பது சென்னையில் எப்படி உருவானது, அதுவும் வட சென்னையில் இந்த குத்துச்சண்டை போட்டிகள் வளர்ந்த விதம் என்று வரலாற்றோடு தொடங்குகிறது படம். திரைக்கதை குத்துச்சண்டையை மையமாக வைத்து அமைக்கப்பட்டாலும், விளையாட்டு போட்டிகளில் தனியார் நிறுவனங்களின் தலையீடு எந்த அளவுக்கு இருக்கிறது, அவர்களது நோக்கம் என்ன என்பதை இயக்குநர் புட்டுப்புட்டு வைக்கிறார்.

கட்டுமஸ்தான உடம்பு, வெறித்தனமான முகம் என்று ஜெயம் ரவி, முற்றிலுமாக தனது தோற்றத்தில் வித்தியாசத்தைக் காட்டியுள்ளார். ‘டான்ஸிங் பூலோகம்’ என்ற கதாபாத்திரத்தில் அவர் குத்துச்சண்டை போடும் விதமும், எதிராளிக்கு சவால் விடும் விதமும், ஜெயம் ரவி சபாஷ் போட வைக்கிறார்.

திரிஷாவுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அவரை வலுக்கட்டாயமாக சில காட்சிகளில் இயக்குநர் திணித்திருக்கிறார்.

தொலைக்காட்சி உரிமையாளர் வேடத்தில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ், தனது ரெகுலர் வில்லத்தனத்தை இந்த படத்திலேயும் காட்டியுள்ளார்.

ஜெயம் ரவியுடன் ரிங்கில் மோதும் வீரர்களில் ஆறடிக்கும் மேலான உயரத்தில் அமர்க்களமாக இருக்கும் ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸ், பார்ப்பதற்கே படுபயங்கரமாக இருக்கிறார். அவர் ஜெயம் ரவியுடன் மோதும் இறுதி சண்டைக்காட்சி அனைவரையும் சீட் நுனியில் அமரச் செய்கிறது.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் கேமரா, ஆக்‌ஷன் காட்சிகளை அமர்க்களமாக காட்டியுள்ளது. அதிலும் இறுதி சண்டைக்காட்சியை பரபரப்பு குறையாமல் படமாக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் சுமார் என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. எஸ்.பி.ஜனநாதனின் கம்யூனிச வசனங்கள் கைதட்டல் பெறுகிறது.

குத்துச்சண்டைப் போட்டி என்பது தான் கரு என்றாலும், வெறும் குத்துச்சண்டைப் போட்டியை மட்டுமே மையப்படுத்தாமல், அதை சுற்றி நடைபெறும் வியாபாரம், அதனால் பயனடையும் முதலாளிகள் என்று இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன், படத்தை சமூக சிந்தனையோடு படமாக்கியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் குத்துச்சண்டைப் போட்டியில் ஜெயம் ரவி காட்டும் ஆக்ரோஷம், முதல் போட்டிக்குப் பிறகு குறைவதைப் போல, படத்தின் சுவாரஸ்யமும் குறைகிறது. அதுவும் கல்லூரியில் அவரை மீண்டும் போட்டியில் மோத வைப்பதற்காக நடத்தப்படும் நாடகம், முழுக்க முழுக்க சினிமாத்தனமாக உள்ளது.

இருப்பினும், இரண்டாம் பாதியில் தொலைக்காட்சி நிறுவனங்கள், ஒரு நிகழ்ச்சியை வைத்து நடத்தும் வியாபாரத்தை வெட்ட வெளிச்சமாக காட்டும் விதம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. மொத்தத்தில் ‘பூலோகம்’ ஆக்‌ஷன் படமாக மட்டும் இன்றி, வியாபார அரசியல் என்றால் என்ன என்பதை காட்டும் படமாகவும் உள்ளது.