திரைப்பட கல்வி நிலையம் துவங்குகிறார் இயக்குனர் பாரதிராஜா!

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பல திரைப்படங்களை இயக்கி, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்று, தமிழ் திரையுலக இயக்குனர்களில் தனக்கெனத் தனி பாணியில் கதையுடன் எதார்த்த வாழ்வியலைப் புகுத்தி, தன்னுடைய படைப்புகளினால் தமிழ் சினிமாவிற்கு புதிய திசை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா.

பாக்யராஜ், ராதிகா சரத்குமார், கார்த்திக், ராதா, ரேவதி, கவுண்டமணி, ஜனகராஜ், காஜல் அகர்வால், பிரியா மணி, நெப்போலியன், ரஞ்சிதா, மணிவண்ணன், மனோபாலா, என்.வி.நிர்மல் குமார், சித்ரா லக்ஷ்மணன் என இவரிடம் திரைத் தொழிலை கற்று வந்தவர்கள் பற்றிய எண்ணிக்கையை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி போன்றோரின் நடிப்பில் புதிய பரிமாணத்தை கொண்டு வந்தவர் இயக்குனர் பாரதிராஜா என்று சொன்னால் மிகையாகாது.

திரைக்கலையின் தன்மையை மீண்டும் விரிவுப்படுத்தி அதன் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொடுக்க “பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்” எனும் புதிய திரைப்பட கல்வி நிலையத்தை துவங்க உள்ளார் பாரதிராஜா.

Acting

Cinematography

Editing & Compositing

Direction

Sound Design

Editing & VFX

Stunt Direction

Choreography

Production Designer (Art)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது கலைகளின் பயிற்சியினை மாணவர்களுக்கு அளிக்கவுள்ளது “பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்”.

இந்நிறுவனத்தின் கௌரவ ஆலோசகர்களாக பாரதிதாசன் பல்கலைக் க்ழக துணைவேந்தர் முத்துகுமார், இயக்குனர்கள் மகேந்திரன், மணிரத்னம், ப்ரியதர்ஷன், ராஜீவ்மேனன் கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகைகள் ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இன்றைய தலைமுறையின் முன்னோடிகளாய் விளங்கும் இயக்குனர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் அனுபவத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து இளைய தலைமுறைக்கு திரைக்கலையை சிறந்த முறையில் பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் விரைவில் வருகிறது “பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்”.