“வீரலட்சுமியிடம் எச்சரிக்கையாக இருங்கள்!”
“தமிழ்நாட்டின் முதல்வராகும் தகுதி எனக்கு இருக்கிறது” என்று சமீபத்தில் அறிவித்து அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியவர் ‘தமிழர் முன்னேற்றப் படை’யின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி. அதுமட்டும் அல்லாமல், பீப் பாடல் சர்ச்சையில் சிம்புவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதோடு, “சிம்புவை தமிழக காவல்துறை சிறையில் அடைத்தால், அவர் பிணையில் வெளியே வரும்பொழுது சிறை வாசலிலேயே அவருக்கு தமிழர் முன்னேற்றப் படை வரவேற்பு கொடுக்கும்” என்று மிரட்டலாக அறிவித்து தமிழகத்தில் மிகப் பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தி இருப்பவர்.
வடதமிழகத்தில் நாளொரு ஆர்ப்பாட்டம், பொழுதொரு போராட்டம், திரையுலகினருக்கு எதிராக ஏதாவதொரு காரணத்துக்காக தினம்தினம் ஒரு முற்றுகை என்று எப்போதும் சீனில் இருந்துவரும் வீரலட்சுமியை, விகடன் டாட்காம் சார்பில் ந.பா.சேதுராமன் என்ற நிருபர் சில நாட்களுக்குமுன் பேட்டி காணச் செல்கிறார்.
சென்னை, பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள வீரலட்சுமியின் ‘தமிழர் முன்னேற்றப் படை’ அலுவலகத்திற்கு செல்லும் வழியெல்லாம், ‘தலைவர் வீரலட்சுமி அழைக்கிறார்’ என ரகளை சுவரொட்டிகள். வீரலட்சுமியை சந்தித்ததும் அதையே முதல் கேள்வியாக கேட்கிறார் நிருபர்: “இவ்வளவு போஸ்டர்களை எப்படி வளைச்சு வளைச்சு ஒட்டியிருக்கீங்க? இதுக்கெல்லாம் ஏது காசு?”
வீரலட்சுமி பதில்: “அண்ணே.. அதுக்குன்னு ஒரு ஐவர் குழு இருக்குண்ணே. அவங்கதான் இதைச் சிறப்பாக செய்யறாங்க. அமைப்பின் பொதுச் செயலாளரான கணேசன் அண்ணா, இன்னும் நான்கு தம்பிகள்தான் அந்த அந்த சிறப்பான போஸ்டருக்கு பொறுப்பாளர்கள். படித்தவர்கள் முகநூல், வாட்ஸப்புன்னு டெக்னிக்கலா போயிடறாங்க. ஆனா, பாமர மக்கள்கிட்ட போஸ்டர் மூலமாத்தானே நம்ம கருத்துகளையும் செயல்பாட்டையும் கொண்டு போக முடியும். அதுக்காகத்தான் அவங்க பார்வை எங்கெல்லாம் இருக்குமோ, அங்கெல்லாம் எங்க அமைப்பின் போஸ்டர் ஒட்டப்படுது. அப்புறம்… செலவை எப்படி சமாளிக்கிறேன்னு கேட்டீங்கள்ல… நானும் நிறைய தம்பிகளும் எங்களின் லட்சியத்தை வென்றெடுக்க, எங்க சொத்துக்களை வித்து அந்தப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டுறோம். என் அப்பா சொத்துக்களை அவர் அனுமதியோட நான் செலவழிக்கிறேன். இன்னும் உணர்வுப்பூர்வமா பலர் நன்கொடை கொடுக்க காத்திருக்காங்க. ஆனா, யாரிடமும் கை நீட்டி காசு வாங்கி கட்சி நடத்தும் எண்ணமும் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை.”
ஆனால், வீரலட்சுமியின் இந்த கூற்றுக்கு முரணாக, அவர் தமிழ் உணர்வாளர்களிடம் ‘வசூல் வேட்டை’ மோசடியில் ஈடுபட்டு வருவதாக வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது:-
தமிழர் முன்னேற்றப் படை என்ற பெயரில் இயங்கும் வீரலட்சுமி என்ற பெண் சிறு சிறு தமிழர் ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டதைக் கண்டு, முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு நான் வரச்சொல்லி, பழ.நெடுமாறன் ஐயாவிடம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தி வைத்தேன்..
தொடர்ந்து நல்லெண்ணத்துடன் நட்பு பாராட்டிவந்தேன்.
இப்போது பீப் பாடல் விவகாரத்தில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக, சிம்புவை ஆதரித்து எனது குழுவில் அவர் பதிவு போட்டதைக் கண்டு, அதிர்ந்து போய், அவரை திருத்த இக்குழுவினருடன் சேர்ந்து அறிவுரை கூறிப் பார்த்தும் பயனில்லை என தெரியவந்தது…
சென்ற வாரம், ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய நடிகை எமி ஜாக்சனை ‘எந்திரன் 2’ படத்திலிருந்து நீக்கக் கோரி நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்து, “அதற்காக இரண்டு பேருந்துகள் வாடகைக்கு எடுக்க வேண்டும். அதற்காக பத்தாயிரம் ரூபாய் வேண்டும்” என என்னிடம் கேட்டு, வங்கி எண் அனுப்பினார்.
நான் யோசித்து, அந்த செய்தியைப் பகிர்ந்தேன்.
இதற்கிடையே, அவர் இதே கோரிக்கை வைத்து, தமிழர் நலம் பேரியக்க தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் அவர்களிடம் ரூ.10,000 க்கு காசோலை பெற்று, அதை பயன்படுத்தி ஒரு பைக் வாங்கிவிட்டதாக தெரிந்துவிட்டது.
மேலும், எனது பல நண்பர்களிடம் இதே காரணத்தைச் சொல்லி பத்தாயிரம், பத்தாயிரமாக கறந்திருப்பதாகவும் ஐயம் உள்ளது..
இது போல சில போராட்டங்களை அறிவித்து, தமிழ் உணர்வாளர்களிடம் பணம் கறப்பதை வாடிக்கையாக கொண்டவர் இவர் என சந்தேகம் எழுகிறது.
சிம்பு வீட்டாரிடம் தொகை பெற்றுக்கொண்டு பீப் பாடலை ஆதரிக்கிறாரோ என கடும் ஐயம் எழுகிறது….
இவரிடம் இனி எச்சரிக்கையாக இருங்க மக்கா…..
இப்படிக்கு
தமிழ் ராஜேந்திரன்
வழக்கறிஞர்
9789433344
இவ்வாறு தமிழ் ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.
யாருக்குத் தெரியும்… எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறதோ…!