நயன்தாரா தொடர்பாக தமிழ் திரையுலகம் பரம ரகசியமாக வைத்திருந்த விஷயம்!
சமீபகாலத்தில் தமிழ் திரையுலகில் மிகவும் ரகசியம் காக்கப்பட்ட விஷயம் அனேகமாக இதுவாகத் தான் இருக்கும். சிம்பு, வெங்கடேஷ் போன்ற பிரபல முன்னணி நடிகர்களுக்கு கூட “கூடுதலாக கால்ஷீட் தர மாட்டேன்” என்று கறார் காட்டும் நடிகை நயன்தாரா, விளம்பர வெளிச்சம் துளியளவும் பாய்ச்சப்படாத ஒரு புதிய தமிழ்படத்துக்கு ரகசியமாக கால்ஷீட் கொடுத்திருப்பதோடு, சத்தமில்லாமல் அப்படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நடித்தும் முடித்துவிட்டார். அது மீஞ்சூர் கோபி படம்!
மீஞ்சூர் கோபியை நினைவிருக்கிறதா?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் வெளியானபோது, அப்படத்தைவிட அதிகம் பேசப்பட்டவர் மீஞ்சூர் கோபி. “கத்தி’ படத்தின் கதை என் கதை” என்று பரபரப்பாக தொடர்ந்து பேட்டிகள் கொடுத்ததோடு, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தவர். அவர் தரப்பில் நியாயம் இருப்பதாக ஊடகவியலாளர்களூம், திரைத்துறையினரும்கூட ஒப்புக்கொண்டார்கள். ஆனால், ‘கட்டைப்பஞ்சாயத்து’ அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக தொடர்ந்து போராட இயலாமல், வழக்கை வாபஸ் பெற்று, மௌனமானார் மீஞ்சூர் கோபி. அதன்பிறகு அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
அந்தநேரத்தில் அவருக்கு கை கொடுத்தவர் தான் நயன்தாரா. இயக்குனராகும் லட்சியத்துடன் இருந்த மீஞ்சூர் கோபிக்கு, எந்த விளம்பரமும் இல்லாமல் கால்ஷீட் கொடுத்த நயன்தாரா, சத்தமில்லாமல் அப்படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நடித்தும் முடித்துவிட்டார்.
தண்ணீர் பிரச்சனையை மையமாகக் கொண்ட இப்படத்தில் மாவட்ட கலெக்டராக நடித்திருக்கிறார் நயன்தாரா. “நான் நயன்தாராவை அணுகி, இப்படத்தின் கதையைச் சொன்னேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப்போனதால் உடனே கால்ஷீட் கொடுத்தார். என் தயாரிப்பாளர் தயார் நிலையில் இருந்ததால், உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டோம். சென்னை புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது பெருமளவுக்கு படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டன” என்கிறார் மீஞ்சூர் கோபி.
“கத்தி’ திரைப்படம்கூட தண்ணீர் பிரச்சனையை மையமாகக் கொண்டது தானே?” என்று கேட்டால், “அதிலிருந்து இது வேறுபட்டது” என்று விளக்கம் அளிக்கிறார் மீஞ்சூர் கோபி. “தண்ணீர் பிரச்சனை எனும்போது, அதற்கு பல்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன. அவை சமூகம் சார்ந்ததாகவோ, அரசியல் சார்ந்ததாகவோ இருக்கலாம். என்னுடைய படம் அரசியல் சார்ந்தது. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையை உள்ளடக்கியது.”
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில், ‘காக்கா முட்டை’யில் சிறப்பாக நடித்து பிரபலமடைந்த சிறுவர்களான விக்னேஷூம், ரமேஷூம், நயன்தாராவோடு மிக முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ‘செங்காத்து பூமியிலே’, ‘டூரிங் டாக்கீஸ்’ படங்களில் நடித்த சுனு லட்சுமி, ‘சதுரங்க வேட்டை’யில் நடித்த ராமச்சந்திரன் ஆகியோரும் இதில் நடித்துள்ளார்கள்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கவனித்துக்கொள்ள, சண்டைப்பயிற்சி அளிக்கிறார் பீட்டர் ஹெயின்.
இப்படத்தில் பாடல்களே இல்லை; என்றபோதிலும், பின்னணி இசையமைக்க பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
‘கேஜெஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில் கோட்பாடி ஜெ.ராஜேஷ் இப்படத்தை தயாரித்து வருகிறார்