“பீப் பாடலை கேட்டு இயலாமையில் கண்ணீர் வடித்தேன்!” – பெண் கவிஞர்
“பீப் பாடலை இரண்டு வரிகள் மட்டுமே கேட்டு, காதைப் பொத்திக் கொண்டு கண்ணீர் வடித்த என் இயலாமை, அடுத்த தலைமுறைப் பெண்களுக்கேனும் வராமல் இருக்க, நாம் இது குறித்து பேசித்தான் ஆக வேண்டும்” என்று கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான சுமதிஸ்ரீ கூறியுள்ளார். அவரது பதிவு:-
சிம்பு -அனிருத் கூட்டணியில், பெண்களை மிக மோசமாக இழிவுபடுத்தும் பாடல் குறித்து பலரும் சொல்கிற ஒரு கருத்து, “நாமதான் பேசி, பேசி பெருசாக்குறோம். அதை கவனிக்காம நம்ம வேலையை பார்ப்போம்” என்பது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம், இந்த உலகில் நடக்கும் அத்தனை அநியாங்களுக்கும் காரணம் violence of the bad people அல்ல, silence of the good people தான் என்பதில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. ஆகையால், இது குறித்து நாம் பேசித்தான் ஆக வேண்டும்.
“கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா” என்று ‘முத்தம்’ என்ற வார்த்தையைக்கூட எழுத மறுத்து, அதை ‘கடன்’ என்று எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அதே சினிமா தான் இன்று கொஞ்சமும் குற்றவுணர்வின்றி, பாடல் வரிகளில் பெண்களை துகிலுரிக்கிறது.
நான் பள்ளியில் படிக்கும்போது, “சமைஞ்சது எப்படி” பாடலை பாடிக்கொண்டு, தெருவில் நின்று, பள்ளி மாணவிகளைக் கிண்டலடித்தவர்களுக்குப் பயந்துகொண்டு, நானும், என் தோழிகளும் வேறு பாதையில், ஒரு கி.மீ. சுற்றிக்கொண்டு பள்ளிக்குப் போவோம். இப்போது என் பிள்ளையின் காலத்தில் இந்த பீப் பாடல். ஏறக்குறைய ஒரு தலைமுறைக்குப் பின்னும், பெண்களை மதிக்காத, பெண் என்றாலே அவளை பகடி செய்ய வேண்டும், அதுதான் ஆண்மை என்று நினைக்கிறவர்களாகத் தான் ஆண்கள் இருக்கிறார்கள். அந்த தலைமுறை அப்பன்களின் பிள்ளைகள் தான் இவர்கள். பெண்களை மதிப்பவர்களாக, அடுத்த தலைமுறை ஆண் பிள்ளைகளை உருவாக்காமல் போனது தான் இந்த சமூகத்தின் மிகப் பெரிய தோல்வி.
பீப் பாடலை இரண்டு வரிகள் மட்டுமே கேட்டு, காதைப் பொத்திக் கொண்டு, கண்ணீர் வடித்த என் இயலாமை, அடுத்த தலைமுறைப் பெண்களுக்கேனும் வராமல் இருக்க, நாம் இது குறித்து பேசித்தான் ஆக வேண்டும்.
இவ்வளவு கேவலமான ஒரு பாடலை எந்த வெட்கமும், கூச்சமும் இன்றி, எழுதி, பாடி, சமூக வலைத்தளத்தில் உலாவ விட்டதோடு, “இணையத்தில்கூட தான் ஆபாச வீடியோக்கள் இருக்கின்றன, இதை ஏன் குறை சொல்கிறீர்கள்?” என்கிறார் சிம்பு. மழை வெள்ளத்தில், சென்னை மக்களை மீட்டெடுக்க இத்தனை இளைஞர்கள் இரவு பகல் பாராமல் களப்பணி செய்கிறார்களே, அதைப் போல் நாம் ஏன் செய்யக் கூடாது? என தோன்றவில்லை அவருக்கு. ஆனால், எல்லோரும் ஆபாச படம் பாக்குறாங்க; நானும் எழுதுறேன் என்று, சொல்லவும் கூசுகிற வார்த்தைகளைப் பாடலாக வடிக்கிறார். அதற்கு வக்கிரம், வன்மம் ஆகிய காரணங்களைத் தாண்டி, என்னை யார் என்ன கேட்க முடியும் என்கிற திமிர் தான் பிரதான காரணம்.
பாடலாசிரியராக நான் உணர்ந்த விசயம். இங்கே பெரும்பாலான பாடலாசிரியர்கள் தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொள்ள போராடுகிறார்கள். அதனால் தான் எப்படியும் எழுதத் துணிகிறார்கள். ‘தில்லையாடி வள்ளியம்மா, தில் இருந்தா நில்லடியம்மா’ பாடலை எத்தனை பேர் எதிர்த்தோம்? இன்றும் ஊடகங்களில் அந்த பாடல் ஒளி/லி பரப்பப்படுகிறதே… தில்லையாடி வள்ளியம்மா சுதந்திர போராட்ட வீராங்கனையாக இருந்தால் என்ன… காந்திக்கு குருவைப் போல் இருந்தால் தான் என்ன…. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அவள் ஒரு பெண்…. வெறும் பெண்…. அவ்வளவே தான். தில்லையாடி வள்ளியம்மையையே இழிவுபடுத்திய தமிழ் சினிமாவிற்கு முன் நீங்களும் நானும் ஆகிய நாமெல்லாம் எம்மாத்திரம்….
சிம்புவின் பாடலில், பெண் என்றாலே காதலித்து ஏமாற்றுபவள்… அவ்வளவு தான் பெண்…. அவள் கீழ்மையானவள்…. ஆனால், மூன்று உயிர்களைக் காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்த செங்கொடி, வேதாரண்யத்தில் வெள்ளத்தில் மாட்டிய பள்ளி வேனிலிருந்து எல்லாக் குழந்தைகளையும் காப்பாற்றிவிட்டு, தான் இறந்து போன சுகந்தி டீச்சர் என்ற பெண், இன்று வரை உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் சர்மிளா என்கிற பெண்…. இந்த இவர்களைப் போன்ற பெண்களை, இவர்களின் தியாகங்களை, தெரியவே தெரியாதா..?.
சுதந்திரம் என்பது எதை வேண்டுமானாலும் செய்வது அல்ல. எதை செய்யக் கூடாதோ, அதை செய்யாமல் இருப்பதும் தான். தான் சார்ந்து வாழும் சமூகத்தின் மீது அக்கறையும், பொறுப்புணர்வும் எல்லோருக்குமே அவசியம். இது என் சுதந்திரம் என்றெல்லாம் தப்பிக்க முடியாது..
சிம்புவின் இந்த பாடலும் ஈவ் டீசிங் தான். நம் எதிர்ப்பையும், கண்டத்தையும் பதிவு செய்தால் மட்டும் போதாது. தண்டனையும் பெற்றுத் தர வேண்டும். உடனே, “எல்லோரும் திருந்தி விடுவர்களா?” என்ற கேள்வி வரும். இல்லை தான். ஆனால், இனி இப்படியானதொரு இழிவை பெண்ணினத்திற்கு செய்யக் கூடாது, இல்லாவிடில், தண்டனை கிடைக்கும் என்கிற பயமாவது இருக்கும்.
உண்மையில், நாம் பேச வேண்டிய நேரம் இதுவே. பெண்களை மதிக்காத, பெண்களை ஏமாற்றுப் பேர்வழியாக, பெண்களை காதல் துரோகிகளாக மட்டுமே சித்தரித்து, அவர்களின் உறுப்புகளைச் சொல்லி, இழிவுபடுத்தும் எல்லோருக்கும் நம் கண்டனங்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்வோம்.
பின் குறிப்பு:
இந்த பதிவை போடும்போதே, “அதுக்கு ஏன் பொங்கல? இதுக்கு ஏன் பொங்கல?” என பின்னூட்டங்கள் வரும் என தெரியும். அப்படி வந்த பின்னூட்டங்களை நீக்கி உள்ளேன். இனியும் நீக்கப்படும்.
இப்போதாவது இந்த மக்கள், குறிப்பாக பெண்கள், ஆபாச பாடலுக்கு எதிராக குரல் உயர்த்துகிறார்களே என நினைப்பதுதான் சமூக அக்கறையே தவிர, “அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சீங்களா? இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சீங்களா?” என கேட்பது அபத்தம் என்பது என் தாழ்மையான கருத்து. நன்றி.
– சுமதிஸ்ரீ