பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் படம் ‘பேவாட்ச்’ தமிழில் வெளியாகிறது!
இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் நடித்த முதல் ஹாலிவுட் படமான ‘பேவாட்ச்’ ஜுன் மாதம் 2 தேதியன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகிறது.
இது குறித்து இப்படத்தை தமிழில் வெளியிடும் Huebox Studios Pvt Ltd நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
நடிகை பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த ‘தமிழன் ’என்ற படத்தின் மூலம் தான் முதன்முதலாக திரையுலகில் அறிமுகமானவர். கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும். இவர், தற்போது ஹாலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார்.
‘பேவாட்ச்’ என்பது ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றிப் பெற்ற பிரபலமான தொலைகாட்சி தொடர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை தழுவி அதே பெயரில் ஹாலிவுட் படம் ஒன்று தயாராகியிருக்கிறது. இந்த படத்தில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் வெய்ன் ஜான்சன், ஜாக் எஃப்ரான், அலெக்ஸான்டர் டட்டாரியோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சேத் கோர்டன் என்பவர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் அறிமுகமாகியிருக்கிறார்.
இந்த படத்தை உலகமெங்கும் பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஹாலிவுட்டில் இம்மாதம் 26ஆம் தேதியன்று வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் ஜுன் 2 ஆம் தேதியன்று வெளியாகிறது.
பாமர மக்கள் முதல் படித்த மக்கள் வரை பொழுதுபோக்கிற்கு ஏற்ற இடமாக இருப்பது கடற்கரை. அந்த கடற்கரையில் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ‘லைஃப் கார்ட்ஸ்’. இவர்களுக்கு கடலைப் பற்றிய பல நுட்பமான விசயங்களும், அரிய விசயங்களும் தெரியும். அத்துடன் தற்போது அறிமுகமாகியுள்ள நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, எதிர்பாராமல் ஆபத்தில் சிக்கும் மக்களை எந்தவித கடினமான சூழலாக இருந்தாலும் சாகசங்கள் செய்து காப்பாற்றியும் வருகிறார்கள்.
இந்த யதார்த்தமான நடைமுறை தொலைக்காட்சி தொடராக வெளியானபோது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதிலுள்ள முக்கியமான அம்சங்களை திரைக்கதையாக்கி, காமெடி மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் திரைப்படமாக உருவாகியிருப்பது தான் ‘பேவாட்ச்’.
இந்த படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளும், காமெடியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். கமர்சியல் எண்டர்டெயினராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா , விக்டோரியா லீட்ஸ் என்ற போதைமருந்து கடத்தும் கும்பலைச் சேர்ந்த பெண்ணாக முக்கியமான கேரக்டரில் அற்புதமாக நடித்திருப்பதுடன், ஆக்ஷன் காட்சிகளிலும் துணிச்சலுடன் நடித்திருக்கிறார். அத்துடன் ப்ரியங்கா சோப்ரா நடித்த ‘குவாண்டிகா ’என்ற தொலைகாட்சி தொடர் அமெரிக்காவில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதுடன் இவருக்கு ஏராளமான ரசிகர்களையும் உருவாக்கியிருக்கிறது. இந்த தொடரில் நடித்ததற்காகவே விருதுகளையும் இவர் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் நாயகனான வெய்ன் ஜான்சன், ராக் என்ற பெயரில் WWF போட்டிகளின் மூலமாக பெரிய அளவில் புகழ்பெற்றவர். அத்துடன் அண்மையில் இந்தியா முழுவதும் வெளியாகி பெரிய கமர்சியல் வெற்றியைப் பெற்ற ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரிஸ்’ என்ற ஹாலிவுட் படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இவருக்கும் இந்தியா உள்ளிட்ட உலகின் அனைத்து பகுதிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் முதன்முதலாக ப்ரியங்கா சோப்ராவுடன் இணைந்து நடித்திருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
இதனிடையே, இப்படத்தை வெளியிடும் நிறுவனமான Huebox Studios Pvt Ltd என்ற நிறுவனம் தான் லண்டனில் ஜுலை 8 ஆம் தேதியன்று இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பங்குபெறும் மாபெரும் இசை நிகழ்ச்சியை முதன்முதலாக நடத்தவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.