பயமா இருக்கு – விமர்சனம்
தற்போது தமிழ் சினிமா பயணித்துக்கொண்டிருக்கும் பாதைக்கு பொருத்தமாக இதுவும் ஒரு நகைச்சுவைப் பேய்ப் படம்தான். என்றாலும், படம் கொஞ்சம் ஸ்மார்ட்டாக சீரியஸாகவே ஆரம்பமாகிறது…
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் தீவு போல் தனியாக இருக்கும் ஒரு வீடு. அந்த வீட்டுக்குள் நாயகி ரேஷ்மி மேனன் நிறைமாத கர்ப்பிணியாக பிரசவ வலியில் கதறி துடித்துக்கொண்டிருக்கிறார்…
தமிழீழத்தில், இறுதிப்போரின் உச்சத்தில், பிடிபட்ட தமிழர்களையெல்லாம் உட்கார வைத்து சுட்டுக்கொன்று வெறியாட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். அப்படி கொல்லப்படுவதற்காக ஜெகன், லொள்ளு சபா ஜீவா, மொட்ட ராஜேந்திரன், பரணி ஆகிய நால்வரும் உட்கார வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கதையின் நாயகன் சந்தோஷ் பிரதாப், சிங்கள ராணுவத்தினரை தாக்கி வீழ்த்தி, தனது நண்பர்களான நால்வரையும் காப்பாற்றி அழைத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள மார்த்தாண்டம் வந்து சேருகிறார். அவரது மனைவி தான் நாயகி ரேஷ்மி மேனன். என்பது இப்போது தெரிய வருகிறது.
நான்கு நண்பர்களும் ஒரு வீட்டில் தங்க வைக்கப்படுகிறார்கள். அங்கு இருக்கும் அமானுஷ்ய சக்தி பயமுறுத்தும் தன் மிரட்டல் வேலைகளை ஆரம்பிக்க, கதை நகைச்சுவை பேய்ப்பட ட்ராக்குக்கு மாறுகிறது.
முதலில், அந்த வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்த கிழவிதான் பேய் என தோன்றுகிறது. பின்னர் கிழவி அல்ல, நாயகி ரேஷ்மி மேனன் தான் பேய் என தோன்றுகிறது. அதன்பின்னர், அவரும் அல்ல, சிங்கள ராணுவத்துடன் மோதி உயிரிழந்த நாயகன் சந்தோஷ் பிரதாப் தான் பேயாக வந்திருப்பதாக தோன்றுகிறது. இத்தனை காமெடி குழப்பங்களுக்குப்பின், பேயோட்டியாக வரும் கோவை சரளாவின் உதவியுடன், யார் உண்மையான பேய் என கண்டுபிடிக்கப்படுகிறது என்பது தான் படத்தின் கதை.
ஓர் அன்பான கணவனாகவும், உற்ற நண்பனாகவும் நாயகன் சந்தோஷ் பிரதாப் பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்பப் பெண்ணாக வரும் நாயகி ரேஷ்மி மேனனின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. ஜெகன், லொல்லு சபா ஜீவா, பரணி, . மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா ஆகியோர் கூட்டாக காமெடி பண்ணி சிரிக்க வைக்கிறார்கள்.
காதலுக்கு எல்லை இல்லை, பாசத்திற்கு அளவு இல்லை. யார் என்ன சொன்னாலும் நம்மை நேசிக்கும் ஒருவர் உயிரோடு இல்லை என்றாலும் நம்மோடு இருக்கவே ஆசைப்படுவார் என்பதை இக்கதையின் மூலம் பயத்துடன் கூற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பி.ஜவகர். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது.
சி.சத்யாவின் பின்னணி இசை ஓரளவுக்கு பயத்தை உண்டாக்குகிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். மகேந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
`பயமா இருக்கு’ – பார்க்கலாம்!.