ஆளுநராக பதவி ஏற்றார் புரோகிதர்: காவி மலர்கொத்து கொடுத்து வாழ்த்தினார் பழனிசாமி!

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக 11 மாதங்கள் இருந்த மராட்டிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று (வியாழக்கிழமை) விடைபெற்றுச் சென்றதை அடுத்து, தமிழகத்தின் 20-வது ஆளுநராக இன்று (வெள்ளிக்கிழமை) காலை பதவி ஏற்றார், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பன்வாரிலால் புரோகிதர். (‘மோதி’க்கு தமிழ் ‘மோடி’; ‘தீட்சித்’துக்கு தமிழ் ‘தீட்சிதர்’; அந்த வகையில் ‘புரோகித்’துக்கு தமிழ் ‘புரோகிதர்’. நமக்கு தமிழ் முக்கியம் அல்லவா?)

ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பன்வாரிலாலுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிநிற பூக்கள் அடங்கிய மலர்கொத்தை பன்வாரிலாலுக்கு கொடுத்து வாழ்த்தினார். (ஜெயலலிதா இருந்த வரை அவர் பங்கேற்ற அரசு விழாக்களிலும், அழைப்பிதழ்கள் உள்ளிட்ட அனைத்திலும் பச்சை நிறத்தின் ஆதிக்கம் இருந்தது. தற்போது பழனிசாமி – பன்னீர்செல்வம் ஆட்சியில் பச்சை நிறம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அரசு விழாக்களிலும், அழைப்பிதழ், விளம்பரம், கார் பாஸ் உள்ளிட்ட அனைத்திலும் காவி நிறமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே பன்வாரிலாலுக்கு இன்று காவி மலர்கொத்து வழங்கினார் பழனிசாமி.)

இப்பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று பன்வாரிலாலுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.