மோடி ஆட்சியில் 9 மாதங்களில் வங்கிகளில் நடந்த மோசடி ரூ.18ஆயிரம் கோடி!

2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வங்கிகளில் நடந்த மோசடிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐசிஐசிஐ முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இரண்டாவது இடத்தில் உள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதத்தில் ஐசிஐசிஐ வங்கியில் 1 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேலான தொகைக்கு மோசடி நடந்ததாக பதியப்பட்டுள்ள மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 455-ஆக உள்ளது. இதேபோல் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை எஸ்பிஐ வங்கியில் 429-ஆகவும், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியில் 244-ஆகவும், ஹெச்டிஎப்சி வங்கியில் 237-ஆகவும் உள்ளது.

இதே காலக்கட்டத்தில் ஆக்ஸிஸ் வங்கியில் 189 மோசடி வழக்குகளும், பாங்க் ஆப் பரோடாவில் 176 மோசடி வழக்குகளும், சிட்டி வங்கியில் 150 மோசடி வழக்குகளும் நடந்துள்ளன.

இருப்பினும் மோசடிகளின் மதிப்பு அடிப்படையில் பார்க்கையில் எஸ்பிஐ வங்கியில் ரூ.2,236.81 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளன. அடுத்ததாக பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.2,250.34 கோடிக்கும், ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.1998.49 கோடிக்கும் மோசடிகள் நடந்துள்ளன.

இந்த பட்டியலை நிதி அமைச்சகத்திடம் ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. இந்தப் பட்டியல் மட்டுமல்லாமல் மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகளின் பட்டியலையும் அளித்துள்ளது.

மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் பொறுத்தவரை எஸ்பிஐ வங்கியில் 64 அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஹெச்டிஎப்சி வங்கியில் 49 அதிகாரிகளும் ஆக்ஸிஸ் வங்கியில் 35 அதிகாரிகளும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை சேர்த்து மொத்தம் 450 வங்கி அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மொத்தம் 3,870 மோசடிகள் வங்கிகளில் நடைபெற்றுள்ளன. இந்த மோசடிகளின் மொத்த மதிப்பு ரூ. 17,750.27 கோடி என்றும் தெரியவந்துள்ளது.