அரசுப்பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த வங்கி பெண் ஊழியர்!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2024/01/0a1a-16.jpg)
அரசுப்பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த வங்கி பெண் ஊழியரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார் மதுரை எம்பி சு.வெங்கடேசன்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலை பார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி (30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.
இதையடுத்தது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், ஆயி என்ற பூரணத்தை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆயி என்ற பூரணத்தை அவர் பணிபுரியும் வங்கிக்கே சென்று வங்கி ஊழியர்கள் மத்தியில் பாராட்டி பேசியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள எம்பி சு.வெங்கடேசன் கூறியிருப்பதாவது:
“வாரி எடுப்பதே வாழ்வின் இலட்சியம்” என இருப்பவர்களுக்கு மத்தியில் “வாரிக் கொடுப்பதே வாழ்வின் பயன்” என மதுரை – கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு ரூ 4 கோடி மதிப்பிலான தனது நிலத்தை கொடையாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாளை சந்தித்து வாழ்த்தி, வணங்கி மகிழ்ந்தேன்.
ஆயி பூரணம் அம்மாவின் கைகளை பற்றிக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு மக்கள் பிரதிநிதி இல்லை. அள்ளிக் கொள்வதற்கென்று நிறைய கைகள் உள்ளது. ஆனால் அள்ளிக் கொடுப்பதற்கு என்று சில கைகள் தான் உள்ளது! முதல் நாள் சுமார் 4 கோடி மதிப்புள்ள நிலத்தை கல்வித் துறைக்கு கொடையாக அளித்துவிட்டு மறுநாள் வங்கியில் கிளார்க் வேலையை சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கும் ஆயி பூரணம் அம்மாளின் கரங்களைப் பற்றி வணங்கினேன்.
நான் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்குதல் எனது கடமையென நினைக்கிறேன். மதுரையில் இதுபோன்று நல்ல செயல்களில் ஈடுபடுகிறவர்களை தொடர்ந்து பார்க்க முடிகிறது. சில மாதங்களுக்கு முன் தத்தனேரியைச் சார்ந்த வத்தல் வணிகர் இராஜேந்திரன், திரு.வி.க. மாநகராட்சிப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். அதேபோல் தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையா வெள்ளிவீதியார் பெண்கள் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட 25 லட்ச ரூபாய் வழங்கினார்.
இப்பொழுது ஆயி பூரணம் அம்மாள் கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூபாய் 4 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். இதனுடைய சந்தை மதிப்பு 7.50 கோடி ஆகும். நடுநிலைப் பள்ளியாக உள்ள இந்த அரசுப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு இந்த நிலத்தை கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த இடத்தையும் பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் பதிவு செய்து கொடுத்துவிட்டு சத்தம் இல்லாமல் வந்து கனரா வங்கியில் ஊழியராக தனது அன்றாடப் பணி செய்து கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான மாணிக்கங்கள்.
இந்த உலகத்தில் பணம்தான் மிகப் பெரியது என்று பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதைவிட பெரியது இந்த உலகில் நிறைய உண்டு. ஆயி பூரணம் அம்மாளின் செயல் அதைத்தான் இந்த உலகிற்கு உரத்து சொல்கிறது. இவர்களுடைய உயர்ந்த எண்ணத்தை குணத்தை கொண்டாட வேண்டிய நேரம் இது” என்று நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.