பிரபல ஆன்மீகவாதி பங்காரு அடிகளார் காலமானார்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி கோயிலும் ஒன்று. இந்த கோயிலின் நிறுவனராகவும், தலைமை ஆன்மீகவாதியாகவும் இருந்தவர் பங்காரு அடிகளார். பக்தர்களும், இவரை பின்பற்றுபவர்களும் அன்புடன் ’அம்மா’ என்றே அழைத்து வந்தனர்.
பங்காரு அடிகளாரின் ஆதிபராசக்தி கோயிலுக்கு தமிழ்நாடு மட்டும் அல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
இந்த கோயிலுக்கு பொதுவாக பெண் பக்தர்கள் அதிகம். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், கோயிலுக்குள் – குறிப்பாக கருவறைக்குள் பெண்கள் செல்லக் கூடாது கட்டுப்பாடு பரவலாக இருந்து வரும் நிலையில், பெண்கள் கருவறைக்கு நேரடியாக சென்று அபிஷேகம் செய்யலாம் என்ற ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார். மாதவிடாய் நாட்களில் கூட பெண்கள் கருவறைக்குச் செல்லலாம் என வழிபாட்டுத் தலங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர். மேலும், சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு ஆண்கள் மாலை அணிந்து இருமுடி கட்டிக்கொண்டு செல்வதைப் போல், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு பெண்கள் மாலை அணிந்து இருமுடி கட்டிக்கொண்டு சென்று, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொள்ள வழி வகுத்திருக்கிறார்.
மேல்மருவத்தூரைச் சேர்ந்த பங்காரு அடிகளார், பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் வசித்த பகுதியில் அருள்வாக்கு சொல்வதில் தொடங்கி, ஆதிபராசக்தி மன்றத்தை நடத்தி பிரபலமடைந்தார். ஆதிபராசக்தியின் அவதாரமாக தன்னை அறிவித்துக் கொண்டதால் அவருக்கு பக்தர்கள் அதிகரிக்கத் தொடங்கினர்.
பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1966ஆம் ஆண்டு துவக்கினார். மெல்ல மெல்ல இந்த ஆலயம் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்ளை ஒருங்கிணைத்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் என துவக்கபட்டது. தைப்பூசம் நாட்களில் 48 நாட்கள் சிறப்பு பூஜை மேற்கொண்டு, அதனைத் தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு அளிப்பது வழக்கம்.
ஆதி பராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களை அவர் நடத்தி வந்தார். அவரது சேவையை பாராட்டி கடந்த 2019ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாகவே சற்று உடல் நல குறைவில் இருந்துவந்த பங்காரு அடிகளார் நேற்று (அக்டோபர் 19ஆம் தேதி) மாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.