பனாரஸ் – விமர்சனம்

நடிப்பு: ஜையீத் கான், சோனல் மோண்டோரியோ, சுஜய் சாஸ்திரி, அச்யுத் குமார் மற்றும் பலர்

இயக்கம்: ஜெயதீர்த்தா

இசை: அஜனீஷ் லோக்நாத்

ஒளிப்பதிவு: அத்வைதா குருமூர்த்தி

படத்தொகுப்பு: கே.எம்.பிரகாஷ்

தயாரிப்பு: திலக்ராஜ் பல்லால் & முசம்மில் அகமது கான்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

ஓர் உணர்ச்சிகரமான காதல் கதையில் டைம் மிஷின், டைம் ட்ராவல், டைம் லூப் போன்ற அறிவியல் புனைவுகளையும், அவற்றுக்கான வேதியியல் மற்றும் உளவியல் காரணங்களையும் இணைத்து சுவாரஸ்யப்படுத்தினால், அது தான் ‘பனாரஸ்’ திரைப்படம்.

மிகப்பெரிய தொழிலதிபரின் செல்லப்பிள்ளை நாயகன் சித்தார்த் (ஜையீத் கான்). வாழ்க்கையை ஜாலியாகவும், கொண்டாட்டமாகவும் வாழும் கல்லூரி மாணவன்.

அதே கல்லூரியில் பயிலும் மாணவி தனி ( சோனல் மோண்டோரியோ). சிறந்த குரல்வளம் கொண்டவள். பெரிய பாடகி ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவள். பெற்றோர்களை இழந்தவள். சொல்லுகிற விதமாய் சொன்னால் எதையும் நம்பிவிடக்கூடிய வெள்ளை மனம் கொண்டவள்.

விளையாட்டாக நண்பர்களிடம் விட்ட சவாலில் வெற்றி பெறுவதற்காக சித்தார்த் செய்யும் ஒரு தவறு, தனியின் வாழ்க்கையில் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் அவள் தனது கல்லூரி படிப்பையும், தனது லட்சியத்தையும் பாதியில் விட்டுவிட்டு காசி என்ற பனாரஸில் உள்ள தனது சித்தி – சித்தப்பா வீட்டுக்கு சென்றுவிடுகிறாள்.

தவறை உணர்ந்த சித்தார்த், தனியை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காக பனாரஸ் செல்கிறான். அங்கு அறிமுகமாகி நண்பனாக மாறும் சாம்பு (சுஜய் சாஸ்திரி) என்ற டெத் போட்டோகிராபரின் உதவியுடன் அவன் பனாரஸ் முழுவதும் தனியைத் தேடி அலைகிறான்.

ஒருவழியாய் தனியை கண்டுபிடித்து அவளை சந்தித்து, கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்புக் கேட்டு, அவள் இதயத்தில் இடம் பிடிக்கும் சித்தார்த், திடீரென்று உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறான். தனது பிரச்சனைக்கான தீர்வை தேடி அலையும் அவன், தனி மற்றும் அவளது சித்தி – சித்தப்பாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதையும் தெரிந்துக்கொள்ள, அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறான்.

தனியையும், அவளது சித்தி – சித்தப்பாவையும் சித்தார்த் காப்பாற்றினானா? தனது உளவியல் ரீதியான சிக்கலில் இருந்து அவன் எப்படி மீண்டான்? என்பது மீதிக்கதை.

0a1k

நாயகன் சித்தார்த்தாக வரும் ஜையீத் கான், அறிமுக நடிகர் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் கதைக்கு ஏற்ற லவ்பாயாக உணர்ச்சிகரமாக நடித்து நம் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார். அவருக்கு திரையுலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

நாயகி தனியாக வரும் சோனல் மோண்டோரியோ, பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப்பெண் போல் பழக்கப்பட்ட அழகுடன் இருக்கிறார். நாயகனின் நடிப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் திறம்பட நடித்திருக்கிறார்.

சாம்பு என்ற டெத் போட்டோகிராபர் வேடத்தில் வந்து காமெடி பண்ணி, கலகலப்பூட்டி சிரிக்க வைக்கும் சுஜய் சாஸ்திரி, அவ்வப்போது அற்புதமான தத்துவக் கருத்துகளைச் சொல்லி சிந்திக்கவும் வைக்கிறார்.

நாயகியின் சித்தப்பாவாக வரும் அச்யுத்குமார், அவரது மனைவியாக வரும் நடிகை உள்ளிட்ட இதர நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் தத்தமது கதாபாத்திரத்துக்கு ஏற்ற இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஜெயதீர்த்தா, காதல் கதையை முற்றிலும் வித்தியாசமான அம்சங்களுடன் விறுவிறுப்பாக சொல்லியிருப்பதோடு, மொழி வேறுபாடின்றி அனைத்து  மாநில ரசிகர்களும் ரசிக்கும்படி பான் இந்தியா படமாகக் கொடுப்பதில் வெற்றி பெற்றுள்ளார்.

அத்வைதா குருமூர்த்தியின் ஒளிப்பதிவு, அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பு, கே.எம்.பிரகாஷின் படத்தொகுப்பு படத்துக்கு பலம்.

‘பனாரஸ்’ – இளசுகளின் காதல், நேர்த்தியான மேக்கிங் மற்றும் இயக்கம் ஆகியவற்றுக்காக பார்த்து ரசிக்கலாம்!