‘நீட்’ எனும் சூது!
இந்திய கல்வித்தர பட்டியலில், மனிதவள மேம்பாடு பட்டியலில், மருத்துவ நலத்துறை செயல்பாடுகளில், இன்னும் பல முதலீடு, தொழில்வளம் போன்ற இன்னபிற பட்டியல்களில் (பிள்ளைப் பேறு வளர்ச்சி தவிர்த்த) கடைசி இடங்களுக்கே போட்டியிடும் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பிகார், மத்தியப்பிரதேசம் போன்றவை ‘ நீட்’ தேர்வில் முந்தி முன்னிடம் வகிப்பதை சந்தேகிக்காமல் என்ன செய்யலாம்.
மனிதவளம் மற்றும் கல்விவளம் குன்றிய மாநிலத்தில் ‘நீட்’ தேர்வு மட்டும் எப்படி சிறப்பாக நடக்கிறது. என்ன வித்தை இது. தெரிந்த வித்தை தான். அதுதான் 85% மருத்துவக் கல்லூரி இடங்கள் அந்தந்த மாநிலத்தவர்க்குத் தானே, இந்த ‘கவ் பெல்ட்’ மாணவர்கள் தேர்ச்சியால் பிறருக்கென்ன பாதிப்பு என்பீர்கள்? சரிதான்.
ஒட்டுமொத்த இந்தியக் கல்லூரிகளில் 15% ஒதுக்கீடு எண்ணிக்கை என்ன குறைவா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றால், அநேகமாக ‘இந்த மாநில மாணவர்கள்’ நமது கல்லூரிகளின் அந்த 15% ஒதுக்கீட்டை நிறைந்து இருப்பர். இது உறுதி. அதீதமான கற்பனை என்று புறந்தள்ள முயல வேண்டாம். சங்கிகள் இன்னும் கீழான சதிகள் செய்ய வல்லவர்கள் என்பதை வரலாறு சொல்கிறது. தகவல் இல்லை என்பதுதானே இப்போதைய ஒரே பதில். தமிழ்நாட்டு மாணவர்கள் எத்தனை பேர் வெளிமாநிலங்களில் நீட் எழுத வைக்கப்பட்டனர் என்ற தகவலே இல்லை சிபிஎஸ்இ யிடம் . இந்தத் தகவலா கிடைத்து விடும்?
நீட் தேர்வால் தரம் உயரும் என்பது முற்றிலுமாக பொய் என நிறுவ, இந்த ராஐஸ்தான், உபி, பிகார் வெற்றி போதும். ஆனால் அதனால் லாபமடைவது சிபிஎஸ்இ, நீட் பயிற்சி மையங்கள் மற்றும் இந்தி மாநிலங்கள். ஆம் , இந்தி மாநிலங்கள்தானே இந்தியா, மற்றபடி தெற்கெல்லாம் அவர்களது காலனி.
நீட் தேர்வில் 35 வது இடம் தமிழ்நாட்டிற்கு. அரசு மருத்துவக் கல்லூரி இடங்களை அநேகமாக ‘பத்ம சேஷாத்திரி’ (சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள்) களே நிறைத்து இருக்கும். தகவல் கேட்டால் சொல்லவா போகிறது ‘ கிரிஜா வைத்தியநாதன் அரசு’ . ‘மேற்படி கேட்பு பற்றிய தகவல் அரசின் வசம் இல்லை‘ என்று பதிலளித்து விட்டால், தகவல் கேட்கும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியாகிவிட்டதாகிறது .
அதுதான் சுமந்த் சி.ராமன் ஆறுதல் சொல்லி விட்டாரே, தமிழ்நாடு அடுத்த ஆண்டு 39 % ல் இருந்து 49% முன்னேறிவிடும். அதாவது இன்னும் பத்து ஆண்டுகளில் தரம் உயர்ந்த ‘இந்தி மாநிலங்கள் (!)‘ அளவிற்கு வளர்ந்து விடுவோம். மிக்க மகிழ்ச்சி. எப்படியான வளர்ச்சி… ஆகா, நீட் எனும் சமப்படுத்தும் கருவி. NEET is a leveller. எப்படி? இந்தி மாநிலங்களை வளர்த்து சமன்படுத்துவது கடினம். எனவே ‘வளர்ந்த மாநிலங்களை’ மண்டையிலடித்து மட்டம் குறைக்கும் எளிமையான வழி.
#Ban NEET
SUBAGUNA RAJAN