பலே வெள்ளையத் தேவா – விமர்சனம்

1990க்குப்பின் நிகழ்ந்துவரும் உலகமயமாக்கம், தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் ஆகிய “மாக்கங்கள்” காரணமாக, நவீன தொழில்நுட்பங்கள் ஊடுருவி பாய்ந்திருக்கும் கிராமம் – வயலூர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருப்பதாகச் சொல்லப்படும் இந்த கிராமத்தில் தான் இப்படத்தின் கதை நடக்கிறது…

போஸ்ட் மாஸ்டர் கம் போஸ்ட் உமனாக வேலை பார்க்கும் ரோகிணி, தனது ஒரே மகன் சசிகுமாருடன் வயலூர் கிராமத்துக்கு மாற்றலாகி வருகிறார். அங்கே குழந்தை பாக்கியம் இல்லாத சங்கிலி முருகன் – கோவை சரளா தம்பதியரிடம் பாசமாகப் பழகி அவர்களது அன்புக்கு பாத்திரமாகும் சசிகுமார், கறிக்கடைக்காரரான பாலாசிங்கின் மகள் தான்யா ரவிச்சந்திரனை காதலிக்கிறார்.

அந்த ஊரில் கேபிள் டிவி இணைப்பகம் நடத்தி வருகிறார், பஞ்சாயத்து துணைத் தலைவரும் வில்லனுமான வளவன். சசிகுமாரோ, அவரிடம் இணைப்பு பெற தேவையில்லாத வகையில் டிஷ் ஆண்டெனா வைத்திருக்கிறார். இதனால் வளவனுக்கும், சசிகுமாருக்கும் மோதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாற, சசிகுமார் மீது வழக்கு பாய்கிறது. விளைவாக, சசிகுமார் சிறை செல்ல, அவருடைய அரசாங்க உத்தியோக கனவு கேள்விக்குறி ஆகிறது

இந்நிலையில், சசிகுமார் – தான்யா காதலை, தான்யாவின் தந்தை பாலாசிங் எதிர்க்கிறார். வளவன், பாலாசிங் ஆகிய இருவரது எதிர்ப்புகளையும் சமாளித்து, சசிகுமார் எப்படி தன் காதலியை கைபிடிக்கிறார் என்பது மீதிக்கதை.

இந்த படத்தில் வெட்டரிவாள், வேல் கம்பு என எந்த கொலைக்கருவியையும் தூக்காமல், அதிபயங்கர ஆக்சன் என்று அச்சுறுத்தாமல், ரத்தம் தெறிக்கவிடாமல், பாமர ரசிப்புக்கு உரிய காமெடி பாணிக்கு சசிகுமார் மாறியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். தனது ஸ்டைலில் காதலிப்பது, அன்பைப் பொழிவது, வில்லனை நொறுக்குவது, அம்மாவுக்குப் பாசமான பிள்ளையாக இருப்பது என்று சசிகுமார் தனது பாத்திரத்தை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.

அறிமுக நாயகி தான்யா ரவிச்சந்திரனுக்கு நாயகனை முதலில் முறைப்பதும், பின்னர் காதலிப்பதுமான வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின் வேலைதான். ஆனாலும் கொடுக்கப்பட்ட வேலையை ஓரளவு சரியாகவே செய்திருக்கிறார். அழகாகச் சிரிப்பது, தேவையான அளவுக்கு நடிப்பது என்று அனைவரையும் கவர்ந்துவிடுகிறார்.

‘செல்பி காத்தாயி’ஆக வரும் கோவை சரளா ஆன்லைனில் பொருட்களை விற்பவர்களை படுத்தும் பாடு இருக்கிறதே… ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான சிரிப்பு ரகம். அவருக்கு ஈடு கொடுத்து அவரது கணவராக நடித்துள்ள சங்கிலி முருகனும் காமெடியில் அசத்துகிறார்.

சசிகுமாரின அம்மாவாக வரும் ரோகிணியின் பாந்தமான நடிப்பு நிறைவாக இருக்கிறது. தன்னிடம் கேபிள் டிவி இணைப்பு வாங்காதவர்களை அடித்து நொறுக்கும் வில்லனாக படம் முழுவதும் வருகிறார் வளவன். போலீஸ் ஊருக்குள் வரும்போதெல்லாம் பாலசிங் ஏன் அரிவாளை தூக்கி வைத்துக்கொள்கிறார் என்பதற்கான பிளாஷ்பேக் அருமை.

‘கிடாரி’ படத்திற்கு இசையமைத்த தர்புகா சிவா தான் இதிலும் இசையமைத்துள்ளார். பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை ரகம். ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவில் கிராமத்தின் எதார்த்த அழகு பளிச்சிடுகிறது.

பத்தாம்பசலியாய் இருந்த கிராம மக்களின் வாழ்க்கையில் இன்றைய நவீன்தொழில் நுட்பங்கள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதை தொட்டுக் காட்டியதற்காக அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷை பாராட்டலாம். எனினும் கேபிள் டிவி இணைப்பு vs டிஷ் ஆண்டெனா என்பதை கதையின் அடிப்படை பிரச்சனையாக வைத்திருப்பது பலவீனம். இது காமெடி படம் என்பதால், காமெடி சமாச்சாரங்களில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

‘பலே வெள்ளையத்தேவா’ – ஜனரஞ்சக வெள்ளையத்தேவா!