“இனி ஒரு வார்த்தை பேசினால்…” – பாரதிராஜாவுக்கு பாலா இறுதி எச்சரிக்கை!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘கைரேகைச் சட்டம்’ என்ற ‘குற்றப்பரம்பரை’ சட்டம் பற்றியும், அதனை எதிர்த்து உசிலம்பட்டியை அடுத்துள்ள பெருங்காமநல்லூரில் நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு பற்றியும் ‘குற்றப்பரம்பரை’ என்ற பெயரில் ஒரு படம் எடுக்க நினைத்தார் பாரதிராஜா. ஆனால் அவரால் அது முடியாமல் போனது.
இந்நிலையில் இதே பிரச்சனையை மையமாக வைத்து, இதே தலைப்பில் பாலா ஒரு படம் எடுக்கப்போவதாக ஊடகங்களில் தகவல் கசிந்ததும், பாரதிராஜா சில நாட்களுக்குமுன் அவசர அவசரமாக ‘குற்றப்பரம்பரை’ படத்துக்கு பெருங்காமநல்லூரில் பூஜை போட்டார். இந்த படவிழாவில் பாலா பற்றி இப்படத்தின் கதாசிரியர் ரத்தினகுமார் மிகவும் தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், இன்று வெளியான ‘குமுதம்’ வார இதழில், பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதாசிரியர் ரத்தினகுமாரின் பேட்டி ‘கதை திருடி வேலா! வேடிக்கை பார்க்கும் பாலா!’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது. இதனால் ஆவேசம் அடைந்த பாலா, இதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குற்றப்பரம்பரை என்பது நடந்த வரலாறு. இதை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம். நான் மட்டும்தான் படமாக்குவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அப்படிச் சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.
பாரதிராஜா எடுக்கும் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதையும், நான் இயக்கப்போகும் புதிய படத்தின் கதையும் வேறு வேறு. பாரதிராஜா வரலாற்றை படமாக எடுக்க பூஜை போட்டிருக்கிறார். ஆனால் நான் வேல.இராமமூர்த்தி எழுதிய ‘கூட்டாஞ்சோறு’ நாவலிலிருந்து சிலவற்றை எடுத்து, அதில் என்னுடைய கற்பனையை கலந்து உருவாக்கியிருக்கும் கதையை படமாக்க இருக்கிறேன்.
நான் எடுக்க இருப்பது கதை. பாரதிராஜா எடுக்க இருப்பது வரலாறு. பாரதிராஜா இயக்கும் படத்தின் பெயர் தான் ‘குற்றப்பரம்பரை’. என்னுடைய படத்தின் பெயர் வேறு. அதை பின்னர் அறிவிப்பேன்.
இவற்றையெல்லாம் பாரதிராஜாவிடம் பலமுறை தெரியப்படுத்தியும் அவர் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை. ‘இது என் கனவுப் படம், நீ எடுக்கக்கூடாது’ என்றார் பாரதிராஜா. நான் உங்கள் கதையை, டைட்டிலை எடுக்கவில்லை என்றேன்
அதன்பின்னர், “பாலா என் எச்சிலை தின்ன மாட்டான் என நம்புகிறேன்” என்று பாரதிராஜா பேட்டி கொடுத்தார். ரொம்ப எரிச்சலானேன். அவருக்கு வயதாகிவிட்டது, குழந்தை மாதிரி நினைத்துக்கொள்வோம் என விட்டுவிட்டேன். இப்போது அந்த படத்துக்கு கதை எழுதுகிற ரத்தினகுமார் என்பவன் கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறான். திரும்ப திரும்ப ரத்தினகுமாரை எனக்கு எதிராக பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார். இனிமேலும் நான் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்றுதான் இந்த பிரஸ்மீட்.
எனக்கு படம் எடுக்க தெரியாது என்றும், பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்துவிடு என்றும் ரத்தினகுமார் கூறியுள்ளான். நான் பாலுமகேந்திராவிடம் மட்டுமே இதுவரை உதவிஇயக்குனராக பணிபுரிந்துள்ளேன். அவரை தவிர வேறு யாரையும் நான் குருவாக ஏற்றுக்கொள்ள கூடாது என்பதில் தெளிவாக இருந்தவன். அதற்காக பல நாட்கள் பட்டினி கிடந்தவன். அவனுக்கு (ரத்தினகுமாருக்கு) என்னைப் பற்றி பேச அருகதையே இல்லை.
இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு விசயத்தை இப்போது சொல்கிறேன். நான் ‘பிதாமகன்’ ஷூட்டிங் முடிந்து, தங்கி இருக்கும் அறைக்கு திரும்பியபோது என்னை வழிமறித்து, பாரதிராஜா பரம்பரையையே தவறாக பேசி, ‘அவன் படம் எடுக்க மாட்டான். என்னுடைய கதையை வைத்து நீ படம் எடு’ எனக் கூறிய கீழ்த்தரமானவன் தான் ரத்தினகுமார். இன்று அவனை என்னைப் பற்றி தவறாக பேசவிட்டு, பாரதிராஜா வேடிக்கை பார்க்கிறார்.
பாரதிராஜா, ரத்தினகுமார் ஆகிய இருவரும் என்னைப் பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை 4 முறை என்னைப் பற்றி அவர்கள் பேசும்போது பொறுமையாக இருந்துவிட்டேன். இனிமேல் பொறுமையாக இருக்க முடியாது. இதற்கு மேலும் அவர்கள் ஒரு வார்த்தை இது சம்பந்தமாக என்னைப் பற்றி பேசினால், அது அவர்களுக்கு நல்லதல்ல. இது என் இறுதி எச்சரிக்கை.
இவ்வாறு பாலா காட்டமாக கூறினார்.
பாலாவின் முழுமையான பேச்சு – வீடியோ:
https://youtu.be/2HvM3QQ-hxg