மோடி. அமித்ஷா “சோலியை முடிப்பது” பற்றி பேசிய வழக்கில் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன்!

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் “சோலியை முடிப்பது” பற்றி பேசிய அவதூறு வழக்கில் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 29ஆம் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்றார் நெல்லை கண்ணன். அப்போது அவர் மோடி, அமித்ஷா ஆகியோரின் “சோலியை முடிப்பது” பற்றி அவதூறாக பேசியதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து நெல்லை கண்ணன் மீது 5 பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கடந்த 1ஆம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவரை வரும் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்குநெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நசீர் அகமது இன்று (ஜனவரி 10ஆம் தேதி) ஜாமீன் வழங்கினார். ஜாமீன் உத்தரவு கிடைத்த பின்னர் நெல்லை கண்ணன் நாளை விடுவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
இதற்கிடையில், தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கு மீதான விசாரணை வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.