‘பாகுபலி’க்கு தேசிய விருது: இந்திய சினிமாவுக்கு அவமானம்!
“ஆஸ்கர் விருது என்பது ஆங்கிலப் படங்களுக்காக அவர்கள் நாட்டில் கொடுக்கப்படும் உள்ளூர் விருது. அதற்காக நாம் ஏங்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக நம் தேசிய விருதை மிகவும் உயரிய சினிமா விருதாக, மிகச்சிறந்த திரைப்படங்களுக்கு கொடுக்கப்படும் பெருமைமிகு விருதாக மாற்ற வேண்டும். நம் நாட்டு விருதுகளைப் பெற பிற நாட்டுப் படங்கள் போட்டிபோட வேண்டும். அப்படிப்பட்ட படங்களை எடுப்பதும் தேர்ந்தெடுப்பதுமே நாம் செய்ய வேண்டியது”
– பல வருடங்களுக்கு முன்பு ஆஸ்கர் விருதுகள் பற்றி கேட்டபோது கமல் சொன்ன வரிகள் இவை. (இந்த அர்த்தம் தான். விகடனில் வந்த கமல் பேட்டி என்று நினைக்கிறேன்.) இன்று ‘பாகுபலி’ சிறந்த படம் என்று தேசிய விருது அறிவிக்கப்பட்ட செய்தியைப் படித்ததும் தோன்றியது இந்த வரிகள்தான். ‘மாசான்’ போன்ற சிறிய வைரத்திற்கும் விருது, ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட கரிக்கும் விருதென்றால், இங்கே எது நல்ல சினிமா??
தேசிய விருதுகளில் பல விருதுகள் கொட்டிக் கிடக்கின்றன. கிராபிக்ஸ், சவுண்ட், காஸ்ட்யூம்ஸ், மேக்கப் என்று எதற்காகவாவது கொடுத்திருக்கலாம். Best Popular Film Providing Wholesome Entertainment என்று ஒரு கேட்டகரியே இருக்கிறது. அதிலாவது கொடுத்து ‘தொலைத்திருக்கலாம்’. ஆனால் 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியான மிகச் சிறந்த திரைப்படம் என்று ‘பாகுபலி’க்கு விருது கொடுத்தது இந்திய சினிமா உலகிற்கு விருதுக்குழு ஏற்படுத்தியிருக்கும் அவமானம். அத்தனை க்ளிஷேக்களும் நிறைந்த ஒரு ப்யூர் மசாலா படத்திற்கு எந்த அடிப்படையில் இந்த விருது கொடுக்கப்பட்டது என்பதை நிச்சயம் அவர்கள் விளக்கியாக வேண்டும்.
இதுதான் இந்தியாவின் சிறந்த சினிமாவிற்கான அளவுகோல் என்பதை இந்திய அளவிலும் உலக அளவிலும் நம் சினிமாக்களை அவமதிக்கும் ஒரு செயலாகவே பார்க்கிறேன். இங்கே எடுக்கப்படும் அத்தனை பரீட்சார்த்த முயற்சிகளையும் நீர்த்துப்போகச் செய்யும் ஒரு முடிவு இது. நல்ல சினிமாவை நேசிக்கும், இந்திய சந்தையில் சமரசமற்ற சினிமாவை எடுக்கப் போராடும் அத்தனை பேரின் மேலும் நக்கலாக உமிழ்ந்திருக்கிறது தேசிய விருதுக்குழு. WHY KATTAPPA KILLED BAHUBALI என்பதைவிட WHY KATTAPPAAS LIKED BAHUBALI என்பதுதான் இந்த வருடத்தின் ஆகப்பெரிய கேள்வி!!!
-ஜெயச்சந்திர ஹஷ்மி