‘பாகுபலி’ எம்ஜிஆரின் ‘அடிமைப்பெண்’ படத்தின் தழுவலா?: இயக்குனர் ராஜமௌலி விளக்கம்!
‘பாகுபலி’ படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ‘பாகுபலி 2’க்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பாகுபலி 2’ படத்தின் தமிழ் பதிப்பு இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுவதை முன்னிட்டு இயக்குநர் ராஜமெளலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அச்சந்திப்பில் இயக்குநர் ராஜமெளலி கூறியதாவது:
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரலாற்று படம் செய்ய வேண்டும் என்று தான் தொடங்கினோம். முதல் பாகம் தமிழில் பெரும் வெற்றி பெற்றது, அதற்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை.
இது ஒரு கற்பனை கலந்த வரலாற்று படம். ஆகையால் இந்த காலத்தில் தான் இக்கதை நடைபெற்றது என்று சொல்ல முடியாது. கதையை 1000 வருடங்களுக்கு முன்பு நடப்பது போல வைத்துக் கொண்டோம்.
‘பாகுபலி’ கதையைத் தொடங்கும் போது என்ன எழுதினோமோ அது ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தோடு முடிந்துவிடும். ஆனால், படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களுக்கு அக்கதாபாத்திரத்தின் பின்னணி தெரிய வேண்டும் என்று நிறைய பணியாற்றினோம். அக்கதைகள் அனைத்துமே மிகவும் சுவாரசியமாக வந்துள்ளது. அதை ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்துள்ளோம். படமாகயின்றி தொலைக்காட்சி தொடர்கள், அனிமேஷன், நாவல்கள் என பல வடிவில் அவை வெளிவரும். ‘பாகுபலி’ உலகம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
‘பாகுபலி’ முதல் பாகத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகம் மட்டுமே இருக்கும். அக்கதாபாத்திரங்களுக்குள் என்ன நடந்தது என்பதை நாங்கள் கூறவில்லை. இரண்டாம் பாகத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள கதை மிகவும் கவரும். அனைத்துமே பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளோம்.
‘பாகுபலி’ என்றாலே பிரபாஸ் மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிகிறார். எனக்கு மட்டுமன்றி இந்தியாவிலேயே யாருக்கும் வேறு ஒரு கதாபாத்திரம் நினைவில் வராது. ‘பாகுபலி’க்குப் பிறகு என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. ‘பாகுபலி’ மிகவும் சிறியது. ஆனால் ‘மகாபாரதம்’ மிகவும் பெரியது. அதை எப்போது படமாக்குவேன் என தெரியவில்லை. உடனே கண்டிப்பாக இருக்காது.
‘பாகுபலி தொடங்கப்பட்ட போதே முழுக்கதையையும் எழுதி முடித்துவிட்டோம். ஆகையால் முதல் பாகத்துக்குப் பிறகு எதையுமே மாற்றவில்லை. இது இரண்டாம் பாகம் என எடுத்துக் கொள்ள கூடாது. ஒரு பெரிய கதையை 2 பாகங்களாக கொடுக்கிறோம் அவ்வளவு தான்.
நிறைய நாயகர்களை வைத்து நிறைய படம் செய்ய வேண்டும் என்ற ஆசையுள்ளது. ஆனால், தற்போது ‘பாகுபலி’ தவிர வேறு எதுவுமே என் மனதில் இல்லை என்பது உண்மை. ‘பாகுபலி’ முழுக்க முழுக்க கற்பனை கதை தான். நிறைய பண முதலீடு இருப்பதால் அனைத்து சமூகத்தினரும் படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் செய்துள்ளோம். ஒரு தரப்பு மக்கள் பார்க்க வேண்டாம் என்ற எண்ணோட்டத்தில் நாங்கள் எதையுமே வைக்கவில்லை. அனைவருமே படம் பார்க்க வேண்டும் என்பதில் தான் எங்களுடைய நோக்கமாக இருந்தது.
எம்.ஜி.ஆர் சார், என்.டி.ஆர் சார், ராஜ்குமார் சார் என அனைவருமே நிறைய வரலாற்று படங்களில் நடித்துள்ளார்கள். அதிலிருந்து ஒரு சின்ன தழுவல் இருக்கலாம். ஆனால், ‘அடிமைப்பெண்’ படத்தை தழுவி நான் ‘பாகுபலி’ உருவாக்கவில்லை. அப்படத்தை நான் பார்க்கவில்லை. அப்படி நான் படமாக்கியிருந்தால் நானே பெருமையாகச் சொல்வேன்.
இவ்வாறு இயக்குநர் ராஜமெளலி கூறினார்.