பேபி & பேபி – விமர்சனம்

நடிப்பு: ஜெய், யோகி பாபு, சத்யராஜ், பிரக்யா நாக்ரா, சாய் தன்யா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், இளவரசு, சிங்கம்புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, பாப்ரி கோஷ், விஜய் டிவி ராமர், விஜய் டிவி தங்கதுரை, சேசு, கல்கி ராஜா, பிரதோஷ் மற்றும் பலர்
இயக்கம்: பிரதாப்
ஒளிப்பதிவு: டி.பி.சாரதி
படத்தொகுப்பு: ஆனந்தலிங்க குமார்
இசை: டி.இமான்
தயாரிப்பு: யுவராஜ் பிலிம்ஸ்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் எஸ் 2 மீடியா
தவறுதலாக கைமாறிப்போன இரண்டு கைக்குழந்தைகள் பற்றிய படம் என்பதால் இதற்கு ‘பேபி அண்ட் பேபி’ என்று பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்கள்.
மகாலிங்கம் (சத்யராஜ்) – தனம் (கீர்த்தனா) தம்பதியின் மகன் சிவா (ஜெய்). இவர் தன் தந்தையின் எதிர்ப்பை மீறி காதலி பிரியாவை (பிரக்யா நக்ரா) திருமணம் செய்துகொண்டு, தந்தைக்கு பயந்து மனைவியுடன் வெளிநாடு சென்றுவிடுகிறார். அங்கே சிவா – பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தனது குடும்பச் சொத்தை பிற்காலத்தில் ஆள்வதற்கு ஓர் ஆண் வாரிசாக பேரன் வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் மகாலிங்கம், தனது மகன் சிவாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது தெரிந்ததும், அவர் மீதான கோபத்தைக் கைவிட்டு, அவரை மீண்டும் தனது ஊருக்கு குடும்பத்துடன் வருமாறு கேட்டுக்கொள்கிறார்.
முத்தையாவின் (இளவரசு) மகன் குணா (யோகி பாபு). ஜோதிடத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட முத்தையா, தனது மகன் குணாவை வேலைக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு மலரை (சாய் தன்யா) குணா காதல் திருமணம் செய்ததால் முத்தையா கோபத்தில் இருக்கிறார். குணா – மலர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. “உங்கள் மகனுக்கு பெண் குழந்தை பிறந்தால் குடும்பம் அமோகமாக இருக்கும்” என்று ஜோதிடர் சொல்ல, குணாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்து, கோபத்தைத் துறந்து, மகனை குடும்பத்துடன் வீட்டுக்கு வரவழைக்கிறார் முத்தையா.
சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சிவா குடும்பமும், குணா குடும்பமும் விமான நிலையம் வருகின்றன. அங்கு ஒரே மாதிரி உடை அணிந்திருந்ததால், அவசரத்தில் இரண்டு கைக்குழந்தைகளும் தவறுதலாக கைமாறி விடுகின்றன. அதாவது, சிவா – பிரியா தம்பதி வசம் பெண் குழந்தையும், குணா – மலர் தம்பதி வசம் ஆண் குழந்தையும் வந்துவிடுகின்றன.
கோவை செல்லும் விமானத்தில் சிவா – பிரியா தம்பதியும், மதுரை செல்லும் விமானத்தில் குணா – மலர் தம்பதியும் பயணித்துக் கொண்டிருக்கும்போது தான் தங்கள் குழந்தை கைமாறி விட்டது என்பதை அறிகின்றனர்.
அதன்பிறகு என்ன நடந்தது? ஆண் வாரிசை எதிர்பார்த்திருந்த மகாலிங்கம் குடும்பத்தினரும், பெண் வாரிசை எதிர்பார்த்திருந்த முத்தையா குடும்பத்தினரும் என்ன செய்தனர்? இரு இளம் தம்பதியரும் தத்தமது குடும்பத்தாரை சமாளிக்க என்னவெல்லாம் செய்தார்கள்? கைமாறிப்போன குழந்தைகள் அவரவர் பெற்றோருக்கு மீண்டும் கிடைத்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு நகைச்சுவை விருந்தளித்து விடை அளிக்கிறது ‘பேபி அண்ட் பேபி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் சிவா கதாபாத்திரத்தில் ஜெய் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்திருக்கும் இவர் இந்தப் படத்திலும் ஒரு நகைச்சுவைப்பட நாயகனாக சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுக்க இவரும் யோகிபாபுவும் அடிக்கும் லூட்டி அற்புதம். அதே சமயத்தில், குழந்தை கைமாறிப்போன துயரத்தில் தன் சென்டிமெண்ட் நடிப்பால் நம்மை நெகிழ வைக்கிறார்.
நாயகனின் காதல் மனைவி பிரியாவாக பிரக்யா நாக்ரா நடித்திருக்கிறார். அவரது நடிப்பு பற்றி சிலாகிக்க பெரிதாக ஒன்றும் இல்லை. அவருக்கு நடிப்பில் இன்னும் நிறைய பயிற்சி தேவை.
குணா கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். எப்போதும் போல இந்த படத்திலும் பன்ச் டயலாக் பேசி சிரிக்க வைக்கிறார். அதோடு கூடுதலாக, கதையின் தேவை அறிந்து பல காட்சிகளில் பார்வையாளர்களைக் கலங்கவும் வைத்திருக்கிறார். அவரது காதல் மனைவி மலராக வரும் சாய் தன்யா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் அப்பா மகாலிங்கமாக வரும் சத்யராஜ், அவரது மனைவி தனமாக வரும் கீர்த்தனா, குணாவின் அப்பா முத்தையாவாக வரும் இளவரசு ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இன்ஸ்பெக்டர் குழந்தைவேலுவாக வரும் ரெடின் கிங்ஸ்லி, தூக்குதுரையாக வரும் மொட்டை ராஜேந்திரன், ராஜனாக வரும் ஆனந்தராஜ், புலியாக வரும் சிங்கம்புலி, மாணிக்கமாக வரும் ஸ்ரீமன், தயாளனாக வரும் நிழல்கள் ரவி, மல்லிகாவாக வரும் பாப்ரி கோஷ், குமாராக வரும் விஜய் டிவி ராமர், தங்கதுரையாக வரும் விஜய் டிவி தங்கதுரை, ஜம்புலிங்கமாக வரும் சேசு, கல்கியாக வரும் கல்கி ராஜா, அசோக்காக வரும் பிரதோஷ் உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்கு ஏற்ப அருமையாக நடித்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் பிரதாப். குழந்தை செண்டிமெண்ட்டை காமெடி கலந்து சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார். ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் குழந்தைகள் எல்லாம் ஒன்றுதான்; ஆண் குழந்தை மட்டும் தான் வாரிசு, பெண் குழந்தை மட்டும் தான் வாரிசு என்று பேதப்படுத்தாமல், குழந்தைகளை குழந்தைகளாகப் பாவித்து அனைவரையுமே வாரிசாக வளர்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு, ஜீவனுள்ள நகைச்சுவையை நிறைய சேர்த்திருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.
இமான் இசையில் ”அழகே அமுதே…” என்ற தாலாட்டுப் பாடல் ரசிக்க வைக்கிறது. மேலும் தனது பின்னணி இசையால் கதையோட்டத்துக்கு உயிரூட்டி இருக்கிறார்.
படத்தொகுப்பை ஆனந்தலிங்கம் செய்ய, சாரதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இருவரும் தத்தமது பணியை நேர்த்தியாக, நிறைவாக செய்திருக்கிறார்கள்.
‘பேபி அண்ட் பேபி’ – ‘காமெடி அண்ட் காமெடி!
ரேட்டிங்: 2.5/5