பாகுபலி தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் வருமான வரி சோதனை: கருப்பு பண மீட்பு நடவடிக்கையா?
பாகுபலி திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் சோதனை தெலுங்கு பட உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தை ஷோபு யர்லகடா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். சுமார் 100 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட பாகுபலி நாடு முழுவதன் கவனத்தையும் ஈர்த்திருந்தது. வசூலிலும் 650 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை புரிந்தது.
இதனை தொடர்ந்து பாகுபலி இரண்டாம் பாகமும் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. திரைக்கு வருவதற்கு முன்னரே இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் பாடல் உரிமைகள் பல கோடி ரூபாய்க்கு விற்பனையானதாகவும் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் பாகுபலி-2 படத்தின் விநியோக உரிமைகள் பல நூறு கோடிக்கு கைமாறியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில்தான் இன்று மாலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள பாகுபலி தயாரிப்பாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடந்து வருகின்றன. கருப்பு பண மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றும்படி அரசு அறிவுறுத்தியிருக்கும் நேரத்தில் நடத்தப்படும் இந்த சோதனை சந்தேகங்களை எழுப்பாமல் இல்லை.
அதே நேரத்தில், பல நூறு கோடிகள் பணத்தை வாங்கி வீட்டில் யாராவது வைத்திருப்பார்களா என்றும், வடமாநிலங்களிலும் நேற்றைய தினம் நடத்தப்பட்ட இதுபோன்ற சோதனைகள், பணக்காரர்கள் பதுக்கியிருக்கும் கருப்பு பணத்தை பற்றி மக்கள் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதற்காக நடத்தப்படும் நாடகம் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.