அழகு குட்டி செல்லம் – விமர்சனம்
“பார்க்கும் போதும், பார்த்து முடித்த சில மணி நேரங்கள் வரையுமோ அல்லது ஒரு சில நாட்களுக்கோ நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில திரைப்படங்கள் இருக்கும். அந்த வகையில் என் நினைவு தெரிந்து என்னை பாதித்த முதல் சினிமா ‘மூன்றாம் பிறை’. சமீபத்தில் அப்படியான தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் ‘அழகு குட்டி செல்லம்’. பிரிவியூ முடிந்து வெளியே வந்ததும் தயாரிப்பாளர் ஆண்டனிக்கும், இயக்குனர் சார்லசுக்கும் வாழ்த்து சொன்னபோதும்கூட பெரிதாக எதுவும் பேச முடியாமல் விடை பெற்றேன். படம் முடிந்த பிறகும் ‘அழகு குட்டி செல்லம்’ ஏற்படுத்திய தாக்கம் மனம் முழுவதும் நிரம்பியிருந்தது. அடுத்த நாளும்கூட ‘அழகு குட்டி செல்ல’த்தின் நினைப்பு தான். அடுத்த நாள் பரபரப்பான அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியிலும், ‘நேர்படப் பேசு’ விவாதத்திற்கு மத்தியிலும்கூட மனதின் ஒரு ஓரத்தில் ‘அழகு குட்டி செல்லம்’ உருவாக்கிய இனம் புரியாத உணர்வுகளின் தாக்கம் தொடர்ந்துகொண்டிருந்தது… இன்று என் இரண்டு அழகு குட்டி செல்லங்களுடன் மீண்டும் அந்த அனுபவத்தை நோக்கி….”
– கார்த்திகை செல்வன், ஊடகவியலாளர்
# # #
2016ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே தமிழ் திரையுலகம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளக் கூடிய ஒரு படமாக வெளிவந்திருக்கிறது ‘நீயா நானா’ ஆண்டனி திருநெல்வேலியின் ‘அழகு குட்டி செல்லம்’.
”ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் இந்த பூமிக்கு புதிய நம்பிக்கையைக் கொண்டு வருகிறது” என்பது தான் இப்படத்தின் கதை. இந்த கதையை படிப்பதை விட, அதை படமாக பார்க்கும்போது தான் அதனுடைய அழகியலை அனுபவிக்க முடியும்.
ஐந்து விதமான குடும்பங்கள், அவர்களது குடும்பத்தில் குழந்தையால் ஏற்படும் தடுமாற்றம், அதே குழந்தைகளால் ஏற்படும் மாற்றம் பற்றியது தான் திரைக்கதை. ஒருவருக்கு குழந்தை பிறக்கவில்லையே என்ற கவலை, ஒருவருக்கு குழந்தை பிறப்பதால் பிரச்சனை, மற்றொருவருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தாலும் அது பெண்ணாக இருப்பதால் பிரச்சனை. இவர்கள் மத்தியில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக பள்ளியில் ஏசு பிறப்பு பற்றி நாடகம் போடும் மாணவர்கள், நாடகம் இயல்பாக இருப்பதற்காக குழந்தை ஏசுவாக ஒரு நிஜ குழந்தையை காண்பிக்க விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் தேர்வு செய்த குழந்தை கிடைக்காததால், வேறு ஒரு குழந்தையை தேடி அலைகிறார்கள்.
இப்படி குழந்தையால் தடுமாற்றம் அடையும் இவர்கள், அதே குழந்தையால் தங்களது வாழ்வில் எப்படி மாற்றத்தை சந்திக்கிறார்கள் என்பது தான் படத்தின் க்ளைமாக்ஸ்.
கதையைக் காட்டிலும் திரைக்கதை தான் பலமே. அதிலும் கதாபாத்திர அமைப்பும், அவர்களது நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளது.
குறிப்பாக, இதுவரை காமெடி வேடத்திலும், சில குணச்சித்திர வேடத்திலும் நடித்துவந்த கருணாஸ், இப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். ஆண் குழந்தை வேண்டும் என்பதால், அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகளைப் பெற்று, நான்காவதாக ஆண் குழந்தைக்காக காத்திருக்கும் இவரது கதாபாத்திரமும், அதில் கருணாஸ் நடித்துள்ள விதமும் சபாஷ் போட வைக்கிறது.
செஸ் வீராங்கனையாக நடித்துள்ள நிலா என்ற கதாபாத்திரமும், அவருடைய கதை ட்ராக்கும் கவிதைப் போல அமைந்துள்ளது. அதிலும் இறுதிக் காட்சியின்போது, தனது கைக்குழந்தையை வைத்துக்கொண்டு அவர் செஸ் விளையாடும் காட்சி திரையரங்கையே அதிரச் செய்கிறது.
பள்ளி மாணவர்களாக நடித்த சிறுவர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். அதிலும், எதற்கு எடுத்தாலும் “வீட்டை விட்டு ஓடிவிடலாமா, ஊட்டி, கொடைக்கானல் போகலாமா” என்று சொல்லிக்கொண்டிருக்கும் மாணவர் திரையரங்கில் அவ்வபோது சிரிப்பொலியை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்.
திரைக்கதையும், காட்சிகளும் தான் படம் என்றாலும், அவற்றை மக்கள் மனதில் பதியவைக்க கூடியது இசை. இந்த படத்தில் அந்த வேலையை இசையமைப்பாளர் வேத் சங்கர் ரொம்ப அழகாக செய்திருக்கிறார். ‘என் அழகு குட்டி செல்லம்..’ என்று படம் முழுவதும் பாடலை ஒலிக்கச் செய்யும் வேத் சங்கர், குழந்தையை மட்டுமின்றி நம்மையும் தாலாட்டுகிறார். திரைக்கதையில் ஈர்ப்புள்ள அத்தனை இடங்களிலும் வேத் சங்கரின் பின்னணி இசை புகுந்து விளையாடுகிறது.
ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் கேமரா, குழந்தைகளை ரொம்ப திறமையாக கையாண்டுள்ளது. அதிலும் அந்த சிறு பையில் குழந்தையை வைத்துக்கொண்டு, மாணவர்கள் சுற்றி வரும்போது, அதனுள் குழந்தையை காட்டிய விதம், சென்னையின் முக்கியமான இடங்களை ரொம்ப இயல்பாக காட்டிய விதம் என்று, மனிதர் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். கேமராவை மறைத்து வைத்து எடுத்திருப்பாரோ என்று எண்ணம் தோன்றும் அளவுக்கு பல காட்சிகள் ரொம்ப இயல்பாக இருக்கின்றன.
இந்த படத்தின் கதையை கதையாக சொல்ல முடியாது என்ற போதிலும், இயக்குநர் சார்லஸின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ஆண்டனி திருநெல்வேலியை தான் முதலில் பராட்டியாக வேண்டும். பிறகு படத்தை நேர்த்தியாக இயக்கிய இயக்குநர் சார்லஸ்.
தமிழ் சினிமாவில் தற்போது சிறுவர்களை மையமாக வைத்து சில படங்கள் வந்திருந்தாலும், அவற்றில் இருந்து மாறுபட்டு உள்ள இப்படம், படம் பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல கவிதையை படித்த உணர்வைக் கொடுக்கிறது.
‘அழகு குட்டி செல்லம்’ – மனதை கொள்ளை கொள்ளும் குழந்தை!