அழகிய கண்ணே – விமர்சனம்

நடிப்பு: லியோ சிவகுமார், சஞ்சிதா ஷெட்டி, பிரபு சாலமன், சிங்கம் புலி, ராஜ்கபூர், அமுதவாணன், விஜய் சேதுபதி (சிறப்புத் தோற்றம்) மற்றும் பலர்

இயக்கம்: ஆர்.விஜய் குமார்

ஒளிப்பதிவு: ஏ.ஆர்.அசோக் குமார்

படத்தொகுப்பு: இ.சங்கத்தமிழன்

இசை: என்.ஆர்.ரகுநந்தன்

தயாரிப்பு: ‘எஸ்தெல் எண்டர்டைனர்’ சேவியர் பிரிட்டோ

பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சதீஷ் குமார் – சிவா (டீம் எய்ம்)

திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் நாயகன் இன்பா (லியோ சிவகுமார்). நண்பர்களுடன் சேர்ந்து தெருநாடக பாணியில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய  நாடகங்களை நடத்தி வருபவர்.  அவரது கலைத் திறமையைப் பார்த்து எதிர்வீட்டு பிராமணப் பெண் கஸ்தூரி (சஞ்சிதா ஷெட்டி) அவரை காதலிக்கிறார். இன்பாவும் கஸ்தூரியை காதலிக்கிறார். ஆனால், கஸ்தூரியின் சித்தி, அவரை தன்னுடைய தம்பிக்கு திருமணம் செய்து வைக்க எண்ணுகிறார்.

இந்நிலையில், திரைப்பட இயக்குனர் ஆகும் கனவில் சென்னை வரும் இன்பா,  இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவியாளராக சேர்ந்து திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். அதே நேரம் அவரது காதலி கஸ்தூரியும் கல்லூரிப் படிப்பை முடித்து, சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை கிடைத்து, அவரும் சென்னை வந்துவிடுகிறார். இங்கு காதலர்கள் இருவரும் தினமும் சந்தித்து, தங்கள் காதலை வளர்த்துக் கொள்கிறார்கள்.

சித்தியின் தம்பியை திருமணம் செய்துகொள்ளும்படி கஸ்தூரிக்கு நெருக்கடி தரப்படுகிறது. இதனால் காதலர்கள் இருவரும் ஊருக்கு வந்து தங்களது காதலை தத்தமது குடும்பத்தாரிடம் தெரிவிக்கிறார்கள். இன்பாவின் குடும்பத்தார் ஏற்றுக் கொண்டபோதிலும், கஸ்தூரியின் சித்தி ஏற்க மறுத்து, கஸ்தூரியை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார்.

சென்னை திரும்பும் காதலர்கள் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக குடித்தனம் நடத்துகிறார்கள். ஓராண்டுக்குப் பிறகு குழந்தை பிறக்கிறது. வேலைக்குப் போகும் பெற்றோர்களான இவர்கள், கைக்குழந்தையை கவனித்துக்கொள்ள இயலாமல் சிரமப்படுகிறார்கள்.

இவ்வளவு காலத்துக்குப் பிறகும் கஸ்தூரியின் சித்தியின் தம்பி கஸ்தூரி மீதும், இன்பா மீதும் கொலைவெறி குறையாமல் இருக்கிறான். அவனது சகாக்கள் தூண்டிவிட, சதித்திட்டம் தீட்டுகிறான். அவனுடைய சதித்திட்டம் நிறைவேறியதா? அல்லது அதிலிருந்து இன்பாவும், கஸ்தூரியும் தப்பித்தார்களா? என்பது கிளைமாக்ஸ்.

0a1h

பிரபல மேடைப் பேச்சாளரும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவருமான திண்டுக்கல் ஐ..லியோனியின் மகன் லியோ சிவகுமார், இந்த படத்தில் நாயகன் இன்பாவாக நடித்திருக்கிறார். அறிமுக நடிகர் போல் அமெச்சூராக இல்லாமல், இயல்பாக, யதார்த்தமாக நடித்து முழுப்படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் நாடகக் கலைஞராகவும், பின்னர் திரைப்பட உதவி இயக்குனராகவும் அசத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் காதலி கஸ்தூரியாக வரும் சஞ்சிதா ஷெட்டி அழகாக இருக்கிறார். வழக்கம் போல் தனக்குத் தரப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பான நடிப்பில் கச்சிதமாகப் பிரதிபலித்திருக்கிறார்.

திரைப்பட இயக்குனராகவே வரும் இயக்குனர் பிரபு சாலமன் அலட்டல் இல்லாமல் அமைதியாகவும், அழுத்தமாகவும் நடித்திருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட வேறு சில இயக்குனர்களைப் போல பிரபு சாலமனும் நல்ல நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிகராகவும் களமிறங்கலாம்.

ராஜ்கபூர், சிங்கம் புலி, ஆண்ட்ரூஸ், அமுதவாணன், சுஜாதா உள்ளிட்ட ஏனையோரும் அளவாக நடித்து கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறார்கள்.

இயக்குநர் சீனு ராமசாமியின் தம்பியும், அவரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவருமான ஆர்.விஜயகுமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். கதை, திரைக்கதையில் குழப்பம் ஏதுமின்றி, படத்தை நிதானமாக நேர்கோட்டில் நகர்த்திச் சென்றிருக்கிறார். காட்சிகளில் கொஞ்சம் சுவாரஸ்யத்தையும், புதுமையையும் புகுத்தியிருந்தால் படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்க முடியும்.

 ஏ.ஆர்.அசோக்குமாரின் ஒளிப்பதிவும் என்.ஆர்.ரகுநந்தனின் இசையும் படத்தின் ஓட்டத்துக்கு உதவியிருக்கின்றன.

‘அழகிய கண்ணே’ – யதார்த்தமான காதல் படம்! ஒருமுறை பார்க்கலாம்!