அழகென்ற சொல்லுக்கு அமுதா – விமர்சனம்
ஒரு பெண்ணை ஒருதலையாய் காதலித்து பின்தொடர்வது, காதலிக்குமாறு வற்புறுத்தி டார்ச்சர் செய்வது என்பதெல்லாம் கேவலமாக, அநாகரிகமாக கருதப்படும் இன்றைய காலகட்டத்தில், அது பற்றிய குற்றவுணர்வு சிறிதும் இல்லாமல், அந்த அநாகரிகம் தான் “ஹீரோயிசம்” என சொல்ல வந்திருக்கிறது ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’.
வடசென்னையில் வாழும் நாயகன் ரிஜன் சுரேஷுக்கு எந்த வேலை வெட்டியும் கிடையாது. தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, ஊர் சுற்றுவது இதுதான் அவருடைய பொழுதுபோக்கே. இவரை மாதிரியே இவருடைய நண்பர்களும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஊர் சுற்றி வருகிறார்கள்.
நாயகனுக்கு ஒரு குணம். எந்த விஷயத்தை செய்யக் கூடாது என்று சொல்கிறோமோ, அந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.
ஒருநாள் சாலையோரம் இளநீர் குடித்துக்கொண்டு நிற்கும் இவரை பார்க்கும் நாயகி ஆர்ஷிதா, இவர் இளநீர் குடிக்கும் லட்சணத்தைப் பார்த்து சிரித்துவிடுகிறார். அதை பார்க்கும் நாயகனுக்கு அவர் மீது காதல் வருகிறது. அன்று முதல் நாயகியை பின்தொடர்வதையே வேலையாக கொள்கிறார் நாயகன்.
தன் பின்னாலேயே நாயகன் சுற்றுவதை பொறுக்க முடியாத நாயகி, அவரை பலமுறை எச்சரிக்கிறார். செருப்பை எடுத்துக் காட்டி அவமானப்படுத்துகிறார். ஆனால், இதையெல்லாம் நாயகன் கண்டுகொள்வதாக இல்லை.
நாயகனின் அப்பாவான பட்டிமன்றம் ராஜாவிடமே போய் புகார் செய்கிறார் நாயகி. அவருடைய பேச்சையும் நாயகன் கேட்பதாக இல்லை. போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் கொடுத்தாலும் நாயகன் அடங்குவதாக இல்லை. நாயகனின் டார்ச்சரை தாங்கமுடியாத நாயகி இறுதியில் என்ன முடிவெடுத்தார் என்பது க்ளைமாக்ஸ்.
நாயகன் ரிஜன் சுரேஷ் வடசென்னை இளைஞனுக்குண்டான தோற்றத்துடன் படம் முழுக்க தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். சினிமா பைத்தியமான இவர் எந்த இடத்திற்கு சென்றாலும் சினிமா டயலாக்கே பேசுவது ரசிக்க வைக்கிறது.
நாயகி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நாயகனின் டார்ச்சரை தாங்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு ஓகே சொல்ல வைக்கிறது. பட்டிமன்றம் ராஜா வழக்கமான கண்டிப்பான அப்பாவாக வந்து மனதில் பதிகிறார்.
ரஜின் மகாதேவ் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக, ‘வியாசர்பாடி அண்ணா கேடி’ பாடல் துள்ளி ஆட்டம் போட வைக்கிறது. ‘என் தேவதையோட’ பாடல் மெலோடியாக வந்து தாலாட்டுகிறது. பின்னணி இசையிலும் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். கல்யாண் ராமின் ஒளிப்பதிவும் ரசிக்க வைத்துள்ளது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா பளிச்சிடுகிறது.
பிரச்சனை கதை தான். ஒரு பெண்ணை பிடித்துவிட்டால், அவளை விடாமல் துரத்தி, எப்படியெல்லாம் டார்ச்சர் செய்து, காதலை ஏற்க வைக்கலாம் என்று இப்படத்தின் மூலம் இளைஞர்களுக்கு பாடம் நடத்தியிருக்கிறார் இயக்குனர் நாகராஜன். காமெடியாக கதையை நகர்த்திச் செல்வதாலேயே இந்த குற்றச்சாட்டிலிருந்தும், கண்டனத்திலிருந்தும் அவர் தப்பிவிட முடியாது.
சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படம் வந்தபோது, ஹீரோயினை ஒருதலை காதலுடன் துரத்துவதா என்று தாண்டிக் குதித்து, கோபக் கனல் கக்கிய பெண்ணியவாதிகளெல்லாம், இந்த படத்தை கண்டுகொள்ளவில்லை. என்ன காரணம்? சிவகார்த்திகேயனின் படத்தை எதிர்த்தால் பப்ளிசிட்டி கிடைக்கும்; புதுமுக நடிகர் நடித்த இந்த சிறிய படத்தை எதிர்த்தால் என்ன கிடைக்கும் என்ற கால்குலேஷன் தான். நாம் அப்படி இருக்க முடியாது…
‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ – தப்பான படம்!