அயோத்தி – விமர்சனம்

நடிப்பு: சசிகுமார், புகழ், யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ராணி, அஞ்சு அஸ்ராணி, அத்வைத், போஸ் வெங்கட், சேத்தன் மற்றும் பலர்

இயக்கம்:  மந்திரமூர்த்தி

ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

படத்தொகுப்பு: சான் லோகேஷ்

இசை: என்.ஆர்.ரகுநந்தன்

தயாரிப்பு: ’ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ ஆர்.ரவீந்திரன்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

’அயோத்தி’ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பாபர் மசூதி இடிக்கப்பட்டு, மதமோதல்களுக்கு வித்திட்டு, ரத்த ஆறு ஓடச் செய்தது தான். ஆனால் இந்த ‘அயோத்தி’ திரைப்படம் இவற்றுக்கு மாறாக, உயர்ந்த மனிதநேயத்துக்கும், மத நல்லிணக்கத்துக்கும், மொழி – இனம் – மதம் கடந்த சகோதரத்துவத்துக்கும் சிறந்த உதாரணமாக எடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் தன் மனைவி (அஞ்சு அஸ்ராணி), மகள் (பிரீத்தி அஸ்ராணி), மகன் (அத்வைத்) சகிதம் வாழ்ந்து வருகிறார் பல்ராம் (யஷ்பால் சர்மா). தீவிர இந்துமதப் பற்றாளரான அவர் புனிதப்பயணமாக ராமேஸ்வரம் செல்லும் நோக்கத்துடன் தீபாவளி தினத்தன்று தன் குடும்பத்துடன் ரயிலில் மதுரை வந்து இறங்குகிறார். மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு டாக்சியில் செல்லும்போது பல்ராமின் பொறுப்பற்ற தன்மை காரணமாக கோர விபத்து ஏற்படுகிறது. இதில் பல்ராமின் மனைவி இறந்துவிட, ஏனையோர் காயம் அடைகிறார்கள். இறப்பின் வலியோடும், காயங்களின் வேதனையோடும், மொழி தெரியாத ஊரில், சொந்த பந்தங்கள் யாருமில்லாத பரிச்சயமற்ற இடத்தில் பரிதாபமாக தவித்து நிற்கிறார்கள். திக்கற்று நிற்கும் அவர்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவ முன்வருகிறார் தமிழர் ஒருவர். அவர் தன் நண்பர்களின் ஆதரவுடன் அந்தக் குடும்பத்தைச் சிக்கலிலிருந்து மீட்டாரா? பொது மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய சட்டமும், விதிமுறைகளும் அவர்களை எப்படியெல்லாம் நெருக்குகிறது, சுழற்றியடிக்கிறது? என்பதை பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி.

0a1d

திக்கற்ற பல்ராம் குடும்பத்துக்கு உதவும் தமிழர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சசிகுமார். போலியான அடிதடி ஆக்சன் நாயகனாக வந்து பெயரைக் கெடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்ட சசிகுமார், வழக்கத்துக்கு மாறாக, இதில் கதைக்குத் தேவையான யதார்த்த நாயகனாக அற்புதமாக நடித்து நல்ல பெயரைத் தட்டிச் சென்றுள்ளார். உதவுவதற்காக பதற்றத்துடன் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடி சிக்கலில் மாட்டிகொள்வது, இறுதிவரை பாதிக்கப்பட்டவர்களுக்காக நிற்பது என தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பில் முத்திரை பதித்துள்ளார். படம் முடியப்போகும் தறுவாயில், “தம்பி, உங்க பேர் என்ன?” என்று பல்ராம் உருக்கத்துடன் கேட்க, சசிகுமார் சொல்லும் பதிலில் பார்வையாளர்கள் மெய்சிலிர்ப்பது இப்படத்தின் வெற்றிக்கு உத்தரவாதம்.

பல்ராம் கதாபாத்திரத்தில் சதா பான்பராக்கை மென்றுகொண்டு, ஆணாதிக்கம் செலுத்திக்கொண்டு, ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கோபத்தையும் பெறும் யஷ்பால் சர்மா, தனது யதார்த்தமான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். சிடுமூஞ்சியுடன் இருக்கும் அவர், ஒரு காட்சியில் தன் மகள் நறுக் நறுக்கென்று கேட்கும்போது உடைந்து அழுகையில் தேர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்..

புகழ், காமெடி ஏரியா பக்கம் ஒதுங்காமல், ஒரு துணை நடிகராக படம் முழுக்க சசிகுமாருடன் சேர்ந்து வந்து தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

பல்ராமின் மனைவியாக வரும் அஞ்சு அஸ்ரானி, மகளாக வரும் பிரீத்தி அஸ்ராணி ,மகனாக வரும் சிறுவன் அத்வைத், சவப்பெட்டி விற்பனையாளராக வரும் போஸ் வெங்கட், விமான நிலைய அதிகாரியாக வரும் சேத்தன் என அனைத்து நடிப்புக் கலைஞர்களும் மிகை நடிப்பில்லாமல் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.

மதம், இனம், மொழிகளைக் கடந்தது மனிதம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல முனைந்திருக்கும் இயக்குநர் மந்திரமூர்த்தி சொற்ப கதாபாத்திரங்களின் வழி அதை நிறுவுகிறார். ‘ஜெய் ஸ்ரீராம்’ பாடலுடன் அயோத்தி மண்ணில் தொடங்கும் படம் தமிழகத்தில் நுழைந்து வேகமெடுத்து விரிவடைகிறது. இருவேறு மாநில மண்ணைச் சேர்ந்தவர்கள் ‘மனிதம்’ என்ற ஒற்றைப் புள்ளியில் இணையும் இடம், மொழி  புரியாவிட்டாலும் உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானது என்பதை படம் நெடுங்கிலும் கடத்தியிருந்த விதம் ஈர்ப்பு.  படத்தின் இறுதிப்பகுதி, உண்மையில் படத்தின் தரத்தை கூட்டி அதன் ஆவரேஜ் தன்மையிலிருந்து உயர்த்திவிடுகிறது.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும், என்.ஆர்.ரகுநந்தனின் இசையும் காட்சிகளுக்கு வலு சேர்க்கின்றன.

எப்போதாவது பூக்கும் அற்புத மலர் இப்போது பூத்திருக்கிறது ‘அயோத்தி’ திரைப்படமாக! கண்டிப்பாக திரையரங்குக்குச் சென்று பார்க்க வேண்டியது அனைவரின் கடமை!