அயலான் – விமர்சனம்
நடிப்பு: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கெல்கர், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு, கோதண்டம், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர்
இயக்கம்: ஆர்.ரவிகுமார்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
படத்தொகுப்பு: ரூபன்
கலை இயக்கம்: முத்துராஜ்
தயாரிப்பு: ‘கேஜேஆர் ஸ்டூடியோஸ்’ கோட்டபாடி ஜே.ராஜேஷ் & ’ஃபாண்டம் எஃப் எக்ஸ் ஸ்டூடியோஸ்’
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)
பெரிய அளவில் குழந்தைகளையும், பெண்களையும் கவர்ந்துள்ள நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயனும், தமிழுக்குப் புதிதான ‘டைம் டிராவல்’ என்ற கான்செப்ட்டை மையமாகக் கொண்ட ‘இன்று நேற்று நாளை’ என்ற அறிவியல்புனைவு வெற்றிப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர்.ரவிகுமாரும் இணைந்து, பொங்கல் விடுமுறையில் குடும்பத்துடன் குதூகலமாய் கண்டு களிக்கத் தக்க அட்டகாசமான திரைப்படமாக ‘அயலான்’ படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
“என்றென்றும் நினைவில்” என அமரர் விஜயகாந்துக்கு தயாரிப்பாளர் கேஜேஆர், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் அஞ்சலி செலுத்தும் ‘கார்டு’ வந்துபோன பின் படக்கதை துவங்குகிறது…
’2030-ல் உலக மக்கள்தொகை பல மடங்கு அதிகரித்துவிடும். ஆனால் பூமியின் மேலடிப் பரப்பிலிருந்து இப்போது எடுக்கப்படும் பெட்ரோலியம் போன்ற புதைபடிவ எரிசக்தியின் அளவு, அப்போது பாதியாக குறைந்துபோகும். அதனால் உலகெங்கும் எரிசக்தி தட்டுப்பாடு தலை விரித்தாடும்’ என்பதை கணிக்கும் பேராசைக்கார வில்லன் ஆர்யன் (ஷரத் கெல்கர்), தனது ‘ஆர்யன் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற கார்ப்பரேட் முதலாளித்துவ நிறுவனம் மூலம், பூமிக்குள் பல்லாயிரம் மைல் ஆழத்திலுள்ள அதன் மையத்தில் இருக்கும் நெருப்புக்குழம்புக்கு எரிசக்தியாக விளங்கும் ஆற்றல்மிக்க ‘நோவா’ என்ற வாயுவை எடுத்து, அதையும், அதைக் கொண்டு தயாரிக்கப்படும் பேரழிவு ஆயுதங்களையும் விற்றால், நினைத்துப் பார்க்கவே முடியாத அளவு பெரும் பணக்காரர் ஆகலாம்’ என்ற கனவுடன் திட்டம் தீட்டுகிறான்.
விண்வெளியில் மிதக்கும் விண்பாறை ஒன்றிலிருந்து பெயர்ந்த ஒரு பகுதி, பூமியில் மோதி சிதறுகையில் தெறித்த ’ஸ்பார்க்’ என்ற அதிசய சிறுதுண்டு, வில்லன் ஆர்யன் கையில் சிக்குகிறது. அதை கருவியாகப் பயன்படுத்தி, பூமியின் மையப்பகுதி வரை ஆழ்துளை இட்டு, ‘நோவா’ வாயுவை உறிஞ்சி எடுப்பதே ஆர்யனின் திட்டம். இந்த திட்டத்தை செயல்படுத்தினால், பயங்கர தீ விபத்து நிகழ்ந்து பூமியும், அதிலுள்ள உயிரினங்களும் அழிந்துபோகும் ஆபத்து ஏற்படும் என தெரிந்தும், அது பற்றி சட்டை செய்யாமல், தன் திட்டத்தை சென்னையில் நிறைவேற்ற முனைகிறான் ஆர்யன்.
ஆர்யனிடம் உள்ள ’ஸ்பார்க்’ என்ற கருவியை கைப்பற்றி, அவனது திட்டத்தை முடக்கினால் மட்டுமே பூமியைக் காப்பாற்ற முடியும் என்ற தெளிவுடன், வேற்று கிரகத்திலிருந்து தனது விண்கப்பலில் (Spaceship) கிளம்பி, ரகசியப் பயணமாக பூமிக்கு – ஆர்யன் இருக்கும் சென்னைக்கு – வருகிறது ஒரு ஏலியன் (வேற்று கிரகவாசி). அது ‘ஸ்பார்க்’கை கைப்பற்ற ஆர்யனின் இடத்துக்குச் செல்லும்போது, ஆர்யனின் கையாட்களால் தாக்கப்பட்டு, தன் விண்கப்பலையும் பறிகொடுக்கிறது.
மறுபுறம், பூம்பாறை என்ற மலைகிராமத்தில் தனது அம்மாவுடன் (பானுப்ரியா) விவசாயம் செய்துவரும் நாயகன் தமிழ் (சிவகார்த்திகேயன்), பல்லுயிர் பேணுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். குடும்பம் கடனில் தத்தளிப்பதை உணர்ந்து, வேறு வழி இல்லாமல் பிழைப்புத் தேடி சென்னை வருகிறார். இங்கு ’பிறந்தநாள் சர்ப்ரைஸ் பார்ட்டிகள்’ ஏற்பாடு செய்து பிழைக்கும் கருணாகரன், யோகிபாபு, கோதண்டம் ஆகியோருடன் சேர்ந்துகொள்கிறார்.
பூமிக்கு வந்த நோக்கம் நிறைவேறாததோடு, விண்கப்பலையும் பறிகொடுத்து விட்டு, சொந்த கிரகத்துக்கு திரும்பிச் செல்ல இயலாத நிலையில் இருக்கும் ஏலியன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் உள்ளவராகவும், நல்லுள்ளம் கொண்டவராகவும் விளங்கும் தமிழை சந்தித்து அவருடன் நட்பு கொள்கிறது. தமிழும், அவரது குழுவினரும் ஏலியனுக்கு ‘டாட்டூ’ என செல்லமாய் பெயர் சூட்டுகிறார்கள். அவர்களிடம் ஆர்யனின் ஆபத்தான திட்டத்தை எடுத்துச் சொல்லுகிறது டாட்டூ. ஒரு கட்டத்தில் டாட்டூவின் சக்தி தமிழின் உடம்புக்கு மாறுகிறது.
தமிழும் டாட்டூவும் சேர்ந்து ஆர்யனின் திட்டத்தை முறியடித்தார்களா? டாட்டூவுக்கு அதன் விண்கப்பல் திரும்பக் கிடைத்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘அயலான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
புதுமையும், கருத்தாழமும், ஜனரஞ்சகமும் நிறைந்த இந்த படத்தின் திரைக்கதையைத் தேர்வு செய்து நடிக்க முன்வந்ததற்காக சிவகார்த்திகேயனைப் பாராட்டலாம். பூம்பாறை மலைகிராமத்தில் விவசாயம் செய்யும் தமிழ் என்ற இளைஞராக, பள்ளத்தில் விழுந்த யானைக்குட்டியை வெளியே தூக்கி அதன் தாயோடு சேர்க்கும் நல்லுள்ளம் கொண்டவராக, வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் தன் தோட்டப்பயிர் மொத்தமும் நாசமானபோதும் “இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல, புழு-பூச்சிகளுக்கும் சொந்தமானது தான்” என சொல்லி வெட்டுக்கிளிகளை அழிக்கக் கூடாது என பிடிவாதம் காட்டும் பல்லுயிர் பேணுபவராக அறிமுகக் காட்சிகளிலேயே அட்டகாசமாக நடித்து, தனது கதாபாத்திரத்தை வலுவாக நிலைநாட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். சென்னைக்கு வந்தபின் கருணாகரன், யோகி பாபு, கோதண்டம் ஆகியோருடன் சேர்ந்து காமெடி பண்ணி, பார்வையாளர்களின் மனங்களை குதூகலப்படுத்தியிருக்கிறார். அவருக்கும் ஏலியனுக்கும் நட்பு ஏற்படுவது, ஏலியனின் சக்தி அவருக்கு கை மாறிய பிறகு திரைக்கதையில் வரும் மாற்றங்கள் போன்ற அனைத்துப் புதுமைகளையும் சரியாக உள்வாங்கி திறம்பட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சுருக்கமாகச் சொல்வதென்றால், காமெடி, ஆக்ஷன், எமோஷன் ஆகிய அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்துள்ள நாயகன் தமிழ் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக சிவகார்த்திகேயனைத் தவிர வேறு எந்த நடிகரையும் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. பாராட்டுகள் சிவகார்த்திகேயன்.
நாயகி தாராவாக வரும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு, நாயகனைக் காதலிப்பதைத் தவிர கதையில் பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றாலும், கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகனின் அம்மாவாக பானுப்ரியா சிறிது நேரமே வந்தாலும், அனுபவ நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
பேராசை கொண்ட கார்ப்பரேட் வில்லன் ஆர்யனாக வரும் ஷரத் கெல்கர், ஒயிட் காலர் கிரிமினலாக மிரட்டியிருக்கிறார். அவர் கை காட்டும் நபர்களை எல்லாம் படபடவென சுட்டுக் கொன்று குவிக்கும் உறுதுணை கதாபாத்திரத்தை இஷா கோபிகர் செம்மையாக செய்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகர்களான கருணாகரன், யோகி பாபு, கோதண்டம், பால சரவணன் ஆகியோர் தாங்கள் வரும் காட்சிகளில் எல்லாம் காமெடி சரவெடிகளைக் கொளுத்திப் போட்டு, படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள்.
தமிழ் ரசிகர்களை ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் ‘டைம் டிராவல்’ ஜானர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் ஆர்.ரவிகுமார், இந்த ‘அயலான்’ படத்தின் மூலம் ‘ஏலியன்’ ஜானர் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார். வேற்று கிரகவாசிகள் நம் பூமியை அழிக்க வருவதாகத் தான் பெரும்பாலான ’ஏலியன்’ ஜானர் ஹாலிவுட் படக்கதைகள் இருக்கும். அவற்றுக்கு மாறாக, பூமியை பேரழிவிலிருந்து காப்பாற்ற ஒரு வேற்று கிரகவாசி வருகிறது எனும் வித்தியாசமான கதைக்கருவை உருவாக்கி, அதை எளிய ரசிகனும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக, ஜனரஞ்சகமாக திரைக்கதை அமைத்து, விறுவிறுப்புடன் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர். சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான மணியான கருத்துகளை – வலுக்கட்டாயமாகத் திணிக்காமல் – ரொம்ப இயல்பாக தூவி விட்டிருப்பது போற்றுதலுக்கு உரியது. எளிய நாயகனுக்கு ‘தமிழ்’ என்றும், கார்ப்பரேட் வில்லனுக்கு ‘ஆர்யன்’ என்றும் பெயர் வைத்து, தனது அரசியல் சார்பை துணிச்சலாக வெளிக்காட்டியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள். அவர் வெகுமக்களுக்குப் பயன்படும் இது போன்ற ‘ட்ரெண்ட் செட்டர்’ வெற்றிப்படங்களை தொடர்ந்து படைத்தளிக்க நமது வாழ்த்துகள்.
இயக்குநரின் வெற்றிக்கு, அசாத்திய திறமை கொண்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் எவ்வித குறைபாடுமின்றி தத்ரூபமாய் அமைந்திருப்பது அசத்தல். ஏலியனின் தோற்றம், அதன் உடல் அசைவுகள், உடல்மொழி ஆகியவை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கிற விதமாய், நம்பத் தகுந்த விதத்தில் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஏலியனின் குரலாக வந்திருக்கும் சித்தார்த்தின் குரல் கச்சிதமாகப் பொருந்தி ரசிக்க வைக்கிறது.
இயற்கை எழில் கொஞ்சும் பூம்பாறை மலைக்கிராமம், உயர்ந்தோங்கி இருக்கும் சென்னை பெருநகரம், அழகாகவும், அச்சமூட்டும் விதமாகவும் இருக்கும் அதிநவீன ஆய்வுக்கூடங்கள் என ஒவ்வொன்றையும் அதற்கான அழகியலுடன் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. வாட்டர் டேங்க் மேல் இருக்கும் வீடு, அதிநவீன ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்டவற்றை சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் கலை இயக்குநர் முத்துராஜ். ஹாலிவுட் ஆக்ஷன் படங்களுக்கு நிகரான பின்னணி இசையை வழங்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
மொத்தத்தில், 2024 பொங்கல் – ’அயலான்’ பொங்கல்! அனைத்து தரப்பினரும் குடும்பம் குடும்பமாக ஜாலியாகப் போய், ரசித்து, ருசித்து வரலாம்!