அவள் – விமர்சனம்
வீட்டை விட்டுப் போ என ஒரு குடும்பத்தை விரட்டும் பேயின் கதையும் அதற்கான பின்புலமுமே ‘அவள்’.
இமாச்சலப் பிரதேசத்தில் இளம் தம்பதியினர் சித்தார்த்தும், ஆண்ட்ரியாவும் காதலும் ஊடலுமாக அர்த்தமுள்ள வாழ்வுக்குள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மூளை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சையில் சித்தார்த் இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராக இருக்கிறார். அமைதி, அன்பு, அழகு என இவர்களது பயணம் கவிதையைப் போல் நீள்கிறது. இந்தச் சூழலில் சித்தார்த் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் அதுல் குல்கர்னி தன் குடும்பத்தோடு குடியேறுகிறார். அவரின் மகள் அனிஷா விக்டர் மூலம் இரு வீட்டாரின் நிம்மதியும் பறிபோகிறது. அனிஷா விக்டர் அப்படி என்ன செய்கிறார்? அவருக்கு என்ன ஆயிற்று? அவர் திரும்ப பழைய நிலைக்கு வந்தாரா? அதனால் ஏற்படும் இழப்புகளும், பாதிப்புகளும் என்ன என்பது மீதிக் கதை.
திகில் கிளப்பும், பீதியை வரவழைக்கும் எல்லா பேய்ப் படங்களும் ஏதோ ஒரு வரையறைக்குள் உட்பட்டுதான் எடுக்கப்படுகிறது. அதில் லாஜிக் பார்க்க முடியாதுதான். ஆனால், அந்தப் படத்தின் மூலம் எப்படி பயத்தில் உறைய வைக்க முடியும் என்பதுதான் சவால். அந்த சவாலை தன் சாதுர்யமான இயக்கத்தில் எளிதாக சந்தித்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் மிலிந்த் ராவ்.
சித்தார்த்துக்கு இது முக்கியமான படம். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் பக்கத்து வீட்டு இளைஞனுக்கான குணாதிசயங்களை இயல்பாக பிரதிபலிக்கிறார். மருத்துவருக்கான பொறுப்பை வெளிப்படுத்துகிறார். தூய அன்பில், தீராக் காதலில் ஆண்ட்ரியாவின் சிறந்த துணையாக தேர்ந்த நடிப்பை வழங்குகிறார்.
ஆண்ட்ரியா சின்னச் சின்ன ரியாக்ஷன்களிலும் கவனிக்க வைக்கிறார். போடா என செல்லமாக கூறுவது, அடங்க மாட்டியா என காதலுடன் கிறங்குவது, திடீரென்று பதறி விழுந்து சூழல் உணர்ந்து சுதாரித்துக் கொள்வது என பக்குவமான நடிப்பைத் தந்திருக்கிறார்.
படத்தின் மிகப் பெரிய பலம் அனிஷா விக்டர்தான். இரு வேறு பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தும் போது அச்சு அசலாக அந்தக் கதாபாத்திரத்துக்கு அளவெடுத்து வார்க்கப்பட்டதைப் போல கச்சிதமாகப் பொருந்துகிறார். தோற்றம், உடல்மொழி, பதற்றம், இன்னொரு முகம் என அத்தனையிலும் அசத்துகிறார். அதுல் குல்கர்னி, சுரேஷ் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.
படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் மிரட்டல் என்று சொல்லலாம். கிரிஷ் ஜியின் பின்னணி இசை திகிலையும், திகைப்பையும் வரவழைக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு இமாச்சல பிரதேசத்தின் ரம்மியத்தை கண்களுக்குள் கடத்துகிறது. லாரன்ஸ் கிஷோர் கிளைமேக்ஸ் நெருங்கும் காட்சியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். விஷ்ணு கோவிந்த், சங்கர், விஜய் ரத்தினம் ஆகிய மூவரின் ஒலி வடிவமைப்பு துல்லியம்.
தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக இயக்குநர் மிலிந்த் ராவ் மெனக்கிடல் செய்திருக்கிறார். அதை காட்சிகளின் ஒவ்வொரு ஃபிரேமும் உணர்த்துகிறது. ஆண்ட்ரியா- சித்தார்த்தின் கட்டற்ற காதல் காட்சிகள், பேய் படத்தில் பொருத்தமாக இணைக்கப்பட்ட விதம் இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.
அனிஷா விக்டர் கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது. அனிஷாவின் தனிமை, துணைக்காக பேய் நாவல்கள், படங்கள் பார்த்தல், கற்பனை உலகம் என சொல்லி பின் அது காரணமில்லை என்று நிஜக் காரணம் சொல்லப்படும் விதம் திரைக்கதைக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
ஆனால், பின்புலத்தில் சொல்லப்பட்ட கதை வலுவாகவும், அழுத்தமாகவும் இல்லாததால் அது பெரிதாக ரசிகர்களிடம் எடுபடாமல் போகிறது. அந்தக் காட்சிகள் ஈர்க்காத காரணத்தால் அடுத்தடுத்து சித்தார்த் காட்டும் வித்தியாசங்கள் நாயக பிம்பத்தின் துணைக் கூறாகவே தென்படுகிறது. அனிஷா விக்டர் ஏன் கிணற்றுக்குள் விழப் போகிறார், அவர் எப்படி தூண்டப்பட்டார், வீட்டு பணிப்பெண் நிலை என்ன போன்ற சில கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை.
ஒரு பெண் குழந்தையைக் கொன்றுதான், ஆண் குழந்தை கிடைக்கும் என்றால் அந்த ஆண் வேண்டாம் என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. அந்த கருத்துக்கான விவரணைகள் தான் கவன ஈர்ப்பைத் தரவில்லை. பின்னணிக் கதையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி திரைக்கதை திசையை வேறுபக்கம் திருப்பி இருந்தால் ‘அவள்’ எல்லா இடங்களிலும் மிரட்டி இருப்பாள். ஆனாலும், தொழில்நுட்ப நேர்த்தியில் ‘அவள்’ தனித்து நிற்கிறாள்.