அவள் அப்படித்தான் 2 – விமர்சனம்

நடிப்பு: அபுதாஹிர், சினேகா பார்த்திப ராஜா, ராஜேஸ்வரி, சுமித்ரா, அனிதாஸ்ரீ, சுதாகர், வெங்கட்ரமணன், தனபால், சிறுமி கார்த்திகா, தொல்காப்பியன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: இரா.மு. சிதம்பரம்

ஒளிப்பதிவு: வேதா செல்வம்

படத்தொகுப்பு: அகமது

இசை: அரவிந்த் சித்தார்த்

கலை: டி.பாலசுப்பிரமணியன்

தயாரிப்பு: ’யுன் ஃப்ளிக்ஸ்’ அபுதாஹிர்

பத்திரிகை தொடர்பு: சக்தி சரவணன்

திரைப்படக் கல்லூரி மாணவர் ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான் ‘ படம் 1978-ல் வெளியானது. பெண் என்பவள் யாருடைய எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும்  உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப் படம் .அதே சிந்தனையின் தொடர்ச்சியாக 2023-ல் வந்திருக்கும் படம் தான் அவள் அப்படித்தான் 2.

கதையின் நாயகன் நாயகி இருவருக்கிடையில் நடக்கும் ஈகோ யுத்தம் தான் இந்தப் படம்.

மஞ்சு ஒரு தனியார் பள்ளி ஆசிரியை. அறிவும் துணிவும் மனிதனுக்கு அழகு என்று வளர்க்கப்பட்டவள். பிறருக்கு உதவுவது, தவறுகளைத் தட்டிக் கேட்பது,  சுதந்திரமான சிந்தனையோடு இயங்குவது என்று இருப்பவள்.

அவளது கணவன் ராம் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறான். அவனிடம் பலரும் வேலை பார்க்கிறார்கள்.

ராம் – மஞ்சு தம்பதிக்கு பள்ளி செல்லும் ஒரே மகள்.

கதாநாயகன் எதையும்  புறவயமாக மெட்டீரியல் ஆக உணர்வுகளற்ற பொருள்களாகப் பார்க்கும் மனோபாவம் கொண்டவன்.

நாயகியோ  அதையும் தாண்டி அகவயமாக மனம் ,உணர்வுகள், சிந்தனைகள் அனைத்தும் சேர்ந்ததுதான் மனிதப் பிறவி என்று நம்புகிறவள். சுருக்கமாகச் சொன்னால் மனிதனைத் தோற்றம் உடல் என்று பார்க்கும் கணவனுக்கு நேர் எதிராக, உணர்வுகளின் குவியல் தான் மனிதன் என்று பார்ப்பவள் அவள்.

ஆணும் பெண்ணும் எப்படிப் பாலினத்தில் தனியாக இருக்கிறார்களோ அப்படித்தான் குணத்திலும் இருவரும் தனியானவர்கள் என்பது அவளது நம்பிக்கை.

அடிக்கடி அவர்களுக்குள் நிகழும் உரையாடல்கள்  விமர்சனங்களாக விவாதமாக கருத்து மோதலாக மாறுவது உண்டு. இருந்தாலும் அவரவர் இயல்பு, போக்கு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் சனிக்கிழமை காலை பள்ளி வேலைக்குச் சென்ற மஞ்சு இரவு 10 மணி வரை வீடு வந்து சேரவில்லை.

கதாநாயகன், அவனது அம்மா, உடன் இருக்கும் அத்தை, குழந்தை என அனைவரும் பதற்றம் அடைகிறார்கள். தன் நண்பனுடன் இணைந்து கொண்டு வெளியே தேடுகிறான் நாயகன் .எங்கும்  உரிய பதில் இல்லை. குடும்பமே பரபரப்பாகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை

பொழுது விடிந்து மஞ்சு வீடு வந்து சேர்கிறாள். இரவு எங்கே போயிருந்தாள்? என்பதுதான் குடும்பத்தினர் முன்னே நிற்கும் கேள்வி. ஆனால் கேள்வியை “ராத்திரி எங்கே போயிருந்தாய்?” என்று அவள் கணவன் கோபமாகக் கேட்க, அவளோ “ராத்திரி நான் எங்கே போயிருந்தேன்னு தெரியணுமா? இல்ல என்ன நடந்துச்சுன்னு தெரியணுமா?” என்கிறாள். இப்படி நேரடியான  பதிலை மட்டும் சொல்லாமல் ஏதேதோ பேசுகிறாள், தன் மனம் நினைத்தபடி ஏதேதோ செய்கிறாள். என்ன நெஞ்சழுத்தமென்று அவனது ஈகோ தலைதூக்கி நிமிர, எதற்குச் சொல்ல வேண்டும் என்று அவளது மனம் திமிறிக் கேள்வி கேட்க, மோதல் வெடிக்கிறது. முடிவு என்ன என்பதுதான் ‘அவள் அப்படித்தான் 2 ‘படத்தின் கதை செல்லும் பாதை.

கதையின் பெரும்பகுதி ஒரு வீட்டுக்குள் நடக்கிறது.மஞ்சுவைத் தேடும்போது காட்டப்படும் சிற்சில வெளிப்புற காட்சிகளோடு சரி. கதை நிகழும்போது இதை நாம் உணராத வகையில் காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.

முதலில் மஞ்சு இல்லாத குடும்பத்தினர் அவர்கள் சார்ந்த உரையாடல் என்று கதை தொடங்குகிறது. மஞ்சு காணாமல் போன பிறகு மஞ்சுவைத் தேடுகிறபோது மஞ்சுவின் பாத்திரத்தை குணச்சித்திரங்களை உணரும் வகையில் காட்சிகள் வருகின்றன. மஞ்சு எப்படிப்பட்டவள் என்று அதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .இதைத் தனியாக விளக்காமல் அது சார்ந்த காட்சிகள் மூலம் விளக்கியுள்ளார் இயக்குநர் .

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு நேர் எதிரானது அல்ல என்றும் நம் நாட்டின் கலாச்சாரம் குடும்பம் குழந்தை நலன்களைக் காப்பாற்ற பெண் மீது அதிகாரத்தை செலுத்துவதே தவறு என்று கூறுகிற கதை.

ஒரு கேள்விக்கு என்ன பதில் என்ற ஒற்றை வரியுடன் இந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதையின் தன்மையே பேச்சு அதன் விளைவாக எழும் மோதல்கள் என்று இருப்பதால் வசனங்கள் கூர்மையாக உள்ளன. கணவன் மனைவிக்குள் நடக்கும் ஆண் பெண் சார்ந்த விவாதங்கள் கூட அர்த்தமுள்ளதாக உள்ளன.படத்தின் பல போதாமைகளை நல்ல சில வசனங்கள் சமன் செய்கின்றன.

அதே நேரம்  திரும்பத் திரும்ப வரும் சில வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

மஞ்சு பேசும் வசனங்கள் மூலம் அவளது குணச்சித்திரம் தெளிவாக வெளிப்படுகிறது. அதேபோல் கதாநாயகன் பேசுவதும் சரி அவனது பார்வையில் சரியானது என்று உணர வைக்கும்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் பேசிக் கொண்டே இருப்பதால் சலிப்பூட்டுகிறது. இது தொலைக்காட்சித் தொடரா என்று எண்ண வைக்கிறது. அதைத் தெரியாத வகையில் இன்னும் காட்சிகளைச் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம்.

படத்தில் நடித்திருப்பவர்களின் நடிப்பைப் பொறுத்தவரையில் குறை சொல்ல எதுவும் இல்லை.

கதையின் நாயகியாக  மஞ்சு கதாபாத்திரம் ஏற்றுள்ள சினேகா பார்த்திப ராஜாவின் தோற்றமும், உடல்மொழியும், முக பாவங்களும்  மஞ்சு என்பவள் இப்படித்தான் என்ற கருத்தை சொல்லாமல் சொல்லி விடுகின்றன.

மஞ்சுவின் கணவனாக வரும் அபுதாஹிர்  இறுக்கமாக, கடுகடுவென  முகத்தை வைத்துக்கொண்டு அந்த நடுத்தர வயது கணவருக்குரிய உணர்வுகளை இயல்பாகவே வெளிப் படுத்தியுள்ளார்.

கணவன்  ராமின் அம்மாவாக வரும் ராஜேஸ்வரி, மனைவி மஞ்சுவின் அம்மாவாக வரும் அனிதா ஸ்ரீ, ஆச்சியாக வரும் சுமித்ரா,மகள் சிறுமி கார்த்திகா, மஞ்சுவின் அப்பா இயக்குநர் வெங்கட்ரமணன் என நடித்தவர்களும்  தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்துள்ளார்கள்.

ராமின் அம்மாவும் மஞ்சுவின் அம்மாவும் திருமணத்திற்கு முன்பே ஏற்கெனவே தெரிந்தவர்களா உறவினர்களா? நண்பர்களா?என்பது தெரியவில்லை. ஏன் என்றால் சம்பந்தி முறை கடந்து நன்றாக பேசிப் பழகி நெருக்கமாக இருக்கிறார்கள்.  ஆனால் அவர்களுக்குள் உள்ள நெருக்கம் உறவினரா நண்பர்களா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

கதாநாயகனின் அத்தையாக  வருபவரிடம் மஞ்சுவுக்கு நல்ல புரிதல் இருக்கிறது. அவர்தான் தனது உதாரணம் என்றெல்லாம் சொல்கிறாள். அப்படிப்பட்ட ஒருவர் அந்தக் குடும்பத்தில் இருக்கும் போது பிரச்சினை இவ்வளவு தூரம் வெடிக்க வாய்ப்பு இல்லையே என்கிற கேள்வி நமக்குள் இருக்கிறது.

தயாரிப்பாளர் பட்ஜெட்டுக்கும் இயக்குநரின் பார்வைக்கும் ஏற்றபடி திருப்தியான ஒளிப்பதிவை வழங்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் வேதா செல்வம்.

வீட்டுக்குள் மஞ்சு படியேறும் காட்சிகளின் எண்ணிக்கை குறைத்திருக்கலாம்.

பாடல்கள் இல்லாத இந்தப் படத்திற்குக் கதையின் தன்மைக்கு ஏற்றபடியும் பின்னணியில் மிகையொலி காட்டாமலும் இசை அமைத்துள்ளார் இசை அமைப்பாளர் அரவிந்த் சித்தார்த். குறிப்பாக அவர் வெளிப்படுத்தியுள்ள வயலினின் ரீங்காரம் காட்சிகளுக்கு அழுத்தம் கூட்டுகின்றன.

படத்தைச் சிக்கனமாக எடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் எடுத்திருப்பது புரிகிறது.

வசனங்களுக்கு மெனக்கெட்டு இருப்பது போல் காட்சிகளை  சுவாரஸ்யப்படுத்த முயன்றிருந்தால் இந்தப் படம் பெண்ணியம் சார்ந்து இயல்பான கதை சொன்ன முக்கியமான படமாக, பெண்ணின் உரிமைகளை இயல்புகளைப் பேசும் குறிப்பிடத்தக்க படமாக மாறியிருக்கும்.