ஆகஸ்டு 16, 1947 – விமர்சனம்

நடிப்பு: கவுதம் கார்த்திக், ரேவதி, புகழ், ரிச்சர்ட் அஷ்டன், ஜேசன் ஷா, மதுசூதன ராவ் மற்றும் பலர்

இயக்கம்: என்.எஸ்.பொன்குமார்

இசை: ஷான் ரோல்டன்

தயாரிப்பு: ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்சன்ஸ், காட் பிளஸ் எண்டர்டெயின்மெண்ட் & பர்ப்புள் புல் எண்டர்டெயின்மெண்ட்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)

ஆகஸ்டு 15, 1947 அன்று ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெறுகிறது. இது தெரியாத ஒரு குக்கிராம மக்கள், அதற்குப் பிறகும் தொடர்ந்து ஆங்கிலேய அதிகாரியின் கொடுமைக்கும் கொடூரத்துக்கும் ஆளாகி வதைபடுகிறார்கள் என  கற்பனை செய்தால், அது தான் ‘ஆகஸ்டு 16, 1947’ எனும் புனைவுத் திரைப்படம்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு சில தினங்களுக்கு முன் படக்கதை தொடங்குகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில், மலைகள் சூழ்ந்த குக்கிராமம் செங்காடு. வெளியுலகத் தொடர்பே இல்லாத இந்த குக்கிராமம், பருத்திநூல் வளம் நிறைந்தது.  அவ்வூர் மக்களுக்கு, பருத்தியிலிருந்து நூல் எடுப்பது தான் வாழ்வாதாரம். இந்த வேலை செய்யும் மக்களுக்கு ஒழுங்காக சோ‍று தண்ணீர் கொடுக்காமல், சிறுநீர்கூட கழிக்க விடாமல், மாடுகளைப் போல் 16 மணி நேரம் வேலை செய்ய வைத்து இம்சிக்கிறான் ஆங்கிலேய அரக்க அதிகாரி ராபர்ட் (ரிச்சர்ட் அஷ்டன்). இவனை எதிர்ப்போருக்கு மரண தண்டனை; வேலையில் சுணக்கம் காட்டுவோருக்கு சவுக்கடி-சுடுநீர் அபிஷேகம்.

0a1l

ஆங்கிலேய அதிகாரி ராபர்ட்டின் ஒரே மகன் ஜஸ்டின் (ஜேசன் ஷா). இவன், கண்ணில் படும் கன்னிப்பெண்களை தூக்கிக் கொண்டுபோய் பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரன். ராபர்ட்டும், ஜஸ்டினும் செய்யும் அட்டூழியங்களுக்கு, ஆங்கிலேய விசுவாசியான அவ்வூர் ஜமீன்தார் (மதுசூதன ராவ்) துணை போகிறார்.

எனினும், தனது மகள் தீபாலி (ரேவதி) ஜஸ்டின் கண்ணில் பட்டுவிடக் கூடாது என அவளை ரகசியமாக வளர்க்கும் ஜமீன்தார், அவள் சிறு வயதிலேயே இறந்துவிட்டதாகப் பொய் சொல்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் ஜஸ்டின் கண்ணில் அழகிய குமரிப்பெண் தீபாலி பட்டுவிட, அவளை தன்னிடம் அனுப்பி வைக்குமாறு ஜமீன்தாருக்கு கட்டளையிடுகிறான். அதனால், தனது மகளை உயிரோடு பூமியில் புதைத்து ”பூமி தானம்” செய்கிறார் ஜமீன். தீபாலியை சிறு வயதிலிருந்தே ஒருதலையாய் காதலிக்கும் பரமன் (கவுதம் கார்த்திக்) அவளைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறான். அதன்பின் தீபாலியிடம் தன் இழிசெயலைக் காட்ட ஜஸ்டின் முயலும்போது, அவனை கொன்றொழிக்கிறான் பரமன்.

இதற்கிடையில், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த விஷயம் ராபர்ட்டுக்குத் தெரிய வர, அதை அவன் கிராம மக்களிடமிருந்து மறைத்து, அவர்களை தொடர்ந்து கடினமாக உழைக்க வைத்து ஆதாயம் காண விரும்புகிறான். தனது மகன் ஜஸ்டின் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும், அவனைக் கொன்ற பரமனை பழி தீர்க்க வேண்டும் என்று ஆவேசம் கொள்கிறான்.

இதன்பின் பரமனின் கதி என்ன? சுதந்திரம் கிடைத்த செய்தி செங்காடு மக்களுக்குத் தெரிந்ததா, இல்லையா? இறுதியில் ராபர்ட் என்ன ஆனான்? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ஆகஸ்டு 16, 1947’ திரைப்படத்தின் மீதிக்கதை.

சமீபத்தில் வெளிவந்த ‘பத்து தல’ படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து நல்ல நடிகர் என பெயர் பெற்ற கவுதம் கார்த்திக், இந்தப் படத்திலும் முதன்மையான பரமன் என்ற கதாபாத்திரத்தில் மிகை இல்லாமல் அருமையாக நடித்து தனது நற்பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஜமீன்தார் மகளை ஒருதலையாய் காதலிக்கும் காட்சிகளில் நம் உள்ளத்தைத் தொடுகிறார். எதிரிகளைப் பந்தாடும்போது “சபாஷ்” பெறுகிறார். அவரது காஸ்ட்யூம், மதராச பட்டணம்’ படத்தில் ஆர்யா அணிந்திருந்த உடையை ஞாபகப்படுத்துகிறது.

ஜமீன்தாரின் மகளாக, நாயகி தீபாலியாக வரும் ரேவதி, இயற்கையாகவே அழகோ அழகு பேரழகு. வண்ண வண்ண உடைகளில் பொருத்தமாக வந்து மனதை கிறங்கடிக்கிறார். சில கோணங்களில் நடிகை கீர்த்தி சுரேஷை நினைவூட்டுகிறார். அறிமுக நடிகை போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகை போல் நடித்து தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

நாயகன் பரமனின் நண்பனாக குணச்சித்திர வேடத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடித்துள்ளார். கிடைத்தற்கரிய நல்ல வாய்ப்பை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி தன் நடிப்புத் திறமையை ரசிக்கும் வகையில் வெளிப்படுத்தியிருக்கிறார். தனது நாக்கு அறுக்கப்பட்ட நிலையில், ஊராரிடம் உண்மையைச் சொல்ல அவர் படாத பாடு படும் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.

ஆங்கிலேய அரக்க அதிகாரி ராபர்ட்டாக வரும் ரிச்சர்ட் அஷ்டன், அவரது ‘பொம்பள பொறுக்கி’ மகன் ஜஸ்டினாக வரும் ஜேசன் ஷா ஆகிய இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். பழைய படங்களில் வரும் கொடூர பண்ணையார்களின் கதாபாத்திரங்களிலிருந்து இவர்களது பாத்திரங்கள் நகல் எடுக்கப்பட்டதோ என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமுள்ள ஜமீன்தாராகவும், நாயகியின் அப்பாவாகவும் வரும் மதுசூதன ராவும், ஊர் மக்களின் பிரதிநிதிகளாக வரும் பாட்டி உள்ளிட்ட ஏனையோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் 8 வருடங்கள் உதவி இயக்குனராக பணி புரிந்த என்.எஸ்.பொன்குமார், அறிமுக இயக்குனராக இப்படத்தை இயக்கியுள்ளார். கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதிலும், அவர்களை வேலை வாங்குவதிலும், காட்சிகளை சுவாரஸ்யமாக அமைப்பதிலும் இயக்குனர் மிகுந்த கவனம் செலுத்தி நேர்த்தியாக படத்தைக் கொடுத்திருக்கிறார். அதே அளவுக்கு திரைக்கதையிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், படத்தை கூடுதல் சுவாரஸ்யத்துடன் ரசித்திருக்க முடியும்.

ஷான் ரோல்டன் பின்னணி இசை ஓ.கே. ரகம். பீரியட் ஃபிலிம் என்பதால் கடந்த காலத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் கலை இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார்.

’ஆகஸ்டு 16, 1947’ – கவுதம் கார்த்திக்குக்கு இன்னொரு வெற்றிப்படம்!