அஸ்வின்ஸ் – விமர்சனம்

நடிப்பு: வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயா தீப் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: தருண் தேஜா

ஒளிப்பதிவு: ஏ.எம்.எட்வின் சகாய்

படத்தொகுப்பு: வெங்கட் ராஜன்

இசை: விஜய் சித்தார்த்

தயாரிப்பு: ’ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா’ பி.வி.எஸ்.என்.பிரசாத்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)

அரைத்த மாவையே அரைக்கும் வழக்கமான அமானுஷ்ய படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக, கதை புதியது – களம் புதியது – தரம் புதியது என்று புருவம் உயர்த்தி வியந்தோதும்படியான பயங்கர திகில் படமாக, பேய் – பிசாசை நம்பாதவர்களைக் கூட பயந்து நடுங்கச் செய்யும் அட்டகாசமான அசல் ஹாரர் படமாக படைக்கப்பட்டிருக்கிறது ‘அஸ்வின்ஸ்’.

ஒரு விவசாயிக்கு இரண்டு மகன்கள். இருவரும் இரட்டையர்கள். சிறுவர்கள். ஒருநாள் தண்ணீரில் மூழ்கி அவர்கள் இறந்துபோகிறார்கள். இதனால் மனவேதனை அடையும் விவசாயி, இரட்டையர்களான அஸ்வினி தெய்வங்களை நோக்கி கடும் தவம் புரிந்து, தன் மகன்களை உயிருடன் திருப்பித் தருமாறு வேண்டுகிறார். அவருக்கு நேரில் காட்சி தரும் அஸ்வினிகள், “உன் இரண்டு மகன்களில் ஒருவனை மட்டும் தான் உயிர்ப்பிக்க முடியும்” என்று கூறி, ஒருவனுக்கு உயிர் கொடுத்து, “இயற்கையான மரணம் தவிர வேறு எதனாலும் இவன் உயிர் போகாது” என்ற வரத்தையும் கொடுக்கிறார்கள்.

மேலும், குதிரை முகமும் மனித உடலும் கொண்ட இரண்டு தங்கச் சிலைகளை அந்த விவசாயியிடம் கொடுக்கும் அஸ்வினிகள், ”இரண்டு சிலைகளையும் எப்போதும் சேர்த்தே வைத்திருக்க வேண்டும். பிரித்தால் ஒரு சிலை பாதாள அரக்கனின் கைக்குள் போய்விடும். அதன்பிறகு இந்த பூமி ராட்சச மனிதர்களால் சூழப்படும்” என்று எச்சரித்துவிட்டு மறைகிறார்கள்.

உயிர் பெற்ற சிறுவன், தனது சகோதரனை இழந்த சோகத்தில் இருக்கிறான். அவனிடம் வரும் ஒரு துஷ்டசக்தி, ”அந்த தங்கச் சிலைகளில் ஒன்றை எனக்குக் கொடுத்தால் உன் சகோதரனை பிழைக்க வைக்கிறேன்” என்று ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி, ஒரு சிலையை பிரித்து எடுத்துச் செல்கிறது. மேலும், நரகத்திலிருந்து ஒரு சாத்தானை வரவழைத்து அந்த ஊரில் வாழ வைக்கிறது. விளைவாக, சாபம் பெற்ற அந்த ஊரில் பலர் உயிரிழக்கிறார்கள்.

0a1l

லண்டனில், தனித்த தீவு ஒன்றில், பழமையான புராதன மாளிகை ஒன்று இருக்கிறது. தொல்லியல் ஆராய்ச்சியாளரான ஆர்த்தி (விமலா ராமன்), தனது உதவியாளர்களுடன் அந்த மாளிகையில் தங்கி, ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர் அந்த சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டு, தன் உதவியாளர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்கிறார். ஆர்த்தியின் உடல் மட்டும் மாயமாகிவிட, மற்றவர்களின் சடலங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்படுகின்றன.

இந்த அமானுஷ்ய மாளிகையில் நடந்த மர்மமான திகில் விஷயங்களைத் தெரிந்துகொண்டு, அந்த மாளிகையை வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிடுவதற்காக இந்தியாவிலிருந்து அர்ஜுன் (வசந்த் ரவி), ரித்விகா (சரஸ்வதி மேனன்), வருண் (முரளிதரன்), ராகுல் (உதயா தீப்) உள்ளிட்ட ஐந்து பேர் ஒரு குழுவாக லண்டன் வருகிறார்கள். அமானுஷ்ய மாளிகைக்குள் செல்லும் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை பார்வையாளர்களின் ரத்தம் உறையும் வகையில் திக்… திக்… திகிலுடன் சொல்லுகிறது ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

குறைந்த எண்ணிக்கையிலான நடிகர்களை வைத்து நிறைவான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தருண் தேஜா. படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களைத் தொற்றிக்கொள்ளும் திகில், கிளைமாக்ஸ் வரை சற்றும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்லும் வகையில் இயக்குனர் இப்படத்தை பிரமாதமாக நகர்த்தியிருக்கிறார். சிறப்பான மேக்கிங்கில் இயக்குனரின் தனித்துவம் பளிச்சிடுகிறது.

இந்த படத்தின் உண்மையான கதாநாயகன் என்றால் அது இசையமைப்பாளர் விஜய் சித்தார்த் தான். பின்னணியிசையால் பார்வையாளர்களை மிரட்டியிருக்கிறார். படம் பார்ப்பவர்களின் இதயத் துடிப்பு எகிறுவதற்கு அவரும், ஒலி வடிவமைப்பாளர்களான சச்சின் & ஹரியும் உழைப்பைக் கொட்டியிருப்பது தான் காரணம். அவர்களுக்கு நமது பாராட்டுகள்.

ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகாய் ஒளியமைப்பிலும், கேமரா கோணங்களிலும் புதுமைகளைப் புகுத்தி, இந்த ஹாரர் படத்தை உலகத் தரத்துக்கு உயர்த்தியிருக்கிறார்.

வித்தியாசமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் வல்லவரான வசந்த் ரவிக்கு, நடிக்க வாய்ப்புள்ள படம் இது. வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். அர்ஜுனாக அமானுஷ்ய மாளிகைக்குள் திகிலடைந்து, உறைந்து, தெளிந்து, அலறி, அதகளம் பண்ணியிருக்கிறார்.

ஆர்த்தியாக வரும் விமலா ராமன், ரித்விகாவாக வரும் சரஸ்வதி மேனன், வருணாக வரும் முரளிதரன், ராகுலாக வரும் உதயா தீப் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

’அஸ்வின்ஸ்’ – பயங்கரத் திகிலும், பயங்கர அனுபவமும் விரும்பும் அமானுஷ்ய விரும்பிகளுக்கு செம ஹாரர் விருந்து!