அஸ்திரம் – தி சீக்ரெட்: விமர்சனம்

நடிப்பு: ஷாம், நிரா, வெண்பா, நிழல்கள் ரவி, ஜீவா ரவி, விதேஷ் ஆனந்த், அருள் டி சங்கர், ரஞ்சித்.டி.எஸ்.எம் மற்றும் பலர்

இயக்கம்: அரவிந்த் ராஜகோபால்

ஒளிப்பதிவு: கல்யாண் வெங்கட்ராமன்

படத்தொகுப்பு: பூபதி

இசை: கே.எஸ்.சுந்தரமூர்த்தி

தயாரிப்பு: ‘பெஸ்ட் மூவிஸ்’ தன சண்முகமணி

வெளியீடு: ஃபைவ் ஸ்டார் செந்தில்

பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்

போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் நாயகன் அகிலன் (ஷாம்), ஊடகவியலாளராகப் பணிபுரியும் தன் மனைவி பிரியாவுடன் (நிரா) கொடைக்கானலில் வசித்து வருகிறார். தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்தபிறகு குழந்தையே இல்லை என்ற மனக்குறை இவர்களுக்கு இருந்துவருகிறது.

ஒருநாள். செயின் பறிப்புக் கொள்ளையன் ஒருவனைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் அகிலன் துரத்திச் செல்லும்போது, மறைவிலிருந்து அடையாளம் தெரியாத ஒரு நபர் துப்பாக்கியால் சுட, அகிலனின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்து காயம் ஏற்படுகிறது. சிகிச்சைக்குப்பின் அவர் விடுப்பில் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், அகிலன் வசிக்கும் ஏரியாவிலுள்ள பூங்காவுக்கு ஒரு நபர் வருகிறார். அவர் கையில் கத்தி இருக்கிறது. தொலைதூரத்திலுள்ள எதையோ சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் அவர், திடீரென கத்தியால் தன் வயிற்றில் குத்திக் கிழித்து, தற்கொலை செய்துகொள்கிறார்.

விடுப்பில் ஓய்வில் இருக்கும் இன்ஸ்பெக்டர் அகிலனுக்கு மேற்படி தற்கொலை விவகாரம் மீது ஆர்வம் ஏற்படுகிறது. இந்த வழக்கை, தான் புலனாய்வு செய்ய விரும்புவதாகக் கூறி, போலீஸ் உயர் அதிகாரியிடம் (அருள் டி சங்கர்) அனுமதி பெறுகிறார்.

இளம் போலீஸ் அதிகாரி சுமந்த் (ரஞ்சித்.டி.எஸ்.எம்) உதவியுடன் புலனாய்வைத் துவக்குகிறார் அகிலன். அப்போது வேறு இரண்டு ஊர்களில் வேறு இரண்டு நபர்கள் – சொல்லி வைத்தாற்போல் – அதே பாணியில் தங்கள் வயிற்றை தாங்களே கத்தியால் குத்திக் கிழித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வருகிறது. இதில் உள்ள வினோதம் என்னவென்றால், தற்கொலை செய்துகொண்ட மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதோ, வேறு எவ்வழியிலாவது தொடர்பு வைத்துக்கொண்டதோ கிடையாது. ஆனால், இவர்களுக்கு இடையிலான பொது அம்சம் – இவர்கள் நன்றாக செஸ் விளையாடும் திறமைசாலிகள் என்பது மட்டும் தான்.

புலனாய்வில் அகிலன் தீவிரமாக இருக்கும்போது, அவரது ’கல்லூரிக்கால கிளாஸ்மேட்’ என்று சொல்லிக்கொண்டு விஜய் என்பவர் அவரைப் பார்க்க அவரது வீட்டுக்கு வருகிறார். இந்த புலனாய்வு விவகாரத்தில் அகிலனுக்கு மட்டுமே தெரிந்திருந்த பல விஷயங்களை விஜய் மனப்பாடமாக ஒப்பிக்க, “இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்று அதிர்ச்சியுடன் அகிலன் கேட்கிறார். “இதற்கெல்லாம் மார்ட்டின் தான் காரணம்” என்று சொல்லும் விஜய், திடீரென்று கத்தியை எடுத்து தன் வயிற்றில் தானே குத்திக் கிழித்து தற்கொலை செய்துகொள்கிறார். அந்த நேரம் விஜயைத் தேடி வரும் இன்னொருவரும் அதே பாணியில் தற்கொலை செய்துகொள்கிறார்.

அகிலனின் வீட்டில் நடந்த இந்த தற்கொலைச் சம்பவங்களால் டென்ஷன் ஆகும் போலீஸ் உயர் அதிகாரி, இந்த வழக்கு விசாரணைகளில் இருந்து அகிலனை விடுவித்து, அவரை கட்டாய விடுப்பில் அனுப்புகிறார். பணியில் இல்லாத நிலையிலும், அகிலன் இந்த விவகாரத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.

அகிலனின் முயற்சி வெற்றி பெற்றதா? யார் அந்த மார்ட்டின்? அவருக்கும் அகிலனுக்கும் என்ன சம்பந்தம்? மர்மமான முறையில் ஒரே மாதிரி நடக்கும் இந்த தற்கொலைகளுக்கு காரணம் என்ன? இந்த விவகாரத்துக்கும் செஸ் விளையாட்டுக்கும் என்ன தொடர்பு? என்பன போன்ற பல கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பகளுடன் விடை அளிக்கிறது ‘அஸ்திரம் – தி சீக்ரெட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலனாக ஷாம் நடித்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உரிய மிடுக்குடனும், கம்பீரமான உடற்கட்டுடனும், நுட்பமான அறிவுடனும் குற்றச்செயல்களை புலனாய்வு செய்யும் வேடத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் விசாரணை செய்யும் விதமே அதிர்வை ஏற்படுத்துகிறது. சண்டைக் காட்சிகளில் சாகசம் செய்திருக்கிறார். குழந்தை இல்லாமல் வேதனைப்படும் தன் மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, தனியாக உருகும் காட்சியில் கண் கலங்க வைத்து விடுகிறார்.

நாயகியாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலனின் மனைவி பிரியாவாக நிரா நடித்திருக்கிறார். தாய்மைக்காக ஏங்குவது, மனமுடையும் கணவரை அரவணைத்துத் தாங்கி ஆறுதல் சொல்வது என அருமையாக நடித்து தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

நாயகனுக்கு புலனாய்வில் உதவும் இளம் போலீஸ் அதிகாரி சுமந்தாக ரஞ்சித்.டி.எஸ்.எம் நடித்திருக்கிறார். படம் முழுக்க வரும் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார். அவரது கர்ப்பிணி மனைவியாக வரும் வெண்பா அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

உளவியல் சிக்கலுக்கு ஆளான இளம் வில்லன் மார்ட்டினாக வரும் விதேஷ் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார். அவரது தந்தையாக, மகனைத் திருத்தவே முடியாமல் மாண்டுபோகும் ஜேம்ஸாக வரும் ஜீவா ரவி பார்வையாளர்களின் அனுதாபத்தை அள்ளுகிறார்.

போலீஸ் உயர் அதிகாரியாக வரும் அருள் டி.சங்கர், உளவியல் நிபுணராக வரும் நிழல்கள் ரவி உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

பண்டைய ஜப்பானில் அரசரின் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்யும் ராஜதுரோகிகளுக்கும், அரசரை செஸ் விளையாட்டில் தோற்கடிப்பவர்களுக்கும் எப்படிப்பட்ட தண்டனை வழங்கப்பட்டது என்பதை அடிப்படையாக வைத்து, தோல்வி மனப்பான்மையின் சைக்கோ விபரீதத்தை ’கிரைம் இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர்’ ஜானரில் திகிலாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். எழுத்தாளர் ராஜேஷ்குமார் பாணியிலான கிரைம் திரில்லர் நாவல் விரும்பிகளுக்குப் பிடிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், போகப்போக வேகத்தை அதிகரித்து, அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலுடன் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறார் இயக்குநர். சின்ன பட்ஜெட்டில் இவற்றையெல்லாம் சாதித்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுகள்.

கல்யாண் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவும், பூபதியின் படத்தொகுப்பும், கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும் இயக்குநரின் கதை சொல்ல்லுக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘அஸ்திரம் தி சீக்ரெட்’ – சுவாரஸ்யமான கிரைம் இன்வெஸ்ட்டிகேட்டிவ் திரில்லர்; பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3/5.