நேர்காணல் முடிந்தது: அ.தி.மு.க. அறிவிப்பு! அனைவருக்கும் வியப்பு!
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று சட்டப் பேரவைகளுக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பி விருப்பமனுத் தாக்கல் செய்தவர்களிடம், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடித்துவிட்டதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது அனைத்து அரசியல் நோக்கர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் வரும் மே 16ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் விருப்பமனுத் தாக்கலை முடித்து விட்டன.
அவ்வாறு விருப்பமனுத் தாக்கல் செய்தவர்களிடம் திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தற்போது நேர்காணல் நடத்தி வருகின்றன. ஆனால், விருப்ப மனுக்களைப் பெற்றதோடு அதிமுக அமைதி காக்கத் தொடங்கியது. நேர்காணல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், ஜெயலலிதா விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று மட்டும் கட்சி வட்டாரத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அதிமுக சார்பில் இன்று நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டதாக அதிமுக தலைமைக் கழக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது. அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முன்னிலையில் இன்று (6.3.2016 – ஞாயிற்றுக் கிழமை), தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் 16.5.2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு செய்திருந்த கழக உடன்பிறப்புகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஒப்புதலோடு இந்தச் செய்தி வெளியிடப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
பல ஆயிரம் பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஒரே நாளில் நேர்காணலை முடித்து விட்டதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்திருப்பது வியப்பளிப்பதாக உள்ளது.
வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை ஏற்கெனவெ தயார் செய்துவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அது வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 10ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதி சுபமுகூர்த்த தினங்களாக இருப்பதால் அன்றைய தினம் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.