மணப்பெண்ணை தேர்வு செய்யாமல் நழுவிய “எங்க வீட்டு மாப்பிள்ளை” ஆர்யா!
‘கலர்ஸ் தமிழ்’ என்ற புதிய தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான தொடர் நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. நடிகர் ஆர்யாவை மணக்க விரும்பும் 16 பெண்களிலிருந்து தனக்கு ஏற்ற மணப்பெண்ணை ஆர்யாவே தேர்ந்தெடுப்பது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது. நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் ஃபைனல், நேற்று (17-04-2018) இரவு ஒளிபரப்பானது.
கனடா வாழ் ஈழத்தமிழ் பெண் சுசானா, ஆர்யாவின் சொந்த மாநிலமான கேரளாவைச் சேர்ந்த அகதா, சீதாலட்சுமி ஆகிய மூவரும் இறுதிக்கட்ட போட்டியாளர்களாகக் களத்தில் நின்றனர். இந்த மூவரில் யாரை ஆர்யா தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதைக் காண அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டார் ஆர்யா.
“சுசானா, அகதா, சீதாலட்சுமி ஆகிய மூவரில் நான் யாரைத் தேர்ந்தெடுத்தாலும், மற்ற இரண்டு பேரும், அவர்களின் குடும்பத்தினரும் வருத்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படாத பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும். அதுவும் ஒரு மேடையில் இப்படிச் செய்ய எனக்கு மனம் வரவில்லை. கல்யாண மேடை போல இருக்கும் இங்கு, யாரையும் என்னால் வருத்தப்பட வைக்க முடியாது. நிச்சயம் என்னால் அதைச் செய்ய முடியாது.
எனக்கு இன்னும் நேரம் தேவை. கேமரா, மைக் இல்லாமல் இன்று முதல் தொடக்கமாகக் கொண்டு, வேறு வேறு வழிகளில் நாங்கள் தொடர்பில் இருப்போம்” என்று சொல்லி, யாரையுமே தேர்ந்தெடுக்காமல் நழுவி விட்டார் ஆர்யா.
ஆர்யாவின் இந்த முடிவை, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ‘இது முழுக்க முழுக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி. ஆர்யா ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வார் என்று நீங்கள் நினைத்திருந்தால், உங்களைப் போல முட்டாள் யாரும் இருக்க முடியாது’ என்று நெட்டிசன்கள் ‘எங்க வீட்டு மாப்பிளை’ நிகழ்ச்சியின் ரசிகர்களை கேலி செய்யும் வகையில் பதிவிட்டு வருகிறார்கள்