ஆரிய திராவிட இனவேறுபாடு என்பது பிரிட்டிஷ் உருவாக்கிய சூழ்ச்சியா?
‘ஆரிய திராவிட இனவேறுபாடு என்பது பிரிட்டிஷ் உருவாக்கிய சூழ்ச்சி’ என்று தமிழ்நாட்டு கவர்னர் ஆர் என் ரவி பேசி இருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகையில் இதை குறிப்பிட்டு இருக்கிறார். ‘அமெரிக்காவில் ஆதிகுடிகளை கொன்று குவித்தது போல பிரிட்டிஷால் நம்மைக் கொன்று போட முடியவில்லை. அதற்குக் காரணம் நாம் மிகவும் முன்னேறிய நாகரிகமாக இருந்தோம். எனவே, நம்மைப் பிரித்தாள்வதுதான் சரியான அணுகுமுறை என்று இந்த ஆரிய திராவிட கட்டுக்கதைகளை உருவாக்கி வைத்தார்கள்’ என்று சொல்லி இருக்கிறார்.
இதனை இந்துத்துவர்கள் ஆரம்பம் முதலேயே பேசிக் கொண்டு வந்திருக்கிறார்கள். இப்படி ஆரிய தியரியை மறுதலிப்பது அவர்களின் சித்தாந்தத்துக்கு முக்கியமான தேவையாக இருக்கிறது. காரணம், மத்திய ஐரோப்பாவில் இருந்து ஆரியர்கள் வந்தார்கள் என்றால் ’இந்தியா ஒரு புண்ணிய பூமி, இங்கேதான் வேதங்களும், உபநிடதங்களும், கணிதமும், வான சாஸ்திரமும் தழைத்தோங்கின, ரிக் வேதத்தில் ரிலேடிவிடி, அதர்வ வேதத்தில் அஸ்ட்ரோ ஃபிசிக்ஸ், கேனோ உபநிடதத்தில் குவாண்டம் மெகானிக்ஸ் உருவாக்கினோம்’ என்றெல்லாம் பீற்றிக்கொள்ள முடியாது. மத்திய ஐரோப்பிய ஆரிய வந்தேறிகள்தான் இதையெல்லாம் கொண்டு வந்தார்கள் என்று ஆகி விடும். அதுவுமின்றி முஸ்லிம்கள் படையெடுத்து வந்ததையும், பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு செய்ததையும் விமர்சிக்க முடியாது. ‘நீங்களே வந்தேறிகள்தானே’ என்று அவர்கள் சொல்லி வாயை அடைத்து விடுவார்கள். இந்தக் காரணங்களால் ஆரிய திராவிட தியரியை ஆரம்பம் முதலே இந்துத்துவர்கள் தெளிவாக எதிர்த்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் இந்துத்துவர்களின் இதர தியரிகள் போலவே இதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை. ஆரியக் குடியேற்றம் நடந்ததற்கு மனிதவியல்-, மொழியியல்-, கலாச்சார-, வரலாற்று-ரீதியான ஆதாரங்கள் ஏகப்பட்டது இருக்கின்றன. மத்திய ஐரோப்பாவில் இருந்து தெற்கு ஐரோப்பா, பண்டைய ஈரான், இந்தியா போன்ற இடங்களுக்கு குடியேறிய பழங்குடிகளின் கலாச்சார வழக்கங்களின் ஒற்றுமைகளை மனிதவியலாளர்கள் (anthropologists) மேப் போட்டு வரைந்து இருக்கிறார்கள். மொழியியல் ரீதியில் (linguist) பண்டைய ஈரானின் அவெஸ்தாவுக்கும் சமஸ்கிருதத்துக்கும் அதீத ஒற்றுமைகள் இருக்கின்றன. பண்டைய ஜெர்மானிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இருந்த ஒற்றுமை தற்செயல் அல்ல. போலவே கலாச்சார ரீதியில் மத்திய ஐரோப்பியவின் பேக்ட்ரியா நாகரிகக் கடவுளர்களுக்கும் (BMAC) வேதத்தில் வழிபடப்படும் கடவுளர்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் ஆச்சரியமூட்டுகின்றன. மத்திய கிழக்கு ஹிட்டைட் ராஜ்ஜியத்துக்கும் வேத குடிகளுக்கும் கூட பல ஒற்றுமைகளை கண்டிருக்கிறார்கள்.
போலவே, குதிரை இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட விலங்கு அல்ல. உக்ரைன், கஜக்ஸ்தான் பகுதிகளில் முதன் முதலில் மனிதன் வசம் வந்தது. ஆனால் ரிக் வேதம் முழுக்க குதிரையின் புகழ் பாடப்படுகிறது. இன்றைய உலகில் ஸ்மார்ட் ஃபோன் போல அப்போது குதிரை எனும் ‘தொழில் நுட்பத்தை’ ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஆச்சரியம் அவர்கள் எழுதிய வேதங்களிலும் எதிரொலித்தது. பழமையியல் (palaeology) ஆய்வுகள் மூலம் குதிரையின் மூலத்தைப் பிடித்துப் போய் மத்திய ஐரோப்பாவில் நின்றிருக்கிறார்கள்.
இதெல்லாம் போதாதென்று மரபணு ரீதியாகவும் ஆரிய, திராவிட ஜீன்களை பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். மத்திய ஐரோப்பாவில் இருந்து ஆரியர்கள் போன திசையெங்கும் அவர்களின் ஜீன் பயணித்திருப்பதை இந்த மரபணு பயணத்தின் மூலம் மிக எளிதாக காண முடிகிறது. ஆரியர்கள் போன இடங்கள் என்று வரலாற்று ரீதியாக போடும் வரைபடத்துக்கும் அவர்களின் மரபணு வரைபடத்துக்கும் உள்ள அதீத ஒற்றுமை தற்செயல் அல்ல.
எனவே, ஆரியக் குடியேற்றம் பண்டைய இந்தியாவில் நடந்தது என்பது ஒரு முடிவான விஷயம். A settled debate. அதற்கு ஆதரவாக ஒரு லாரி நிறைய ஆதாரங்கள் உள்ளன.
அதனை மறுதலிப்பவர்கள் சும்மாவெல்லாம் செய்ய முடியாது. தங்கள் வாதத்துக்கு ஆதரவாக ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அல்லது குறைந்தது கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் சொல்ல வேண்டும். ஆரியர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் எனில் குதிரையும் இந்தியாவின் பூர்வீக விலங்குதான், இங்கேதான் அது காட்டு விலங்காக இருந்து இங்கேதான் domesticate செய்யப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட குதிரையின் காட்டு மூதாதையரின் எலும்புக் கூடுகள் எப்படி கஜக்ஸ்தானில் கிடைக்கின்றன? வேதக்கடவுளர்களின் ரெஃபரென்ஸ்கள் பண்டைய ஐரோப்பிய நாகரிகங்களில் எதிரொலிப்பது எப்படி? பண்டைய அவெஸ்தா எப்படி சமஸ்கிருதம் போலவே இருக்கிறது? வேத சித்தாந்தங்களான ஜீவாத்மா, பரமாத்மா போன்ற dualism கருத்தியல்கள் மத்திய ஐரோப்பிய நாகரிகங்களிலும் எப்படி தென்படுகின்றன? ஆரிய மரபணு எப்படி ஈரான், இந்தியா, ஐரோப்பா என்று எங்கெங்கும் குதிக்கிறது? ஆரியர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்றால் அவர்கள் 1500 பொயுமுக்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
இதையெல்லாம் நிரூபிக்க வேண்டும். அல்லது விளக்க வேண்டும். குறைந்த பட்சம் அவற்றுக்கான அறிவியல் அனுமானங்களையாவது (hypothesis) வழங்க வேண்டும். ஆனால் தரவுகள், ஆதாரங்கள், அறிவியல் போன்ற சொற்களே கசப்புணர்வு கொடுக்கும் சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் இவர்கள். ஆதாரங்களைப் பற்றியெல்லாம் என்றைக்காவது கவலைப்பட்டு இருந்திருக்கிறார்களா, என்ன? ரிக் வேதத்தில் ரிலேடிவிடி, மகாபாரதத்தில் ஐவிஎஃப் தொழில் நுட்பம் என்ற போதெல்லாம் ஆதாரங்களைக் கொடுத்தார்களா? அமித் ஷா சொன்னது போல ‘பொய்யோ, நிஜமோ, துணிச்சலாக அடித்து விடுவதுதான்’ இவர்கள் வேலை.
அதே போன்ற அடித்து விடும் வேலையைத்தான் கவர்னர் செய்திருக்கிறார். இந்துத்துவம் ஒரு மூட சித்தாந்தம் என்பதற்கு கவர்னரின் இந்த உரை முக்கிய உரைகல்லாக விளங்கும்.
சோகங்களுடன்…
– ஸ்ரீதர் சுப்ரமணியம்
(ஆரியக் குடியேற்றம் பற்றி விரிவாக, ஆதாரங்களுடன் எனது புத்தகம் ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ பேசுகிறது. பிரதிக்கு Naan Rajamagal அவர்களை அணுகலாம்.)