சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழ் ஒலிக்க போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார். அவருக்கு வயது 94.

சிதம்பரம் அருகே உள்ள குமுடி மூலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனடியார் ஆறுமுகசாமி. இவர் பல ஆண்டுகளாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். மேலும், நடராஜர் தரிசன விழாவின்போது கோயிலில் அமர்ந்துகொண்டு தமிழில் தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என்ற துண்டறிக்கையை பக்தர்களுக்கு வழங்கி வந்தார். அவருக்கு ஆதரவாக பாமக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், மனித உரிமை பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சிதம்பரத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தின.

இதையடுத்து ஆறுமுகசாமி, தான் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி கடந்த 2008-ம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் மேளதாளம் முழுங்க தமிழ் உணர்வாளர்களுடன் சென்று தமிழில் தேவாரம் பாடினார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

திமுக ஆட்சியின்போது தமிழறிஞர் என்ற அடிப்படையில் இவருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவாக இருந்த இவர், கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று ஆறுமுகசாமி காலமானார். அவரது உடல் சொந்த ஊரான குமுடி மூலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று (ஏப். 9) மதியம் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.