வாழ்க்கையை வீடியோ கேமாக ஒருவன் பார்க்கையில் என்னவாகும்?

பிக் பாஸ் பிரதீப்!

ரெட் கார்ட் கொடுத்து பிரதீப், பிக் பாஸ் விளையாட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டார்.

இந்த சீசனில்தான் உரிமைக் குரல் எழுப்பலாம் என்கிற விதி புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. எனவே அந்த விதிக்கான பங்கேற்பாளராக பிரதீப் நியமிக்கப்பட்டு, தற்போது அது பயன்படுத்தப்பட்டு அவர் வெளியேற்றப்பட்ட set up ஆக கூட இருக்கலாம்.

ஆனால் பிரதீப் வந்த முதல் நாளிலிருந்தே அவர் மீது எனக்கு உவப்பு இருக்கவில்லை. விளையாட்டில் ஜெயிக்க வேண்டுமென்ற திட்டத்துடன் ஒவ்வொரு நிமிடமும் scheme செய்து கொண்டே இருப்பது, தன்னுடைய அறிவை நல்வழியில் பயன்படுத்தாமல் விதிகளை வளைக்கவும் விஷயங்களை திரிக்கவும் பயன்படுத்துவதென அவரின் toxicity-தான் முழுக்க முழுக்க இருந்தது.

பிரதீப்பின் இயல்புகளில் சில முக்கியமான பிரச்சினைகள் இருந்தன.

அவர் ஒரு வீடியோ கேமராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஒருமுறை பேசுகையில் கமலிடமே கூட, அங்கிருக்கும் மற்ற அனைவரையும் வீடியோ கேமில் வரும் பாத்திரங்களாக மட்டுமே பார்க்கிறேனெனக் கூறினார்.

வாழ்க்கையை வீடியோ கேமாக ஒருவன் பார்க்கையில் என்னவாகும்?

அனைவரையும் அழித்தொழிக்கப்பட வேண்டிய நபர்களாக மட்டுமே பார்ப்பான். எந்த நியாய தர்மமும் பார்க்காமல், எந்த எல்லைக்கும் சென்று அவர்களை வீழ்த்துவதே நோக்கமாக இருக்கும்.

PubG தொடங்கி பல கேம்களில் இதுதான் நிலை. நீங்கள் உயிர் வாழ வேண்டுமெனில் மற்ற அனைவரையும் போட்டுத் தள்ள வேண்டும் என்னும்போது ஒருவன் என்ன செய்வான்?

சில வருடங்களுக்கு முன் இணைய வழியில் விளையாடி எக்கச்சக்கமாக சம்பாதித்த ஒருவன், இணையத்தில் அசிங்கமான வார்த்தைகள் பேசி விளையாடியதாலும் பங்கேற்றவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாலும் பண மோசடி செய்ததாலும் கைது செய்யப்பட்டது நினைவில் இருக்கலாம்.

இவர்களை பொறுத்தவரை சக மனிதன் என்பவன் தங்களுடைய வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் manipulate செய்யப்பட மட்டுமே பிறந்தவன். பரிவு இருக்காது. அறம் இருக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வுலகிலேயே தான் மட்டும்தான் அறிவாளி என எண்ணும் போக்கு இருக்கும்.

விளையாட்டில் வெல்வதற்கென எந்த எல்லைக்கும் செல்வார்கள். சக மனிதனை காயப்படுத்தியும் கேவலமாக பேசியும் தனிப்பட்டு பேசிய ரகசியங்களை தடாலென அம்பலத்தில் உடைத்துமென எதை வேண்டுமானாலும் செய்வார்கள். கேட்டால் strategy என்பார்கள்.

மனிதத்துக்கு அடிப்படையான பரிவு, இரக்கம், அறம், ரெளத்திரம் போன்றவையும் கூட இயல்பாக இல்லாமல், இவர்களின் வெற்றிக்கு பயன்படுத்தப்படும் கருவிகளாக மட்டுமே பார்ப்பார்கள்.

இவர்களை போல் நாம் இருக்க முடியாது: இருக்கவும் கூடாது. நாம் ஒன்றும் இஸ்ரேல் கிடையாது அல்லவா!

இயற்கைத்தன்மையை மறுத்து, மனித விழுமியங்களை சிதைத்து, வெற்றி, அதிகாரம் போன்றவை மட்டுமே பிரதானமென தீர்மானித்து வாழ்க்கையை செயற்கையான வீடியோ கேமாக வாழும் செயற்கையான மனிதர்களுக்கு வெளியேற்றமே சிறந்த தீர்வு.

பிரதீப் ஒரு குறிப்பிட்ட தலைமுறையை சார்ந்தவர். அவருக்கு அகச்சிக்கல்கள் இருக்கலாம் என்பது போன்ற பேச்சுகள் அடிபட்டாலும் இந்த தலைமுறைக்கென சில வகை சிந்தனை மாற்றங்களும் மனம் இயங்கும் பாங்குகளும் உருவாகி இருக்கின்றன. அது முழுமையாக முதிர்ச்சி அடைந்திருக்கும் முதலாளித்துவ நுகர்வு மற்றும் தொழில்நுட்ப கலாசாரத்தின் மனப்பாங்கு!

Survival of the fittest என பேசும். அடுத்தவரின் துயரை சொன்னால் ‘Who cares?’ என்கும். தன் எல்லா அடிகளிலும் வெற்றிக்கு ஏங்கும். தன்முனைப்பு மட்டுமே சிந்தனை மொழியாக கொள்ளும். First Person Singular-ல் தான் உலகையே புரிந்து கொண்டு கொள்ளும். தனக்கு கிடைக்கும் எல்லா தகவல்களையும் அறிவாக பார்க்காமல் அடுத்தவனின் வாதத்தை உடைக்கும் கருவியாக மட்டுமே பாவிக்கும்.

மனிதம், அறிவு, கண்ணீர், பரிவு, அறம் யாவும் இவர்களுக்கு தங்களை முன்னேற்றிக் கொள்ள உதவும் கருவிகள் மட்டும்தான்.

பிக் பாஸ் உலகமல்ல. உலகத்திலுள்ள பிரதீப்களை வெளியேற்றிட முடியாது. நாம்தான் எச்சரிக்கை கொள்ள வேண்டும்.

RAJASANGEETHAN