“ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்க!”
“அண்ணன் – தம்பிகளாய் பழகிவரும் இந்து – முஸ்லிம் சமுதாயத்தில் பிளவு உண்டாக்கி தமிழ்நாட்டைச் சுடுகாடாக மாற்ற முயற்சிக்கும் ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மாநிலத்தில் அமைதி ஏற்படுத்த வேண்டும்” என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் எம்.முஹம்மத் யூசுஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.
இன்று (28.09.2016) அன்று சென்னை தி.நகரில், சசிகுமார் படுகொலைக்கு கண்டனம் என்ற பெயரில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. தேசியச் செயலர் ஹெச்.ராஜா, வன்முறை கருத்துக்களைப் பேசியிருக்கிறார்.
தங்களது ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.
பொதுவாக சந்தர்ப்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுதான் போராட்டங்களுக்கு அனுமதியளிப்பது வழக்கம். எத்தனையோ முஸ்லிம் சமுதாயப் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்படி மறுக்கப்படும்போதெல்லாம் சட்டத்துக்கு கட்டுப்பட்டு முஸ்லிம்கள் கைதாகியுள்ளனர்.
கோவையில் முஸ்லிம்களின் கடைகளைச் சூறையாடிய கும்பல் அதே காரணத்துக்காக அனுமதி கேட்கும்போது அனுமதி மறுப்பதை இவர் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்து ஆம்பூரில் நடந்த வன்முறையில் முஸ்லிம்களுக்கு சாதகமாக அரசு நடந்து கொள்வதாக ஆதாரமற்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஆம்பூர் கலவரத்தால் காவல்துறைக்கும்,பொதுமக்களுக்கும் ஏற்பட்ட சேதத்தைக் கவனத்தில் கொண்டு காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மறுநாள் கடுமையான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர். ரம்ஜான் பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் உயர்நீதி மன்றத்தில் தான் ஜாமீன் பெற்று இன்று வரை வழக்கை சந்தித்து வருகின்றனர்.
கோவையில் வெறியாட்டம் நடத்திய இந்துத்துவா அமைப்புக்கு எதிராக மறுநாள் நடவடிக்கை எடுக்கப்பட்டது போல் தான் ஆம்பூர் கலவரத்துக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த உண்மையை மறைத்து மதவெறியைத் தூண்டுகிறார்.
டிஎன்டிஜேயின் ஒரு தலைவர் பேசிய வீடியோவின் முழுப்பகுதியையும் கூறாமல் ஒரு குறிப்பிட்ட வாசகத்தை மட்டும் எடுத்துக் கூறி அவரை இந்துக்களின் எதிரி போல் சித்தரிக்க முயல்கிறார். இலட்சக்கணக்கில் தொண்டர்கள் திரண்டாலும் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்து நடப்போம் என்ற ரீதியில் கூறப்பட்ட அந்தப் படக்காட்சி செய்தியை திரித்து மத வன்முறையைத் தூண்டும் விதத்தில் பத்திரிகையாளர்களிடையே பேசியிருக்கிறார் ஹெச். ராஜா.
இவ்வாறு விஷ விதைகளைத் தூவுவதும், அவ்வாறு பேசியதை பின்னர் மறுப்பதும் இவருக்கு கை வந்த கலை என்பதை இவரது முந்தைய வரலாற்றை அறிந்தவர்கள் அறிவர்.
அண்ணன் – தம்பிகளாய் பழகிவரும் இந்து – முஸ்லிம் சமுதாயத்தில் பிளவு உண்டாக்கி தமிழ்நாட்டைச் சுடுகாடாக மாற்ற முயற்சிக்கும் ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மாநிலத்தில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசிற்கும், காவல்துறைக்கும் கோரிக்கை வைக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.