“என்னையும் என் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள்”: பேரறிவாளன் தாயார் உருக்கம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, சொல்லொண்ணா வேதனையில் வாடும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்  ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். இது குறித்து தகவல் வெளியானதும், விடுதலைக்காக காத்திருந்த 7 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.

0a1b

இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

19 வயதில் என் மகனை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 27 ஆண்டுகளாக எனது மகனின் விடுதலைக்காக சட்டப்படி போராடி வருகிறேன். எனது மகனின் இளமைக் காலம் சிறையிலேயே கழிந்து விட்டது. எனது மகன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். தற்போது, 7 பேரை விடுவிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாத்மா காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 14 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். எந்தத் தவறும் செய்யாத எனது மகன் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருவது வேதனையை அளிக்கிறது. இதற்கு, எனது மகனை அன்றே தூக்கில் போட்டிருக்கலாம்.

பாதிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் குடும்பத்தாரும் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் மன்னித்து விட்டதாகக் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்த்த 7 பேரின் குடும்பத்தாருக்கு குடியரசுத் தலைவரின் முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, என்னையும் எனது மகனையும் கருணை கொலை செய்துவிடுங்கள் என மத்திய, மாநில அரசுகளிடம் மனு அளிக்க உள்ளேன்.

இவ்வாறு அற்புதம்மாள் உருக்கமாகக் கூறினார்.