ஆர் யூ ஓகே பேபி? – விமர்சனம்
நடிப்பு: சமுத்திரகனி, அபிராமி, லட்சுமி ராமகிருஷ்ணன், மிஷ்கின், ஆடுகளம் நரேன், பாவல் நவநீதன், முல்லையரசி, வினோதினி வைத்தியநாதன், கலைராணி, ரோபோ சங்கர், அசோக், அனுபமா குமார் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: லட்சுமி ராமகிருஷ்ணன்
ஒளிப்பதிவு: கிருஷ்ணசேகர் டிஎஸ்
படத்தொகுப்பு: சிஎஸ் பிரேம்குமார்
இசை: இளையராஜா
தயாரிப்பு: ‘மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ்’ டாக்டர் ராமகிருஷ்ணன்
தமிழக வெளியீடு: ‘ஒய்ட் கார்பெட் ஃபிலிம்ஸ்’ கே.விஜய் பாண்டி
பத்திரிகை தொடர்பு: சதீஷ் (டீம் எய்ம்)
பிரஸ் ஷோவில் இந்த படத்தைப் பார்த்துவிட்டு, தாய்மையை எண்ணி நெகிழ்ந்து, கனத்த இதயமும் பனித்த கண்களுமாய் நான் வெளியே வந்தபோது, என் சிறுவயதில் நான் கேட்ட மன்னன் சாலமன் சம்பந்தப்பட்ட குட்டிக்கதை ஒன்று மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. அது எல்லோருக்கும் தெரிந்த, எக்காலத்துக்குமான குட்டிக்கதை…
மன்னன் சாலமனின் அரசவையில் ஒரு குழந்தை கிடத்தப்பட்டிருக்கிறது. அந்த குழந்தை தன்னுடையது என்று இரண்டு பெண்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். ஒரு பெண், அந்த குழந்தையைப் பெற்றவள். இன்னொருத்தி குழந்தை பெற்றெடுக்கவே இயலாதவள். இந்த இருவரில் குழந்தையின் உண்மையான தாய் யார் என்பதைக் கண்டறிய மன்னன் புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்கிறான். “இரண்டு பேரும் கேட்பதால், குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாக கொடுத்து விடலாம்” என்கிறான். இதைக் கேட்டு குழந்தையின் உண்மையான தாய் அதிர்கிறாள். பதறுகிறாள். குழந்தை கொல்லப்படாமல் எங்காவது உயிருடன் இருந்தால் போதும் என்று மனதைக் கல்லாக்கிக்கொண்டு ஒரு முடிவெடுக்கிறாள். குழந்தை தன்னுடையது என்று உரிமை கோருவதைக் கைவிடுகிறாள்… இப்படிப் போகும் அந்த குட்டிக்கதை.
இங்கே, ‘ஆர் யூ ஓகே பேபி?’ திரைப்படத்திலும், ’குழந்தை யாருக்கு?’ என்பது தான் மையப் பிரச்சனை. ”குழந்தை எனக்குத் தான் சொந்தம்” என்கிறாள் கருத் தரித்து, வயிற்றில் சுமந்து, பெற்றெடுத்த உயிரியல் (BIOLOGICAL) தாய். ”இல்லை, குழந்தை எனக்குத் தான் வேண்டும்” என்கிறாள், தத்தெடுத்து தாய்ப்பாலூட்டி வளர்த்த வளர்ப்புத் தாய். விவகாரம் நீதிமன்றம் செல்கிறது. பல்வேறு சட்ட சிக்கல்கள் குறுக்கிடுகின்றன. இதனால்,”குழந்தை இருவருக்கும் இல்லை. அநாதைகள் இல்லத்தில் ஒப்படைத்து விடலாம்” என்ற முடிவுக்கு வருகிறார் நீதிபதி. தன் குழந்தை அனாதையாக காப்பகத்தில் வளருவதை நினைத்தும் பார்க்க இயலாத உயிரியல் தாய், சாலமன் கதையில் வரும் உண்மையான தாயைப் போல, மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு முடிவெடுக்கிறாள். அந்த முடிவு எந்த கல்நெஞ்சக்காரனையும் கண் கலங்கச் செய்து விடும்.
இது ஒருபுறம் இருக்க, ‘ஆர் யூ ஓகே பேபி?’ படக்கதை என்னவென்றால், சென்னையில், சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி அலையும் குடிகார ஊதாரி இளைஞர் அசோக். அவருடைய காதலி முல்லையரசி. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல், ‘லிவ்விங் டுகெதர்’ முறையில் தம்பதியாக சேர்ந்து வாழ்கிறார்கள்.
அப்படி சேர்ந்து வாழ்கிற ஆறு ஆண்டுகளில், ஐந்து முறை முல்லையரசிக்கு கருக்கலைப்பு செய்ய நேரிடுகிறது. அதன்பின் மறுபடியும் கர்ப்பமடையும் அவர், நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், கருக்கலைப்பு செய்ய இயலாமல் கருவைச் சுமந்தே தீர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். இதை நினைத்து கலங்கும் முல்லையரசி தன் வறுமை நிலை பற்றியும், குழந்தையை தன்னால் வளர்க்க இயலாது என்பது பற்றியும் நர்ஸ் வினோதினி வைத்தியநாதனிடம் கூறுகிறார். அவருக்கு ஆறுதல் கூறும் வினோதினி, “கவலைப்படாதே. குழந்தை பிறந்ததும் அதை குழந்தை இல்லாத பெற்றோருக்கு தத்து கொடுத்து விடலாம். அதற்கு பணமும் வாங்கித் தருகிறேன்” என்கிறார். இதை ஏற்றுக்கொள்ளும் முல்லையரசி சில மாதங்களுக்குப் பின் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார்.
குழந்தையின் முகத்தைக்கூட முல்லையரசிக்குக் காட்டாமல் அதை தூக்கிச் செல்லும் நர்ஸ் வினோதினி, கேரளாவில் குழந்தை இல்லாமல் தவிக்கும் பணக்கார தம்பதியான சமுத்திரகனி – அபிராமிக்கு, பணத்தைப் பெற்றுக்கொண்டு தத்து கொடுத்து விடுகிறார். சமுத்திரகனியும், அபிராமியும் குழந்தை மீது அபரிமிதமான பாசத்தைக் கொட்டி வளர்க்கிறார்கள். குழந்தை தன் பாலைக் குடித்து வளர வேண்டும் என்று ஆசைப்படும் அபிராமி, அதற்காக ஹார்மோன் சிகிச்சை பெற்று, பால் சுரக்கச் செய்து, அதை குழந்தைக்கு ஊட்டி மகிழ்கிறார்.
சில நாட்களுக்குப் பின் குழந்தையை நினைத்து ஏங்கித் தவிக்கும் முல்லையரசி தன் தவறை உணருகிறார். குழந்தை தனக்கு வேண்டும் என்று துடிக்கிறார். இதற்கிடையில் நர்ஸ் வினோதினி துபாய்க்கு சென்று விட்டதால், என்ன செய்வதென்று தெரியாத முல்லையரசி, தன் குழந்தையை மீட்டுத் தருமாறு குழந்தைகள் நல வாரியத்திடம் புகார் கொடுக்கிறார். புகார் காவல்துறைக்குச் செல்கிறது.
இந்த தகவலை அறிந்த ஒரு டிவி சேனல், குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் ‘சொல்லாததும் உண்மை’ என்ற நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் முல்லையரசியின் பிரச்சனையை ஒப்படைத்து, அது பற்றி நிகழ்ச்சி நடத்தச் சொல்லுகிறது. முல்லையரசியை வரவழைத்து நேரலையில் விசாரணை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த விவகாரத்தில் சட்டச் சிக்கலும், வாழ்க்கைச் சிக்கலும் நிறைய இருப்பதால் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி, நிகழ்ச்சியை முடித்துக்கொள்கிறார்.
பிரச்சனை நீதிமன்றம் செல்கிறது. ”குழந்தை எனக்கு வேண்டும்” என்கிறார் முல்லையரசி. ”இல்லை, எனக்குத் தான் வேண்டும்” என்கிறார் அபிராமி. இந்த பாசப் போராட்டத்தில் நிறைய சிக்கல்கள் இருப்பதால், ”குழந்தை இருவருக்கும் இல்லை. அநாதைகள் இல்லத்தில் ஒப்படைத்து விடலாம்” என்ற முடிவுக்கு வருகிறார் நீதிபதி. தன் குழந்தை அனாதையாக காப்பகத்தில் வளருவதை நினைத்தும் பார்க்க இயலாத முல்லையரசி, மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு முடிவெடுக்கிறார். அந்த முடிவு எந்த கல்நெஞ்சக்காரனையும் கண் கலங்கச் செய்து விடும்.
கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முல்லையரசி அனைத்து வகை உணர்வுகளையும் நேர்த்தியாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். தப்பான ஒரு நபரை லிவ்விங் டுகெதர் கூட்டாளியாக தேர்ந்தெடுத்ததால் அவதிப்படுவது, இருந்தும் சேர்ந்து வாழ்வதற்காக அவரது காலைப் பிடித்து கெஞ்சுவது, பெற்ற குழந்தையை பிரிந்து ஏங்கித் தவிப்பது, இறுதியில் அக்குழந்தையின் நல்வாழ்வுக்காக துணிந்து முடிவெடுப்பது என நடிக்கக் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார். அவருடைய பழந்தமிழரின் நிறம் அவருக்கு பிளஸ்.
முல்லையரசியின் ஊதாரிக் காதலனாக வரும் அசோக், பார்வையாளர்களின் கோபத்தை சம்பாதிக்கும் அளவுக்கு நன்றாக நடித்திருக்கிறார்.
திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் தவித்து, பின்னர் முலையரசியின் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் அன்பான கேரள தம்பதியாக வரும் சமுத்திரகனியும் அபிராமியும் வழக்கம் போல தங்களது அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குழந்தை கைக்குக் கிடைத்தவுடன் பூரிப்பதும், அது கையைவிட்டு போய்விடுமோ என்ற நிலை வரும்போது பதறுவதுமாக உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார்கள்.
’சொல்லாததும் உண்மை’ நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், ‘சொல்வதெல்லாம் உண்மை’ லட்சுமி ராமகிருஷ்ணனாகவே வந்து யதார்த்தமாக நடித்திருக்கிறார். அவர் தன்னைத் தானே கலாய்ப்பது போல் “போலீஸை கூப்பிடுவேன்” என்று சொல்லும்போது திரையரங்கமே சிரிப்பலையில் மிதக்கிறது. அவரை துச்சமாக நினைக்கும் நிகழ்ச்சி இயக்குனராக வரும் பாவல் நவநீதன், காமிராவுக்குப் பின்னால் நடக்கும் ஈகோ மோதலை துல்லியமாக சித்தரித்திருக்கிறார்.
இவர்களைத் தவிர குழந்தைகள் நல வாரியத் தலைவராக வரும் மிஷ்கின், நீதிபதியாக வரும் ஆடுகளம் நரேன், தத்தெடுத்த பெற்றோர் சார்பில் வாதாடும் வழக்கறிஞராக வரும் அனுபமா குமார், நர்ஸாக வரும் வினோதினி வைத்தியநாதன், கோமாளித்தனமான கொலைகாரனாக வரும் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்கள்.
குழந்தையை தத்து கொடுக்கும் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன். இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான கதைக்கருவை உருவாக்கி, அவசியமான கதாபாத்திரங்களைப் படைத்து, சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, பொருத்தமான நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து, அவர்களை வேலை வாங்கி, நல்லதொரு படைப்பாக இதை கொடுத்திருக்கிறார். இயக்குனருக்கு நம் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் இயக்குனரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
‘ஆர் யூ ஓகே பேபி’ – அனைத்துத் தரப்பினரும் பார்த்து கொண்டாட வேண்டிய படம்!