“முதலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் 10 பிள்ளைகள் பெறட்டும்”: கெஜ்ரிவால் நெத்தியடி!
ஆக்ராவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எந்த சட்டம் இந்துக்களின் ஜனத்தொகை அதிகரிக்கக் கூடாது என்று கூறுகிறது? அப்படி ஏதும் இல்லை. மற்ற சமூகத்தின் ஜனத்தொகை அதிகரிக்கும்போது இந்துக்களை எது தடுக்கிறது? இது அரசு எந்திரத்திற்கு தொடர்பான பிரச்சனை அல்ல. இது போன்ற சமூக சூழலால் ஏற்பட்ட பிரச்சனை” என்று கூறியிருந்தார். மேலும், “இந்துக்கள் அனைவரும் 10 குழந்தைகளை பெற வேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கு பதிலளிக்கும் வகையில், ”இந்துக்களை தூண்டிவிடுவதற்கு முன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 10 குழந்தைகளை பெறட்டும். அந்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கட்டும்” என்று நெத்தியடியாய் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் கூறுகையில், “மோகன் பகவத்திடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? தனது ஒவ்வொரு பேச்சிலும் சமூகத்தை பிளவுபடுத்தும் கருத்துக்களையே அவர் பேசுகிறார். வளர்ந்துவரும் வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு குறித்து அவர் பேசி இருக்க வேண்டும். ஆனால், அவர் அதனை செய்ய மாட்டார்” என்றார்.