ஜோதிமணி விவகாரம்: ஜெயிக்கப் போவது கருணாநிதியா? ராகுல் காந்தியா?
ராகுல் காந்தியின் ஆதரவு பெற்றவர் ஜோதிமணி. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர். காங்கிரஸ் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பார்வையாளர்களை பயமுறுத்திவந்த விஜயதாரணி ஓரங்கட்டப்பட்ட பிறகு, சின்னத்திரையில் அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடர்பவர். சுமார் 9 மாதங்களுக்கு முன்பு, திமுக – காங்கிரஸ் கூட்டணி உருவாவதற்கு முன்பே, “நான்தான் அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்” என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்டு வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடங்கியவர்.
“ஆர்வக்கோளாறால் ஜோதிமணி இப்படி செய்கிறார். இதை அவர் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பகிரங்கமாக அறிவுறுத்தினார். ஆனால் மத்திய தலைமைக்கு நெருக்கமானவர்கள் மாநிலத் தலைமையை ஒருபொருட்டாக மதிக்கத் தேவையில்லை என்ற காங்கிரஸ் கலாச்சாரப்படி, இளங்கோவனின் அறிவுறுத்தலுக்கு ஜோதிமணி செவி சாய்க்கவில்லை. அரவக்குறிச்சியில் தொடர்ந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.
இந்நிலையில், தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுக்கு 41 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கியிருக்கிறது. அந்த பட்டியலில் அரவக்குறிச்சி இல்லை. அத்தொகுதியை தி.மு.க. தனக்கென வைத்துக்கொண்டது.
பட்டியல் வெளியிடப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே ஜோதிமணிக்கு அரவக்குறிச்சி தொகுதியை தி.மு.க.விடமிருந்து பெற்றுத் தர ராகுல் காந்தி தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார். ஆனால் தி.மு.க. தலைமை அசைந்து கொடுக்கவில்லை.
ஜோதிமணியும் விடுவதாக இல்லை. “அரவக்குறிச்சி என் சொந்த தொகுதி. அந்த தொகுதி நிச்சயம் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து செய்து வருகிறேன். அரவக்குறிச்சி தொகுதி கட்டாயம் எனக்குதான் என்று ராகுல் காந்தி உறுதிபட கூறினார். ஆனால், தற்போது அந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. இது பற்றி காங்கிரஸ் தலைமையிடம் மீண்டும் பேசுவேன். ராகுல் காந்தி அரவக்குறிச்சி தொகுதியை எனக்கு பெற்றுத்தருவார். காங்கிரஸ் தலைமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, அரவக்குறிச்சி தொகுதியில் என் தேர்தல் பணிகள் வழக்கம்போல தொடரும்” என்கிறார் ஜோதிமணி.
ஆனால், “ராகுல் காந்தி எத்தனை அழுத்தம் கொடுத்தாலும் அரவக்குறிச்சி தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்கிறது தி.மு.க. தரப்பு. “கடந்த தேர்தலில் தி.மு.க.வின் முக்கிய பிரமுகரான கே.சி.பழனிச்சாமி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி அது. அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்திருக்கிறார். மேலும், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இத்தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறார். எனவே இந்த தொகுதியை தி.மு.க. சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதிக்கு உட்பட்ட அரவக்குறிச்சியில் 4ஆயிரம் வாக்குகள் வாங்கிய நோட்டாவைவிட, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி மிகக் குறைவாக வெறும் 2ஆயிரம் வாக்குகள் தான் வாங்கினார். எனவே, காங்கிரசுக்கு இந்த தொகுதியை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்கிறது அது.
“பெட்ரூமாஸ் லைட்டே தான் வேணும்” என்பது போல, “அரவக்குறிச்சிதான் வேணும்” என்று அடம்பிடிக்கும் ஜோதிமணி விவகாரத்தில் ஜெயிக்கப் போவது கருணாநிதியா? ராகுல் காந்தியா?
பொறுத்திருந்து பார்ப்போம்.